
உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஜாதகத்தால் விவாகரத்தான பெண்ணின் பெற்றோருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விவரிக்கிறார்.
மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நல்ல பணக்கார மாப்பிள்ளைப் பார்த்துப் பெற்றோர் திருமணம் முடித்து வைத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு குழந்தை பிறப்பதற்காக ஜாதகம் பார்த்து தனது மகளை மாப்பிள்ளையிடம் இருந்து 13 நாட்கள் தாம்பத்திய வாழ்க்கையைத் தொடங்க விடாமல் தடுத்திருக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அந்த பெண்ணுக்கு ஜோதிடம் பார்த்தவர் மேலும் ஜாதகத்தில் சில பிரச்சனைகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதனால் தாம்பத்திய வாழ்க்கைக்குத் தடையாக இருந்த அந்த 13 நாட்கள் 6 மாதமாக நீட்சியடைய ஆரம்பித்தது. இதனிடையே அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட அந்த பணக்கார மாப்பிள்ளை வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் இருந்த அந்த 6 மாத விரிசல் விவாகரத்தில் முடிந்தது. இந்த சூழலில் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் என்னிடம் கவுன்சிலிங் வந்தார். அந்த பெண் நடந்ததைக் கூறிய பிறகு, கவுன்சிலிங் உனக்கு வேண்டாம் உன்னுடைய பெற்றோரை அழைத்து வா என்று அனுப்பி வைத்தேன். அதன் பிறகு அந்த பெண்ணின் பெற்றோர் என்னை வந்து சந்தித்தனர். அப்போது அந்த பெண்ணின் அப்பா, அம்மா இருவரும் ஜாதகம் பார்த்து திருமணம் பண்ணி வைத்தோம் இருந்தாலும் இப்படி ஆகி விட்டது என்று புலம்பினர்.
தொடர்ந்து இருவரிடம் நான் பேசுகையில் என்னை உங்கள் பெண்ணாக நினைத்துக் கொண்டு நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்றேன். அவர்களும் சரி கேளுங்கள் என்று சொன்னார்கள். பின்பு அவர்களிடம் என்னுடைய வீட்டுக்காரர் ஜாதகத்தை ஏன் பார்க்கவில்லை? திருமணமாகி 6 மாதம் பிரித்து வைத்தது என்ன மாதிரியான மனநிலை? என்றேன். அதற்கு அந்த பெண்ணின் அப்பா, என்னை அவர் மகளாக நினைத்துக்கொண்டு, இல்ல மா 6 மாதத்திற்கு பிறகு சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்றார். அதற்கு நான், யார் யாருடன் சேர்ந்தால் நல்லா இருக்கும் என்று சொன்னீர்களா? என்றேன். பக்கத்தில் இருந்த அவரின் மனைவி இப்படியெல்லாம் கேட்டால் பதில் சொல்லமுடியாது என்று சொன்னார். தொடர்ந்து அவர் என்னைப் பார்த்து, சாருக்கு ஜாதகம் பார்ப்பதில் நம்பிக்கை இல்லையென நினைக்கிறேன் என இருவரும் தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து நான், இப்போது உங்களின் மகளாகத்தான் கேள்வி கேட்கிறேன். சாராக நான் பேசவில்லை என்று சொல்லிவிட்டு, நீங்கள் உங்கள் திருமணத்தின்போது ஜாதகம் பார்த்தீர்களா? என்றதுக்கு உடனடியாக இருவரும் ஆமா பார்த்தோம் என்று தலையசைத்தனர். தாம்பத்திய வாழ்க்கை தொடங்க ஜாதகம் பார்த்தீர்களா? என்று அடுத்த கேள்வி கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்தனர். பின்பு நான் எப்படி ஜாதகம் பார்க்காமல் இத்தனை வருடங்கள் நன்றாக இருந்தேன்? எனக்கு மட்டும் ஜாதகம் பார்த்து ஏன் என்னுடைய வாழ்க்கையில் இப்படிச் செய்தீர்கள் என்று கேள்விகளை அடுக்க ஆரம்பித்தேன். அவர்கள் இருவரும் பதில் இல்லாமல் பேசாமல் இருந்தனர்.
