Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #18

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

maayapura part 18

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

இணைந்து இருப்பதை விடப்  பிரியும் போதுதான், எந்த ஒன்றும் புதிய பரிணாமம் பெறுகிறது. இமைகள் இரண்டும் இணைந்திருக்கும் போது தூக்கமும் கனவுகளும் மட்டும்தான் இருக்கும். அதே இமைகள் பிரியும்போது, விழித்திரையில் காட்சிகள் விரிகின்றன.

 

சிப்பி பிரியும் போது அதனுள் இருக்கும் சுடர் வீசும் முத்துகள் கிடைக்கின்றன. மேகங்கள் பிரியும்போது மழையாகப் பொழிகிறது. தண்டவாளங்கள் பிரியும் போது வேறு ஒரு புதிய பாதை கிடைக்கிறது. உயிரினத்தில் ஆண் பெண் என்ற பிரிவினையால் தான் உயிர்கள் பல்கிப் பெருகுகின்றன. நெல்லும் உமியும்  பிரிந்தால்தான் அரிசி ஆகிறது. பெண்ணின் கருப்பை வாய் பிரியும் போதுதான் புதிய உயிர் ஜனனம் ஆகிறது. 

 

அன்பு கொண்ட இரண்டு உள்ளங்கள் பிரியும்போது நினைவுகளால் அங்கு அன்பு அதிகமாகிறது. உடன் இருப்பவர்களை யாரும் நலமா? என்று விசாரிப்பது இல்லை.  பிரிந்தவர்களைத் தான் அன்புடன் நலம் விசாரிப்போம்.

 

இந்த அடிப்படை உண்மை தெரியாத தங்கம், அசோக்கையும் சங்கவியையும் பிரிப்பதற்காக அவர்கள் இருந்த அறைக்கதவை ‘டமடம’ என்று தட்டினாள். மாமியார்களின் தப்பான கணக்கு என்ன தெரியுமா? மருமகள் மகிழ்வாக இருக்க கூடாது என்பதுதான். இதனால் மகனும் கஷ்டப்படுவானே என்ற விஷயம் ஏனோ அவர்களுக்குப் புரிவதில்லை. 

 

தங்கத்தின் எண்ணம், சங்கவி சந்தோஷமாக வாழக் கூடாது. தன் அண்ணன் மகளுக்குக் கிடைக்காத மகிழ்ச்சி, சங்கவிக்கு கிடைக்கக் கூடாது. ஆனால் சங்கவியின் மகிழ்ச்சியில் தன் மகனின் மகிழ்ச்சியும் அடங்கியிருக்கிறது என்பதை அவள் உணரவில்லை.

 

அசோக், சங்கவி இருவரும் கதவைத் திறந்தார்கள். சங்கவியைப்  பார்த்ததும் ’இவள் மட்டும் எப்படி எப்போதும் புத்தம் புதிய ரோஜா மாதிரி இருக்கிறாள். இரவு பத்து மணிக்குக் கூட இவள் முகத்தில் சோர்வு தெரியவில்லையே... அந்த உதடுகள் எப்போதும் புன்னகையைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறதே’  என்று ஆச்சரியப்பட்டாள்.

"என்னம்மா.. என்ன ஆச்சு ?"என்று பதட்டமாகக் கேட்டான் அசோக். மகன் மீது இருந்த கோபத்தை, வெறுப்பாக உருமாற்றி இருந்தாள் தங்கம். அந்த வெறுப்பு சேர்ந்த குரலுடன் "இன்னிக்கு ராத்திரி நீ, பருத்திக் காட்டுக்குப் போய் தண்ணிப் பாய்ச்சிட்டு வரணும்ன்னு மணி சொல்லச் சொன்னான்.” என்று கூறிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து சென்றாள். 

 

சங்கவி முகம் மாறியது. அசோக் பிரிகிறானே என்று அல்ல. இந்த இரவு நேரத்தில் வயக்காட்டுக்குச் சென்றால், பூச்சி பொட்டு இருந்தால் என்ன செய்வது என்று பயந்தாள்.

 

சங்கவிக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்திவிட்டு, தலையில் முண்டாசைக் கட்டிக்கொண்டு கையில் டார்ச் லைட்டையும் ஒரு பெரிய தடியையும் எடுத்துக் கொண்டு வயக்காட்டுக்குக் கிளம்பினான் அசோக். மணியின்  அறையைத் தாண்டும்போது உள்ளே பேச்சுக் குரல் கேட்டது. சங்கவி பாவம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அசோக்.

