மாயப் புறா - முந்தைய பகுதிகள்
தங்கச்சிலை என அந்த மண்டபத்தில் வலம் வந்து கொண்டிருந்த சங்கவியை, "பெண் அழைத்து வர நேரமாகிவிட்டது. எல்லாரும் வாங்க. அடுத்த தெருவில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லலாம்" என்று உறவுப்பெண்கள் அழைத்தனர்.
கும்பல் கும்பலாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த சொந்தபந்தங்கள் ஒன்று கூடினார்கள். முக்கியமான சொந்தக்காரர்கள் ஒரு 25 பேர், அங்கிருக்கும் வரிசை தட்டுகளை எடுத்து கொண்டு கோயிலை நோக்கி சென்றனர்.
இதில் சிறப்பு என்னவென்றால் முக்கியமாகத் திருமணம் ஆகாத வயசு பெண்கள் எல்லாரையும் தட்டை தூக்க வைத்து விடுவார்கள்.
ஒரு சிறிய பரபரப்பு தொற்றிக் கொள்ள அங்கிருந்தவர்கள் சுறுசுறுப்புடன் பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தனர். கோயிலில் பெண் வீட்டினரை சேர்ந்தவர்கள் ஒரு 50 பேருக்கும் மேல், பெட்ஷீட் விரிப்பில் அமர்ந்து இருந்தனர். அந்த இடத்திலேயே அவர்களுக்கு காப்பியும் சிற்றுண்டியும் கொடுத்து மாப்பிள்ளை வீட்டினர் உபசரித்தனர். பெண் வீட்டினரை வரவேற்று அழைத்தது முழுவதும் அசோக் தான். ஓடி ஓடிச் செய்தான்.
இப்போது போல அந்த காலத்தில் ஃபோன் எல்லாம் இல்லை. உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு வழி எதுவும் இல்லை. அனைத்தையும் நேரில்தான் நடத்தியாக வேண்டும். அசோக்கின் புல்லட்டிற்கு வாய் இருந்தால், என்னை விட்டுவிடு என்று கதறி அழுதிருக்கும். அந்த அளவுக்கு அந்த புல்லட் உதை வாங்கி இருக்கிறது.
ஒரு வழியாக இரு வீட்டினரும் கோயிலில் சந்தித்து பரஸ்பரமாய் நலம் விசாரித்துக் கொண்டனர்.
பெண் அழைப்பு வாகனம் அலங்கார விளக்குகளுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது. வசதி இல்லாதவர்கள் பெண்ணை நடத்தியே மூன்று கிலோமீட்டர் சுத்தவிட்டு மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். அதன் நோக்கம் ’எங்கள் வீட்டு மருமகள் இவள்தான். அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்பதாகும். அசோக் வீட்டினர் அவர்களின் செல்வாக்கை காட்டுவதற்காக 25 தட்டு வைத்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அமரச் செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அவர்களுடன் தட்டுவரிசை எடுத்துக் கொண்டு வரும் வயசுப் பொண்ணுங்களுக்கு எல்லாம் அந்த வண்டியில், தாங்கள் அமர்ந்து வந்தால் எப்படி இருக்கும் என்ற கனவு வந்து அவர்களை மிதக்கவைத்தது.
ஒரு வழியாக ஊர்வலம் சத்திரம் வந்து சேர்ந்ததும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் நலங்கு வைக்கும் சடங்கு நடந்தது. முக்கியமாக உறவு பெண்களைத் தவிர அனைவரும் சாப்பிடச் சென்றனர்.
அந்த காலத்தில் மொய் எழுதும் பழக்கம் காலையில் திருமணம் முடிந்த பிறகுதான் தொடங்கும். இவ்வளவு களேபரத்திலும் புவனாவின் முக்கிய வேலை, உறவுக்கார பெண்களிடம் எல்லாம் தன் பெருமையைக் கூறிக் கொண்டிருப்பது தான். இந்த வேலைக்கே மூச்சு வாங்கிக்கொண்டு அடிக்கடி வந்து சேரில் அமர்ந்து கொண்டாள்.
சங்கவி வருபவர்களை வரவேற்று சாப்பிட்டீர்களா? என்று கேட்டு கவனித்துக் கொண்டிருந்தாள்.
திருமணத்திற்கு சங்கவியின் அப்பா பெருமாளும் உறவுகளுடன் வந்திருந்தார். அவர்களை பார்த்ததும் சங்கவிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. பாட்டியை பார்த்ததும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்துக்கொண்டாள் சங்கவி.
செல்வம் சங்கவியிடம் ஒரு மஞ்சள் பையைக் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னார். அதில் கொஞ்சம் பணமும் கல்யாணக் கணக்கு எழுதும் நோட்டும் இருந்தது. அதற்கே சங்கவி, தனக்கு ஐ. நா. சபையில் நிதித்துறை பதவி கிடைத்தது போல மகிழ்ந்தாள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்து, இரவு படுப்பதற்கு அங்கிருக்கும் இரும்பு சேரையெல்லாம் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி கொண்டிருந்தான் அசோக். சங்கவியும் அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். இடையறாது வேலை இருக்கும் போது மனம் தனக்கு விருப்பமான ஒன்றைப் பற்றி நினைக்க மறந்து விடுகிறது. அது போலத்தான் வேலைகளில் மூழ்கவே அசோக்கின் மனம், சங்கவியின் நினைவுகளுக்கு ஓய்வு கொடுத்தது. இப்போது சங்கவியைப் பார்த்ததும் மீண்டும் மனம் காதல் வானில் பட்டமாய்ப் பறக்க தொடங்கியது.
