Skip to main content

சாதி வெறி பிடித்த பெற்றோர்; மனம் மாறியது எப்படி? - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 25

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
 jay-zen-manangal-vs-manithargal- 25

தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு தாய் - தந்தை என்னிடம் கவுன்சிலிங் வந்தனர். எந்தவித சுற்றலும் இல்லாமல் சட்டென்று விஷயத்திற்கு வந்தார்கள். எங்களுக்கு ஒரு மகள். இப்போது கல்லூரி முடித்துவிட்டாள் என்றார். அடுத்து சட்டென்று நேராக சொன்னார். நாங்கள் இந்த சாதியை சேர்ந்தவர்கள். ஆனால் என் மகள் இந்த சாதியை சேர்ந்த ஒருவரை காதலிக்கிறாள். என் நண்பர், நீங்கள் நன்றாக கவுன்சிலிங் கொடுப்பீர்கள் என்று சொன்னார். அதான் வந்தோம். நீங்கள் தான் எங்கள் மகளிடம் பேசி இந்த சாதி தான் சிறந்தது, இந்த சாதியில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று புரிய வைக்க வேண்டும் என்று பட்டென்று பேசினார். அந்த தந்தையை விட தாயே மிகவும் பிடிப்பாக இருந்தார். 

கவுன்சிலிங்கிற்கு சமுதாயம், குடும்பம், தனிமனிதன் போன்ற பொறுப்புகள் இருக்கிறது. திறமை சார்ந்த பொறுப்பு இருக்கிறது. பொதுவாக கவுன்சிலிங், மனநல ஆலோசனை என்பது வருபவரின் உணராத அல்லது அவருக்கே அறியாத திறமையையோ, சிந்தனையையோ வெளிக்கொண்டு வந்து அதோடு விட்டுவிட வேண்டும். அதற்கு அடுத்து செய்ய வேண்டியதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எனவே இவரிடம் நான், சாதி பற்றிய சிந்தனையை அவரிடமிருந்து எடுக்க அவர் மனம் மூலமாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று பேச ஆரம்பிக்கிறேன். ஓப்பனாக அவரிடம், சாதிதான் உயர்ந்தது அதுதான் முக்கிய பிரச்சனை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் வந்த இடம் தவறு என்று சிரித்துக் கொண்டே பேசுகிறேன். உங்கள் மகளின் வாழ்க்கை குறித்த உங்கள் கவலைகளை பற்றி வேண்டுமானால் பேசலாம் என்று ஆரம்பித்து, உங்கள் பெண்ணிற்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா, அந்த பையன் எப்படி, அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று கேட்டேன். நூறு சதவிகிதம் அவளுக்கு பிடித்திருக்கிறது. அந்த பையனும் நல்ல வேலையில் உள்ளார். எந்த வித கெட்ட பழக்கமும் இல்லை மற்றும் அவர் இரு குடும்பமும் ஒத்துக்கொண்டு தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக சொன்னார். அவர் சொன்னதிலிருந்து அந்த பையனும் நல்ல குணமுள்ளதாக இருப்பதாக எனக்கும் தோன்றுகிறது. 

திருமணத்திற்கு பிறகு உங்கள் பெண்ணின் வாழ்க்கையில் உங்கள் இருவருக்கும் என்ன வேலை என்றேன். சற்று அதிர்ச்சி ஆகி, நாளப் பின்னே வந்து பார்ப்பது, குழந்தைகள் பிறந்தால் போய் பார்ப்பது என்று இருப்போம் என்று சொன்னார்கள். அவர்களை சற்று புரிதலுக்கு வரவைத்து இலகுவாக்கிய பின், பையனையும் மகளையும் சந்தித்துப் பேச வேண்டும் என்று கேட்டு அவர்களிடம் பேசுகிறேன். அவர்கள் இந்த தலைமுறைக்கேற்ப நல்ல தெளிவாக, நன்கு தொலைநோக்கு பார்வையுடன், எதிர்காலத்தை நோக்கிய ஒரு இலக்கை வைத்திருந்தார்கள். அப்பாவின் சாதி வெறி பற்றியும் ரொம்ப இயல்பாக, அவர் பழைய காலத்து ஆள் சார் அப்படிதான் யோசிப்பார் பார்த்து கொள்ளலாம் சார் என்று அந்த பெண்ணும் தெளிவாக பதில் சொல்கிறார். நான் அவர்களை போக சொல்லிவிட்டு, அந்த பெற்றோருக்கே புரிய வைக்க பேசினேன்.

முதலில் எல்லாருக்கும் வாழ நினைக்கும் வாழ்க்கை அமைவதில்லை. எத்தனையோ நிச்சயம் செய்த திருமணங்கள் நின்று விடுகிறது. எத்தனையோ திருமணம் ஆனவர்கள் தப்பான உறவினால் பிரிந்து விடுகிறார்கள். எத்தனையோ பேர் குழந்தை இல்லாமல் பிரிந்து விடுகிறார்கள். அப்படி இருக்க நன்கு தெளிவாக, தொலைநோக்கு எதிர்கால சிந்தனையோடும் புரிதலோடும்  இருக்கும் காதலர்களை, உங்களின் சாதி பார்வையை அவர்களிடம் திணிக்க வேண்டுமா? நான் சாதி தவறு, சரி என்றெல்லாம் பேச வரவில்லை. அது உங்கள் வாழ்க்கை வரை நீங்கள் கடைப்பிடித்தது. ஆனால் அதை அடுத்த தலைமுறைக்கும் நகர்த்துவது சரியாக இருக்குமா என்று கேட்டேன். 

அடுத்ததாக நீங்கள் உங்கள் மகளுக்கும் அவர்களின் பேரன், பேத்திகளுக்கு என்று எதுவும் எதிர்கால திட்டம் வைத்திருக்கிறீர்களா என்றதற்கு, அதெல்லாம் இல்லை சார். அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் தெளிவாக திருச்சி, கோயம்புத்தூர் என்று செட்டில் ஆகவேண்டும் என்று இருக்கிறார்கள் என்றார். எங்களிடம் எதுவும் இல்லை என்றார். உங்களிடம் தெளிவான எந்தவித தனி திட்டம் அவர்களுக்கு என்று இல்லை. அவர்கள் முடிவு, அவர்கள் தான் செய்ய வேண்டும், பார்க்க வேண்டும் என்று பொதுவாக சொல்கிறீர்கள். ஆனால் அவர்கள் தெளிவாக இந்த திட்டமெல்லாம் வைத்திருக்கிறார்கள். ஆனால் உங்கள் மனதில் இருக்கும் ஒரே திட்டம், ஒரே எண்ணம், உங்கள் சாதி தான். இனிமேல் நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். 

சில நாட்கள் கழித்து சந்திக்கையில், மகளுக்கு அவர் காதலனுக்கே திருமணம் நடத்தி விட்டோம். மேலும் நான் இனிமேல் என் பேர் பின்னாடி இருக்கும் சாதி பெயரை கூட எடுக்கலாம் என்றிருக்கிறேன் சார் என்றார். அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை, பேரிலிருந்து சர்டிபிகேட்டிலிருந்து எடுத்துவிட்டால் சாதி வெறி போய்விடும் என்றெல்லாம் நினைப்பது தவறு. நீங்கள் சாதியை எடுக்க வேண்டியது உங்கள் மனதிலிருந்து தான். அதுவே போதுமானது என்று கூற தெளிவு அடைந்தார்.

சார்ந்த செய்திகள்