அடுத்த நாளைக்கான தேவையை உணரவே இன்றைய நாளின் இறப்பு தேதியைக் கிழிக்கும் போதே நேற்று புத்தகப்பையின் அடியில் ஒளித்து வைத்திருந்த டைரி கண்ணிற்குள் வந்து போனது. நிர்மலா என்னும் வெள்ளைத் தேவதையின் நினைவலைகளை சுமந்த அந்த வஸ்துவை பாதி வெறுப்புடனும் மீதி காதலுடன் தழுவின என் விரல்கள். சற்றே சாய்ந்த கிறுக்கலான கையெழுத்து மணமான இந்த ஆறு வருடங்களில் அவள் எப்போது இந்த டைரியை எழுதத் தொடங்கினாள். தாலிச்சரடு மார்பின் குறுக்கிலாட பட்டுச் சேலையோடு என் விரல் பிடித்து கொண்ட மருதாணி விரல்களோடு ஆரம்பித்திருப்பாளா ? அல்லது அத்தை என்னை திட்டிகிட்டே இருக்காங்க என்ற அம்மாவின் மீதான புகார் பட்டியலின் போது தொடர்ந்திருப்பாளா ? அல்லது நான் அப்பாவாகப் போகிறேன் என்று வெட்கி எங்கள் உறவை பசுமையாய் நினைவு கொண்டு வந்தபோது தொடங்கியிருப்பாளா? ஆனால் எழுத்துக்கள் மட்டுமின்றி அவளுக்கும் முற்றும் போடவேண்டியதாகிப் போனதே இதற்கு யார் காரணம் நானா? அல்லது அலைபாயும் மனம் கொண்ட அவளின் தேடல்களா? யோசித்துக் கொண்டேதான் அந்த டைரியை எடுத்து பிரித்தேன்.
அந்த வெள்ளிக்கிழமைக்கு அவள் அத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றவில்லை, ஆனால் அவளிற்குத் தோன்றியிருக்கிறது. அண்ணன் தம்பி மாமன் மச்சான் என்று தீப்பெட்டிகளை வரிசையாய் அடுக்கியதைப் போன்ற வீடுகளில்! அன்றைய காலை அவளின் குளியலறையின் கதவிடுக்கில் இரண்டு கண்களைப் பார்த்ததை பதறியபடி என்னிடம் சொன்னபோது ?! எல்லா கணவனைப் போல எனக்கும் என் மனைவியின் அழகை மேய்ந்தவனின் கண்களை குருடாக்க ரோஷம் வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அந்தக் கண்களுக்கு சொந்தக்காரனை நான் கணிக்கத் தவறிவிட்டேன் இவனாக இருக்குமோ அல்லது இவனாக இருக்குமோ என்று கடைசியில் இவளே அழைத்திருப்பாளோ என்று எனக்குள் தீப்பொறிகள். அதன் தகிப்பை என் தலையில் சுமத்திவிட்ட திருப்தியில் அவள் தன் வேலைகளில் ஆழ்ந்து விட்டாள். என் கழுகுப் பார்வையும் மீறி அந்த கண்களை அவளே கண்டு பிடித்து விட்டாள்.
அவனா? உச்சகட்டக் கோபத்தில் அடுத்த விநாடியே நான் அவன் முன்னால்....! ஆனால் அடிபட்டு மயங்கியது அவனல்ல, என் சபலம் நுனிநாக்கில் சுர்ரென பரவும் கோப்பைத் திரவத்தின் ஸ்பரிசம். கைகள் பழுக்க இரும்படித்தாலும் கிடைக்காத சொர்க்கம் அவன் கரன்ஸிகளால் என்னைக் குளிப்பாட்டியதை டைரியில் அவள் குறிப்பிட்டிருந்தாள். ச்சீ? என்ற முகச்சுழிப்போடு அவள் என்னை சாக்கடையில் நெளியும் புழுவைப் பார்ப்பதைப் போல பார்த்தாள். இரண்டு பிள்ளைகளைப் பெற்றபின்னரும் வனப்பில் சீர் தூக்கியிருக்கும் அவளின் அழகுகளை இன்னொருவன் ரசிக்கிறான் எனில், எனக்கு கோபம் வரவேண்டுமாம். ஆனால் என் நாவு அவனின் பாட்டிலுக்கு அடிமையாகிப் போய்விட்டதே நானே அவனை அழைத்தேன் விருந்திற்கு அவளின் உணவிலும், உடலிலும். சில எச்சில் இரவுகளில் அவளின் தினசரிகள் கழிந்தது ஆனால் அந்த மயக்க நாடகத்தை அவள் உணர்ந்து கொண்டாள் சில நாட்களிலேயே ! முரண்டு பிடித்த அவளின் அங்கங்கள் எல்லாம் என் சிகரெட்டின் சூட்டைப் பரிசாகப் பெற்றுக்கொண்டது. ஏன் இப்படி அடிச்சு சித்திரவதை பண்றே என்வீட்டுக்கு ஒருநாள் கூட்டிட்டு வா நான் பேசிக்கிறேன் என்றான் அவன்.
