வேலைக்காக இடம் பெயர்ந்த வடமாநில பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பதினெட்டு வயதுள்ள பெண் அவர். படித்து முடித்து பியூட்டீஷியன் கோர்ஸ் முடித்து, இங்கு நம் தமிழ்நாட்டில் ஒரு அழகு நிலையத்தில், குறிப்பாக பெண்களுக்கு முடி திருத்தும் பகுதியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அவர் என்னிடம் கவுன்சிலிங்கிற்கு வந்து இரண்டு பிரச்சனைகளை முன்வைக்கிறார். ஒன்று, ஒருநாள் அவர் சலூனில் முடி திருத்தும் வேலையை செய்து முடிக்க இரவு நெடுநேரம் ஆகிவிடுகிறது. வீட்டிற்கு செல்ல தயாராகும் போது, யாரோ ஒருவர் இவரது பருகும் பானத்தில், எதையோ கலந்துவிட்டதாக எண்ணுகிறார். ஏனென்றால் காலை விழித்தபோது அதே பார்லரில் எழுகிறார்.
மேலும் தன்னையும் மீறி ஏதோ ஒரு அநீதி நடந்துவிட்டது என உணர்வுப்பூர்வமாக எண்ணுகிறார். தன்னுடைய மேலாளரோ அல்லது கூட பணிபுரியும் எட்டு வடமாநிலத்தவரில் ஒரு நபரோதான் தனக்கு இதை செய்திருக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் மருத்துவப்பூர்வமாக உடலை பரிசோதனை செய்து பார்த்ததில் எதுவும் ஆகவில்லை என்றே தான் தெரிகிறது. ஆதாரமும் எதுவுமில்லை. இருந்தாலும் இவருக்கு வேலை சார்ந்த இடத்தில ஒரு இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டாவதாக, இவருக்கு இந்த ஊர் மக்கள் இயல்பும் உடையணியும் பழக்கம், உணவு முறை, வாழ்க்கை முறை எதுவுமே ஒத்து வரவில்லை ஒட்டவும் முடியவில்லை.
பொதுவாகவே வடகிழக்கு மக்களின் உணவு வகைகளும், அளவும் மிக குறைவு. அவர்களின் உடலமைப்பும் மிகச் சிறியதாக தான் காணப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை முறையும் படிப்பு முதன்மையாக அல்லாது அளவான உணவு, இயற்கை, விவசாயம் என்று குறுகிய வட்டம் உடையது. எனவே அந்த பெண்மணிக்கு நம் தமிழர்களின் பல்வேறு உணவு வகைகள், உண்ணும் பழக்கம், உடைகளின் பல்வேறு வகைகள், என்பதை பார்க்க ரொம்ப மிரட்சியாக இருந்தது. அவர் ஏற்கனவே டெல்லி, கொல்கத்தா என்று சென்று, குறிப்பாக மும்பையின் மக்கள் தொகையைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு பேசினார்.
அவருக்கு நம் ஊரில் அதிகாலை எழுந்து மாணவர்கள் டியூஷன் செல்வது பார்க்க மிக ஆச்சார்யமாக இருக்கிறது. மேலும் அவர் நம் ஊர்களில் படிப்பிற்கு தரும் முக்கியத்துவம் பார்த்து தன் வருங்கால குழந்தைகளை இங்கேயே படிக்க வைத்து வளர்க்கவே பிரியப்படுகிறார். ஆனால் நம் வாழ்க்கை முறையும், நம் இன மனிதர்களை பார்ப்பதே அவருக்கு மிக பயமாக இருந்திருக்கிறது. வடகிழக்கு ஊர்களையம், மலைகளையும் தாண்டி அதிகம் வெளியே செல்லாததால் இங்கு பரந்திருக்கும் வாழ்க்கை முறை அவரை மிகவும் பாதித்து இருக்கிறது. இது ஒரு இலகுவான கவுன்சிலிங்காக இருந்தது. நான் அவரிடம் மெல்ல எடுத்து கூறினேன். படிப்பு சார்ந்த சமூகமாக இங்கு இந்தியாவில் குறிப்பாக தமிழகம் இருக்கிறது. இங்கு படிப்பு மூலமாக உலகம் முழுக்க தொடர்பான ஆட்களை பிடிக்கலாம். நீங்கள் எப்படி ஒரு வேலைக்காக இங்கு வந்தீர்களோ, அப்படியே நாளை உங்கள் குழந்தைகள் வெளிநாடுகளுக்கு படிப்பதன் மூலமாக எதிர்காலம் அமையும். அதேபோல் ஏதோ ஒன்று நடந்து விடும் என்று பயப்படும் உங்கள் மனம், இங்கு இல்லை நீங்கள் உங்கள் சொந்த கிராமத்திலிருந்து எங்கு சென்றிருந்தாலும் வரும் என்றெல்லாம் பேசி தெளிவுபடுத்தினேன்.
மேலும் அந்த ஒரு நாள் பார்லரில் ஏற்பட்ட அனுபவத்திற்கு ஆதாரமே இல்லை என்பதால், அதை நினைத்து தேவையில்லாமல் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. இது முழுக்க முழுக்க புது இடத்தினால் வந்திருக்கும் குழப்பம். அவரும் நன்கு தெளிவு அடைந்து இப்போது சொந்தமாக பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். தனக்கு வரும் கஷ்டமர்சிடம் இருந்தே நன்றாக தமிழ் கற்றுக்கொண்டு, கோயம்புத்தூரில் திருமணம் ஆகி இப்போது அவருக்கு இரட்டை குழந்தைகள் இருக்கின்றது.