 

வெளித் திண்ணையில் படுத்திருந்த செல்வம் "அசோக், எங்கடா.. இந்த நேரத்தில் கிளம்பிட்ட? " என்று சற்று அதட்டலாகக் கேட்டார்.

"நமக்கு ராத்திரி கரண்ட் பா. அதான் பருத்திக்காட்டுக்குத் தண்ணீர் இறைக்கப்  போறேன்" என்று அசோக் அமைதியாகச் சொன்னான். 

"அதுக்கு நீ ஏன்டா போற" என்ற செல்வத்திடம்," வேற யார் போறதாம். நம்ம வீட்ல 10 ஆம்பளைங்களா இருக்காங்க?" என்று தன் இயலாமையைப் புலம்பினான் அசோக்.

"கூறு கெட்டவனே புதுசா கல்யாணமான பயல் ராத்திரி நேரத்தில் முண்டாசு கட்டிக்கிட்டு வயலுக்குப் போறானாம்.  நான் போறேன்டா. நீ உள்ள போ" என்று மகனை அன்புடன் கடிந்தார் செல்வம். 

"அதெல்லாம் ஒன்னும் வேணாம். வயசான காலத்துல வீட்ல இருங்க" என்றான் அசோக் .

"எட்டடி  நடந்தா எறப்பு வாங்குதாம்,பத்தடி நடந்தா படபடக்குதாம், காமாலை கண்ணுல பேயா தெரியுதாம். எங்க வீட்டு பயில்வானுக்கு. பத்து ஏக்கர் நிலத்தில பட்டி  போட ஆசையாம்" என்று பக்கத்துத் திண்ணையில் படுத்திருந்த தனம் பாட்டி எகத்தாளம் பேசினாள்.

"பாட்டி சொல்றது உண்மைதான். நீங்க ஏன்பா இருட்டில் கஷ்டப்படணும்?’ என்று கூறிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் விரைவாக  நடந்தான் அசோக். 

 

விடியற்காலை 3 மணிக்கு  வீட்டுக்குத் திரும்பி வந்த அசோக் உடல் சோர்வில் அப்படியே தூங்கிவிட்டான். அவன் வந்ததும் விழித்த சங்கவி, தொடர்ந்து வீட்டு வேலை செய்ய ஆரம்பித்து விட்டாள். 

 

தூங்கி எழுந்ததும் முதலில் கொல்லைப்புறக் கதவைத் திறக்க வேண்டும் என்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அப்பதான் வீட்டில் இருக்கிற மூதேவி கொல்லைபுறம்  வழியாக வெளியே போகும் என்று சொல்வார்கள். சங்கவிக்கு அவங்க டீச்சர் சொன்னது அந்த காலத்தில் கொல்லைப்புறத்தில் நிறைய தாவரங்கள் இருக்கும். இரவெல்லாம் அடைத்திருந்த வீட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும். கொல்லைப்புற கதவைத் திறக்கும்போது தாவரங்களிலிருந்து ஆக்ஸிஜன் வீட்டிற்குள் வரும். அதனால் தூங்கி எழுந்ததும் கொல்லைப்புற கதவைத் திறக்க வேண்டும் என்றது நினைவுக்கு வந்தது. கதவை திறந்து தொழுவத்தில் இருந்த சாணத்தை அள்ளிக் கொட்டி, விட்டு வாசல் தெளித்து, வேலைகளைப் பரபரப்பாகத் தொடங்கினாள் சங்கவி.

"சங்கவி குளிப்பதற்கு அடுப்புல வெந்நீர் இருக்கா?" என்று கேட்டுக்கொண்டே 7 மணிக்கு அறையை விட்டு வெளியே வந்தாள் மூத்த மருமகள் மல்லிகா.

 

மல்லிகா ஒன்றும் பன்னீரில் குளித்து பாதாம் பிஸ்தா சாப்பிட்டு வளர்ந்தவள் இல்லை. தங்கத்தின் மாம்பாக்கம் ஊருக்கு பத்து கிலோமீட்டர் வடக்கால, மானூர் என்றால் தெற்கால பத்து கிலோமீட்டர் மாமண்டூர். அவ்வளவு தான். வாழ வந்த இடத்தில் ஒரு பொண்ணுக்கு செல்வாக்கு என்பது அவள் புருஷனுக்கு கிடைக்கிற மரியாதையைப் பொறுத்து இருக்கிறது. இந்த வீட்டின் முடிசூடா ராஜா, மணி என்பதால் மல்லிகாவும் ராணியாக வாழ்கிறாள். மணிக்கு இருக்கும் ஒரே தகுதி இந்த வீட்டின் மூத்த பிள்ளை என்பதுதான்.