சங்கவியிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வேலைகளைச் செய்தான் அசோக்.
"சங்கவி, சாப்பிட்டாயா?" என்று அவன் அன்புடன் கேட்டான்.
"ம் .. ஆச்சு நீங்க "என்று, அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் பதில் கேள்வி கேட்டாள்.
அதற்கு அசோக்கிடம் இருந்தும் அதே பதில்தான் வந்தது. "சங்கவி இப்போ திடீரென்று உன் கழுத்தில் நான் தாலி கட்டினால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டான் அசோக்.
"ஏதோ தம்ளர் காபியை கீழே கொட்டினால் என்ன பண்ணுவேன்னு கேட்பது போல சாதாரணமாக கேக்குறீங்க" என்று அதிர்ந்து பதில் சொன்னாள் சங்கவி.
"இப்படி கேட்டால் என்ன உன் பதில். அதைச் சொல்லு” என்று கேள்வியால் கொக்கி போட்டான்
"மாமா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களோடு வாழ்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் தங்கம் அத்தையையும் தனம்மா பாட்டியையும் நினைத்தால் தான் பயமா இருக்கு "-என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு,
"எனக்கு தூக்கம் வருது. காலையில் பேசலாம்” என அங்கிருந்து ஓடி விட்டாள் சங்கவி.
’காதல் என்பது அலைகள் ஓய்வதில்லை ராதா கார்த்திக் மாதிரி, பூணூலையும் சிலுவையையும் கையில் வைத்துக் கொண்டு நிற்பது என்று நினைக்கிற 18 வயதுதான் ஆகிறது சங்கவிக்கு. அவளுக்கு திருமண வாழ்விற்குள் நுழையும் மன வளர்ச்சி இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் தவறான முடிவு எடுத்துவிட்டேனோ?’ என்று குழம்பிக் கொண்டிருந்தான் அசோக்.
எது எப்படி இருந்தாலும் தன் முடிவில் மாற்றமில்லை என்று உறுதியாக இருந்தான் அசோக்.
மறுநாள் அதிகாலை 2 மணிக்கு எல்லாம், சத்திரம் விழிக்க ஆரம்பித்துவிட்டது. முகூர்த்தம் நான்கரை மணியிலிருந்து 6 மணிக்குள். அதனால் அனைவரும் அழகாக அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
மணியும் அசோக்கும் ஒரே மாதிரி பட்டு வேஷ்டி சட்டை அணிந்து இருந்தனர். வயதான பெண்கள் அரசாணிக்கால் நட்டுக் கொண்டிருந்தனர். ஐயர் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார்.
மணமகன் அறைக்கு வந்த அசோக், தான் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து ஆசையுடனும் படபடபுடனும் பார்க்கிறான். புது மஞ்சள் கயிறு. மெருகு குறையாமல் பார்க்கும்போதே என்னவோ பக்தியும் பரவசமும் நிறைந்து, அவன் மனம் நெகிழ்ந்தது.
உற்றார் உறவினர் அனைவரும் மணமேடையில் சூழ்ந்து நின்றனர். மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. அய்யர் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார்.
முதலில் மணிக்கு திருமணம் முடிந்ததும் அந்த ஐயரை வைத்தே அதே மேடையில் புவனாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.
பெரியவர்களின் ஆசியை வாங்குவதற்கு சங்கவி மாங்கல்யத்தை தட்டில் வைத்து அங்கு இருப்பவர்களிடம் கொண்டு சென்றாள். அனைவரும் தொட்டு ஆசீர்வாதம் செய்தார்கள். இதை பார்க்கும்போது அசோக்கும் தான் கையில் வைத்திருக்கும் தாலிக்கு ஆசிர்வாதம் வாங்குவது போல் உணர்ந்தான்.
மேடையில்தான் சங்கவியும் அலமேலுவும் நின்றுகொண்டிருந்தார்கள். அசோக் இரண்டு, மூன்று பேர் தள்ளி ஆண்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தான். தாலிகட்டும் நேரம் நெருங்கும்போது எப்படியோ தள்ளி வந்து சங்கவியின் பக்கத்தில் நின்றான். ஐயர் "கெட்டி மேளம்.. கெட்டி மேளம்" என்று சொல்லும்போது மணி தாலிகட்டும் அதே நேரத்தில்.... சட்டென சங்கவியை நெருங்கி, அவளைத் தன் பக்கம் கைகளால் பற்றி இழுத்துத் திருப்பி, அசோக்கும் சங்கவி கழுத்தில் தாலியைக் கட்டினான். கண நேரத்தில் நடந்த அதிரடியால், மண்டபத்தில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் எழுந்து நின்றனர்.
(சிறகுகள் படபடக்கும்)