Skip to main content

இரவில் அறைக்குள் கேட்ட சத்தம்; பெண் ஊழியருக்கு நேர்ந்த சம்பவத்தால் பயந்த நிறுவனம் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 68

Published on 15/10/2024 | Edited on 15/10/2024
jay-zen-manangal-vs-manithargal- 68

மனநல ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், ஒரு நிறுனத்தின் அறைக்குள் பேய் இருப்பதாக நினைத்து பயந்திருந்த ஊழியர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார். 

ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவர், இரவு நேரத்தில் நிறுவனத்திலுள்ள ஒரு அறையில் வித்தியாசமான சத்தம் வருவதை உணர்கிறாள். தொடர்ந்து அந்த சத்தம் சில நாட்களாக அந்த அறையில் கேட்க, திடீரென ஏதோ ஒரு கருப்பு உருவம் அந்த அறையில் கடந்து சென்றதாகவும் அந்த பெண் ஊழியர் அங்கு வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களிடம் கூறி இருக்கிறார். முதலில் அந்த பெண் சொன்னதை யாரும் நம்பவில்லை. பிறகு இதைச் சோதித்த பார்க்க அங்கு வேலை பார்க்கும் மற்றொரு ஊழியர் தைரியமாக முன் வருகிறார். பின்பு அவரை அந்த அறைவில் விட்டுச் சென்றபோது அவரும் தொடர்ந்து சத்தம் வருவதை உணர்ந்து நமக்கு இந்த வம்பு வேண்டாம் என்று அங்கிருந்து சென்று விடுகிறார். இந்த சம்பவங்கள் காலப்போக்கில் அந்த அறையில் பேய் இருக்கிறது என்று நிறுவனம் முழுவதும் பரவ ஆரம்பித்து ஊழியர்கள் அனைவரும் பயப்படத் தொடங்கினர். இந்த விஷயம் நிறுவனத்தின் முதலாளி காதில் விழ இதனால் வியாபாரம் பாதிக்கப்படும் என்ற நோக்கில் சில சாமியார்களை வைத்து பூஜை செய்திருக்கிறனர். 

சாமியார் பூஜை செய்துவிட்டுச் சென்ற பிறகும் மீண்டும் அந்த அறையில் சத்தம் வருவதாக ஊழியர்கள் முதலாளியிடம் சொல்லியிருக்கின்றனர். இதனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் நிறுவனமே தடுமாறியது. அந்த சமயத்தில் என் நட்பு வட்டாரத்திலிருந்து ஒருவர், அங்கு சென்று இது மனம் சார்ந்த பிரச்சனையாகக்கூட இருக்கலாம் என்று நிறுவனத்தாரிடம் பேசி என்னை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு நான் அங்கு சென்றதும் என்னை சாமியார் என்று நினைத்தனர். முதலில் அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களை 25 பேர் கொண்ட 8 குழுக்களாகப் பிரிக்க ஆரம்பித்து சில ட்ரைனிங் கொடுக்க ஆரம்பித்தேன். ஆனால் அதில் எந்த இடத்திலும் நான் பேயைப் பற்றி பேசவே இல்லை.    

தினம் அந்த 8 குழுக்களிடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இதுவரை சரியாக என்ன செய்து வருகிறீர்கள். தவறாக என்ன செய்துவருகிறீர்கள் என்று அவர்களுக்குக்கான இலக்கை கொடுக்க ஆரம்பித்தேன். அதேபோல் முன்பு இருந்த டாஸ்க்கைவிட  நிறைய டாஸ்க் கொடுக்கச் சொல்லி நிறுவனத்தை வலியுறுத்தினேன். அந்த அறைக்குள் அதிகப்படியான விலை போகும் பொருட்களை வைக்கச் சொன்னேன் அதேபோல் அந்த நிறுவனமும் அதையெல்லாம் செய்யத்தொடங்கியது. டாஸ்க் அதிகமானதால் ஊழியர்கள் அந்த அறையில் இருக்கும் பொருட்களை விற்றால் அதிகப்படியான வருமானம் வரும் என்று இயல்பாகவே உள்ளே சென்று விற்பனை செய்யத் தொடங்கியிருக்கின்றனர். முதலில் ஊழியர்களுக்குப் பயம் இருந்தாலும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விற்பனை செய்திருக்கின்றனர். 

காலப் போக்கில் அந்த குழுக்களிடம் பேசும்போது அவர்களே பேயை வைத்து நகைச்சுவை செய்து சிரிக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு ஊழியர் என்னிடம் வந்து, பேய் இருந்ததால் தான் இப்போது நன்றாகச் சம்பாதிக்க முடிகிறது என்று சிரித்துக்கொண்டே பேசினார். தொடர்ந்து இதுபோல பேய் தொடர்பான எண்ணங்கள் அவர்களுக்கே தெரியாமல் அவர்களைவிட்டு நீங்கி தன்னையே அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்ததால்தான் அந்த பெண் ஊழியர் அறியாமல் சொன்னதை நினைத்து பயந்திருக்கின்றனர். ஒரு வருடத்திற்குப் பிறகு அந்நிறுவனத்தார் என்னிடம் வந்து, அருகில் இருக்கும் ஒரு ஆழ்துளைக் கிணற்றில் மோட்டர் போடும்போது வித்தியாசமான சத்தம் வந்திருக்கிறது. இது தெரியாமல் இத்தனை நாட்களாக பேய் என்று  பயந்திருக்கிறோம். வேலை பார்க்கும் ஊழியர்களிடம் இதைப் பற்றிச் சொல்லவில்லை, இன்றுவரை ஊழியர்கள் அனைவரும் பேயை கிண்டலடித்து வேலையைச் செய்து வருகின்றனர். அது அங்குள்ள ஊழியர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதால் சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டோம் என்றனர்.