"அக்கா.. வெந்நீர் ரெடியா இருக்கு குளிங்க"  என்ற சங்கவியை ஏற இறங்கப் பார்த்தாள் மல்லிகா. மஞ்சள் முகம் பளபளக்க அதில் சின்னதாக் குங்குமப்பொட்டு, லேசான சந்தனக் கீறல். சங்கவி சிவப்பு நிறம் என்பதால் மஞ்சள் கலவையில் முகம் மின்னியது. மல்லிகா பொறாமையில் பெருமூச்சுவிட்டாள்.

"கரும்பு வெட்டணும் . இப்பதான் லட்ச லட்சமா செலவு பண்ணி கல்யாணம் முடிச்சேன். கரும்பு வெட்ட பணத்துக்கு எங்கே போவது? அவசரத்துக்கு கண்ணுசாமி மாமாகிட்ட வாங்குவேன். இப்ப எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர் கிட்ட கடன் கேட்பது?” என்று கத்திக் கொண்டிருந்தான் மணி.

" என்னை.. என்னடா பண்ணச் சொல்றேன்னு" பதிலுக்கு கத்தினாள்  தங்கம்.

ஆஹா காலையிலேயே நாடகத்தை ஆரம்பித்து விட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு அசோக் அங்கு வந்தான்.

" அசோக் உன் பொண்டாட்டி கிட்ட செயினை வாங்கிக் கொடு. அதை வச்சு வாங்கி கரும்பு வெட்டணும்” என்று   அதிகாரமாகக் கேட்டாள் தங்கம்.

" அம்மா, எப்படிம்மா. நேத்துதான் போட்டு அனுப்பி இருக்கு.. என் மாமனார் என்ன நினைப்பார்" என்று இழுத்தான் அசோக்.

" ஒன்னுக்குள்ள ஒன்னு உறவுங்கிற உரிமையில  கேட்டா நீ தரமாட்டேன்னு சொல்றியா? பெருமாள் அண்ணன் ஒன்னும் சொல்ல மாட்டார்" என்று குழைந்தாள் தங்கம்.

தங்கம்  தன் அப்பாவை அண்ணா என்று சொன்னதும் சங்கவிக்கு  சந்தோஷத்தில் மனம் தட்டாமாலை ஆடியது. வேகமாக ஓடிப்போய் செயினை எடுத்து வந்து தங்கத்திடம்  கொடுத்தாள் சங்கவி. அசோக் தலையில் கை வைத்துக்கொண்டான். அவ்வளவுதான் செயினை மறந்துவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டான். 

சில நேரங்களில் சில  உறவுகளையும் அன்பையும் பணம் கொடுத்துதான் வாங்கவேண்டி இருக்கிறது. 

 

கரும்பு வெட்டும் வேலை இருந்ததால், வீட்டில் இருக்கும் அனைவருக்கும் வேலை அதிகமாக இருந்தது. கரும்பு வெட்டும் போதே தோட்டத்தில் போட்ட உளுந்து கொடியையும் பிடுங்கிப் போட்டிருந்தார்கள். சங்கவியும் 

 

தங்கமும் காலையிலேயே கஞ்சி காய்ச்சி எடுத்துக்கொண்டு வீட்டு வேலையை முடித்துவிட்டு, உளுந்துக் கொடி ஆய்வதற்கு சென்றுவிடுவார்கள். மல்லிகா எனக்கு இந்த வேலை எல்லாம் தெரியாது என்று வீட்டிலேயே இருந்துவிடுவாள். சங்கவி வெயிலில் வதைபட்டு வேலை செய்வது, அசோக்கிற்கு கஷ்டமாக இருந்தாலும்... வேலை செய்யும் போது அவள் அழகை ரசிப்பது ஒரு வித போதையாகத்தன்  இருந்தது. 

 

வேலைகளின்  இடையே ஏற்படும் லேசான உரசல்கள் கூட களைப்பை நீக்கும் கனிச்சாறு ஆகியது. இப்படியே வயல் வேலைகளில் ஒரு வாரம் கழிந்தது. உளுந்து முழுவதுமாக வீட்டிற்கு வந்து சேர இன்னும் ஒரு வாரம் ஆகும். ஒரு நாள் காலை நேரம் அனைவரும் வேலையில் பரபரப்பாக இருந்தனர்.

 

புழக்கடைப் பக்கம் இருந்து "டமால்" என்ற சத்தமும் "அம்மா" என்ற அலறலும் வர, அது அனைவரையும் நிலைகுலைய வைத்தது.

 

(சிறகுகள் படபடக்கும்)