வர மறுத்தவளை அவனுடன் சுகித்திருந்த அந்தரங்கத்தை காட்டி பணியவைத்து அழைத்துப்போனேன். அங்கு நான் கண்டது.....யாரோ வந்து விட டைரியை மீண்டும் மூடி பரணையில் வீசிவிட்டு நகர்ந்தேன் நான். நிர்மலாவின் டைரி விழித்துக் கொண்டது? ! தொட்டுவிட தொட்டுவிட தொடரும் என்பார்கள். அன்றைய சந்திப்பில் நான் அறியாமலேயே என் உடலைத் தொட்ட அவன் இப்போ நீ ஒண்ணும் பத்தினி கிடையாது. யோசி என்னை அனுசரித்துக் கொண்டால் சகலமும் கிடைக்கும் உனக்கு இல்லையென்றால்? உன் ஒழுக்கம் பத்துபேர் மத்தியில் விமர்ச்சிக்கப்படும், உன் கணவனே அதற்கு ஆதாரங்களை நீட்டுவான். பிள்ளைகள் காரி உமிழ்வார்கள். ஒருமுறை பட்டாலும் சேருதானே விருப்பப்பட்டாயோ படவில்லையோ பூசிக்கொண்டாய். இனி தப்பிக்க முயலாதே ! எச்சரித்தான்.
எனக்கு இணக்கம் வேண்டும் நிர்மலா உன் விரல்கள் எனை தீண்ட வேண்டும் அவன் உனக்கு ஏற்றவன் இல்லை நானிருக்கிறேன் ஆடைகளைத் தாண்டி அங்கங்களைத் தொட நீண்ட அவன் கைகளில் இருந்து நான் விலகினேன் கண்ணெதிரே மனைவியை யாரோ ஒருவன்... என் கணவனின் ச்சீ.... அந்த இடைத்தரகனின் கைகளில் கண்ணாடிபுட்டியின் திரவம் என்னைப் பார்த்து நான் உடைந்துவிட்டேன் நீ ! என்று சிரித்தது.
கண்டிக்க வேண்டியவனே கதவடைத்து விட்டான். இனியார் என்னைக் கேட்பது என்ற அகங்காரம் என்னுள். நான் அறியாமலே மது மயக்கத்தில் என்னை....அனுபவித்தவன். இப்போது பிச்சைக்காரனைப் போல இரைஞ்சுகிறான். அவனின் காலுக்கடியில் இட்ட வேலைகளைச் செய்யும் ஏவலாலாய் புருஷன் இன்னும் அவனை அழுத்த வேண்டும் கண்முன் கிடந்த திரவத்தை தொண்டையில் சரித்துக் கொண்டேன் அதிர்ச்சியில் முதலில் இறங்க மறுத்த திரவம் வழுக்கிக்கொண்டு ஓடியது. சாக்கடைக்குள் சரித்திரம் புதைந்து போனது. ரசிக்கக் கண்கள் இருக்கும் போது அலங்கரிக்க மனம் கூசவில்லை தடையாய் இருந்த தாலிச்சரடும் சாதாரண செயினாக கனம் கூடியபிறகு ஏற்கனவே மின்னிய முகத்தில் வைரமும் மினுக்கியது.