தொடர்ந்து நான் அவர்களிடம், உங்கள் இருவருக்கும் சண்டை வருவதால் உங்களுடைய ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்தேன். அதற்கு அவர், நீங்கள் இருவரும் இன்னொரு திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொன்னதாக நான் சொன்னால் நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா? என்றேன். அதற்கு அவர்கள் அதெப்படி வேறொரு திருமணம் செய்துகொள்ள முடியும் அம்மாவுக்கு தாலி கட்டியாச்சு என்றார். இப்போது மட்டும் உங்களுக்குத் தாலி கட்டிவிட்டேன் என்ற அறிவு எப்படி வந்தது. என்னுடைய திருமணத்தில் தாலி கட்டிவிட்டால் அடுத்து என்ன விஷயம் என்பதைப் பற்றித்தானே யோசித்திருக்க வேண்டும். அப்போது உங்கள் அறிவு எங்கு போனது? ஜாதகத்தில் எனக்கு 6 மாதம் கழித்து விவாகரத்து ஆகும் என இருந்ததா? என அவரின் மகளாக கோபத்துடன் கேட்டேன். ஒருபுறம் நான் அவரை கேள்வி கேட்டு மடக்கும் நிலையில் இருந்தாலும்கூட என்னுடைய கேள்வி நியாமானது என்று அவருக்குப் பட்டது. அவருடைய மனைவிக்கும் ஜாதகப்படி மூன்று குழந்தைகள் பிறக்கும் என்று ஒரு ஜோதிடர் சொல்லியிருக்கிறார். இருந்தும் ஒரு குழந்தைதான் பிறந்துள்ளது. அடுத்து இரண்டு குழந்தைகளுக்கு முயற்சித்தும் அவர்களுக்கு அடுத்ததாக குழந்தைகள் பிறக்கவில்லை. இந்த விஷயத்தை நான் கேள்வி கேட்டபோது மனம் விட்டு அந்த அம்மா பேசினார். ஆனால், அவரின் கணவர் இப்போதும் ஜாதகம் சரியாகத்தான் இருக்கும் நம்ம பொண்ணுக்கு அதுவாய்க்கவில்லை என்று ஜாதகத்தை விட்டுக்கொடுக்காமல் பேசினார்.
நான் அவரிடம், ஜாதகத்தைக் காப்பாற்ற நினைத்து என்னுடைய வாழ்க்கை போனால் போகட்டும் என்ற நினைக்கிறீர்களா? என்று அவரின் மகளின் குரலாக மீண்டும் கேள்வி கேட்டு, பேசாமல் நீங்கள் ஜாதகத்தை பெற்று வளர்த்திருக்கலாம் என்றேன். இப்படிப் பல கேள்விகளை அடுக்கிய பிறகு கணவர், மனைவி இருவரும் ஒரே குழப்பமாக இருக்கிறது என்றனர். இந்த குழப்பமான மனநிலைதான் கவுன்சிலிங் வருபவர்களுக்கு முக்கியமான மனநிலை. ஏனென்றால் தவறான ஒன்றை இறுகப் பிடித்துக்கொண்டு அதை விடும்போது ஒரு குழப்பம் வரும். அதே போல் சரியானதை இறுகப் பிடிக்காமல் இருந்தாலும் குழப்பம் வரும். தவறானதை விடும்போது கடந்த காலத்தில் செய்த தவறை நினைத்து குழப்பம் வரும். சரியானதை விடும்போது தவறு செய்ய போகிறமோ என்ற எதிர்காலத்தைப் பற்றிய குழப்பம் வரும். என்னிடம் பேசிய அந்த பெற்றோர் கவுன்சிலிங் முடிந்து போகும்போது ஒரு காப்பி குடித்துவிட்டு போங்கள் என்றேன். அதற்கு அந்த பெண்ணின் அப்பா, இல்லை சார் பரவாயில்லை என்றார். நான் அதற்கு இப்போது நான் கவுன்சிலிங் கொடுப்பவராக அழைக்கிறேன். உங்கள் பொண்ணாக இருந்திருந்தால் எனக்குப் பண்ண விஷயத்திற்கு நிச்சயம் காப்பி கொடுக்க அழைக்க மாட்டேன் என்றேன். அதன் பின்பு அந்த பெண்ணின் பெற்றோர் சென்றுவிட்டனர். நான்கு வாரத்திற்குப் பிறகு அந்த பெண்ணின் பெற்றோர் என்னை சந்திக்க வந்து மகளின் இரண்டாவது திருமண முடிவை மகளே எடுக்கட்டும் என்று விட்டுவிட்டோம். மகளின் குழந்தை விஷயத்திலும் தலையிடவில்லை என்று நன்றி சொல்லிவிட்டுச் சென்றனர்.