பிள்ளைகள் கவனிக்காததால் முதியோர் இல்லம் செல்ல முடிவெடுத்த பெற்றோர் பற்றி “மனங்களும் மனிதர்களும்” தொடர் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
தங்களுடைய பிள்ளைகள் தங்களைப் பார்த்துக்கொள்ளவில்லை என்றும், வாழ்க்கையில் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்வதற்கு முன் கவுன்சிலிங் பெற விரும்புவதாகவும் கூறி வயதான கணவன், மனைவி நம்மிடம் வந்தனர். அவர்களுடைய மகனும் மகளும் நன்கு செட்டிலானவர்கள். ஆனால் அவர்கள் தங்களை வந்து பார்ப்பது கூட இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். அடுத்து என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. முதியோர் இல்லத்திற்குச் செல்லலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.
அந்த நேரத்தில்தான் அவர்கள் நம்மிடம் வந்தனர். தங்களுடைய நிலையை அவர்கள் முழுமையாக விளக்கினர். அனைத்தும் இருந்தாலும் ஒன்றுமே இல்லாதது போல் அவர்கள் உணர்ந்தனர். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியது மட்டுமல்லாமல், பேரப்பிள்ளைகளோடு நேரம் செலவிட வேண்டியதற்கான முக்கியத்துவத்தை அவர்களிடம் நான் வலியுறுத்தினேன். பேரப்பிள்ளைகள் தங்களுடைய வீட்டுக்கு வரவில்லை என்றாலும், தாங்களாகவே சென்று ஏன் அவர்களோடு இருக்கக்கூடாது என்று கேட்டேன்.
அவர்களை அது யோசிக்க வைத்தது. இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வந்தனர். மகனும் மகளும் தங்களை வந்து பார்க்கவில்லை என்றாலும், தங்களால் முடிந்த அனைத்தையும் பேரக்குழந்தைகளுக்குச் செய்துவிட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்திற்கு அவர்கள் வந்தனர். இதனால் முதியோர் இல்லத்திற்குச் செல்லும் எண்ணத்தை அவர்கள் கைவிட்டனர். பேரக்குழந்தைகளோடு இவர்கள் அதிக நேரம் செலவிட ஆரம்பித்த பிறகு, அதன் காரணமாகவே மகனும் மகளும் இவர்களிடம் வந்து சேர்ந்தனர்.
பிள்ளைகள் தங்களைப் பார்த்துக்கொள்ளவில்லை என்பதால் முதியோர் இல்லத்தில் சென்று சேர்வதை விட, பேரக்குழந்தைகளின் மீது கவனம் செலுத்துவது நல்லது. இதன் மூலம் அந்தக் குழந்தைகளுக்குப் பாட்டி தாத்தாவின் அனுபவங்கள் வாழ்க்கையில் உதவும். என்னுடைய தாத்தா, பாட்டி பேசிய விஷயங்கள் எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. திருமணம் ஆகும்போது Parenting மட்டுமல்லாமல் Grandparenting என்பதும் முக்கியமான ஒரு பொறுப்பாகக் கருதப்பட வேண்டும். அதுதான் இத்தனை ஆண்டுகள் வாழ்வதற்கான அடையாளமாக இருக்கும். நம்முடைய முதிர்ச்சிக்கான அடையாளமாகவும் அதுவே இருக்கும்.