கூர்வேலாய் குத்திய பார்வைகளை என் பகட்டும் பதவிசும் மறைத்தது. பெளர்ணமி இரவு அன்றுதான் நான் கடைசியாக அவனின் கரங்களில் அகப்பட்டு இருந்தது. அடக்கி அடக்கி வைத்திருந்த உணர்வுகளை ஒழுக்கம் கற்பித்த அன்னையின் குரல்வளையை நெறிக்க வேண்டும் போல் இருந்தது. நான் இப்படி தவறியதற்கு யார் காரணம் என்று யோசனை குமிழிட்டது, எத்தனை பவித்ரமானவளாக இருந்தேன் இன்று பரிதாபத்திற்குரியவளாகிப் போனேனே. என்ன வேண்டும் சின்ன புன்முறுவல், சமையல் அருமை என்ற பாராட்டு மென்மையாய் முத்தமிடல், கரம் பிடித்து கண்களைப் பார்த்து கவிதை பேசிடல் மொட்டைமாடியின் பெளர்ணமி நிலவொளியில் வெற்றுடல் போர்த்தியிருந்த உடல் கணம் இதையெல்லாம் நான் தாலிகட்டியவனிடம் கூட அனுபவித்தது இல்லையே ! ஆனால் எப்படியோ எங்கோ இரண்டு பிள்ளைகளின் தாயாய் என் மனதை கட்டிப் போட்டு இருக்கவேண்டும். சரிந்து விட்டேன். அவனுக்குத் திருமணமாம் நான் என்ன செய்ய ?! எப்பாடு பட்டு கேட்டும் அதற்கு அவன் சம்மதித்து விட்டானாமே ?! கவலைப்படாதே நான் உன்னை ..... எந்த வார்த்தைகளை பெண்ணாகப் பிறந்தவள் கேட்கக் கூடாதோ அந்த வார்த்தைகள், தள்ளுவண்டிச் சுடுமணலில் வறுபடும் வேர்கடலையாய் என்னிலை.
தவறு எங்கிருந்து என்று தொடங்கி எங்கே மடிந்தேன் என்று யோசிக்க நேரம் இருக்கவில்லை, காலைக் கட்டிக் கொண்ட குழந்தையினை கடைசியாய் முத்தமிட்டேன், அம்மா குளிக்கப்போகிறேன் என்று அவனை வெளியே அனுப்பிவிட்டேன். கடைசியாய் ஒரு முறை கட்டியவனையும், கண்டவனையும் கவர்ந்த அந்த உடலை வெறுமையாக்கி கண்ணாடியில் கொடூரமாய் ரசித்தேன் இந்த வெண்தோள்கள் இன்னும் சற்று நேரத்தில் பொசுங்கிவிடும். அந்த பொசுங்கல் அரசல் புரசலான பேச்சுக்களை எல்லாம் அடக்கிவிடும் இந்த ஜன்னல் வழியாகத்தான் அவன் எனக்கு அழைப்பு விடுவான் அங்கேயே அமர்ந்தேன் இப்போதும் அவன் விழிகள் பால்கனியில் இருந்து என்னை ரசித்தது. அகலத் திறந்துவிட்டேன் கண்ணாடியை ! நிதானமாய் மண்ணெய்யை அபிஷேகம் செய்வதைப் போல ஊற்றி நெருப்புக்குச்சிக்கு முத்தமிட்டேன்! நிலைமையுணர்ந்து அவன் வருவதற்குள்..!
அழுகை கூக்குரல் சதை கருகிய வாசம் இவையெல்லாம் தாண்டி உயிர் ஒட்டிக் கொண்டு இருந்தது. கடைசியா நான் போய் ஒருமுறை பார்த்துக் கொள்கிறேன் அந்தகுரல் காதை எட்டியதும் எனக்குள் சுவாரஸ்யம் எத்தனை முறை அந்த குரலில் காதலின் ஸ்பரிசத்தை உணர்ந்திருப்பேன். அருகில் வந்தான் கருகிய என் உடல் அவனுக்கு எந்தவித அருவெறுப்பையும் தரவில்லை போலும், வெறித்தவன் என் பெண்மையின் மீது இந்தப் பக்கம் இன்னும் கருகாமதான் இருக்கு என்று உதிர்த்த வார்த்தைகளில் பிணம்தின்னிகழுகின் சதைதின்னும் வாசம் இருந்தது?!