ஆயிரம் வார்த்தைகள் உணர்த்த முடியாத உணர்வினை ஒரு சொட்டுக் கண்ணீர் உணர்த்திவிடும். இங்கு கவியின் கண்ணீர் பல நாட்கள் வராமல், திடீரென வந்த கார்ப்பரேஷன் தண்ணீரைப் போல வேகமாக வந்தது.
கவியால் கண்ணீரை அடக்க முடியவில்லை. சில நேரங்களில் ஆறுதல் வார்த்தைகளைவிட மௌனமாய் தலை கோதும் ஸ்பரிசம் ‘ஆழியை அணுவில் புகுத்தியது’ போல சொல்ல இயலாத உணர்வைத் தரும். அதனால் ராம் எதுவும் பேசாமல் வாஞ்சையுடன் தலையை வருடினான்.
சிறிது நேரம் அழுது ஓய்ந்த கவியின் மனதில் வெண் பளிங்குக் கற்களைப் போன்ற தெளிவு இருந்தது. ‘விழி அசைவிலேயே தன் மனதின் எண்ணங்கள் அனைத்தையும் புரிந்துகொள்ளும் வாழ்க்கைத் துணையோ, நட்போ இதுவரை யாருக்கும் கிடைத்ததில்லை’ என்ற பாலகுமாரன் அவர்களின் கூற்று தவறோ என்று கவி உணர்ந்தாள். அண்ணன் என்ற நட்பு தனக்கு அரணாக இருப்பதை அறிந்து ஆறுதல் அடைந்தாள்.
சிறு செருமலுடன் மௌனத்தைக் கலைத்தான் ராம்.
"இப்ப சொல்லு கவி. யார் இந்தப் பர்தா பொண்ணு?..” என்று ஆவலுடன் காதுகளுக்குச் சாணைப் பிடித்தான்.
கவியின் உதடுகள் மெல்ல அசைந்தன. அதில் அவள் பழைய நினைவுகளைப் பன்னீர் தெளித்து எழுப்பிக்கொண்டிருந்தாள். "ராம்... தியா இறந்தவுடன் என் மனதில் நம் பள்ளியில்தான் சில தவறுகள் நடக்கின்றன என்று தோன்றியது. அதனால் பள்ளிக்குச் சென்றேன். நான் யார் என்று சந்தேகம் வராதவண்ணம் பள்ளியை நோட்டமிட்டேன். அப்போது வாட்ச்மேன் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் ஏதோ கொடுத்துக்கொண்டிருந்தார்.
என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை நான் வாட்ச்மேனைக் கவனிப்பதையும் பின்தொடர்வதையும் ஒரு ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டே இருந்தன. அந்த கண்களுக்குச் சொந்தக்காரர் உடனே என்னைத் தனிமையில் சந்தித்து, வாட்ச்மேன் என்னென்ன அட்டூழியம் செய்கிறான் என்று சொன்னார்.”
"நம் பள்ளியின் வாட்ச்மேன் குடும்பஸ்தன் ஆச்சே, அவரா கெட்டவர்?" என்று ஆச்சரியமாக வினா எழுப்பினான் ராம்.
"ராம் சாதாரண கெட்டவர் இல்லை, கொலை பாதகன். வாட்ச்மேன் அவன் ஏரியாவிலிருந்து கஞ்சா, பிரவுன் சுகர் போன்ற போதைப் பொருட்களை வாங்கி, அதைப் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வான். அது மட்டுமல்லாமல், மாணவிகள் விளையாடும்போது அவர்கள் அங்க அசைவுகளை மோசமான ஆங்கிளில் வீடியோ எடுத்து அதையும் மாணவர்களுக்குப் பணத்துக்காக விற்பனை செய்வான். இதுபோன்ற படு பாதகமான செயல்களை எல்லாம் செய்துவந்துள்ளான். பெண்கள் கழிவறை செல்லும்போது ரகசியமாகப் பின்தொடர்வது போன்ற கீழ்த்தரமான வேலைகளையும் அந்த ஆள் செய்துள்ளான். ஏன் இங்கு வந்தீர்கள் என்று மாணவிகள் கேட்டால், ‘தொட்டியில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்க வந்தேன். கழிவறை சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்க வந்தேன்’ என ஏதோ ஒரு காரணம் சொல்லிச் சமாளித்துவிடுவான். இதனாலேயே நிறையக் குழந்தைகள் கழிவறை வரவே பயந்து பயந்து இயற்கை உபாதைகளைக் கண்ட்ரோல் செய்து உடல் நோய்களுக்கு ஆளாகித் தவித்ததை நான் ஆதாரத்துடன் அறிந்தேன் என்று அந்த கண்களுக்குச் சொந்தமான பெண் என்னிடம் சொன்னாள்" என்று ராமிடம் விவரித்தாள்.
"கவி, அந்த ஜோடி கண்கள்தான் பர்தா பெண்ணா?" என்று கேட்டான் ராம்.
"ஆமாம் ராம்" என்ற கவியிடம், “சரி கவி, விரைவில் சங்கர்லாலி என்று பெயர் மாற்றம் செய்யப்படுவாயாக" என்று கவியை கலாய்த்தான். வெளியில் கதை கேட்டுக்கொண்டிருந்த திலகாவிற்கு ஒன்றும் இருப்புக் கொள்ளவில்லை. என்ன நடக்குதுன்னு சீக்கிரம் தெரிந்துகொள்ள வேண்டி நெளிந்துகொண்டிருந்தாள். "எனக்கெல்லாம் சங்கர்லால் என்ற பெயர் வைத்தால், சங்கர்லால் ஆவியாக வந்து உன்னை மிரட்டப் போகிறார்" என்று ராமிற்கு பதில் கவுண்டர் கொடுத்தாள் கவி.
"சரி அப்புறம் என்ன ஆச்சு? வாட்ச்மேனை பற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்க வேண்டியதுதானே" என்ற ராமிடம்....
"மாணவிகள் அதையும் செய்தார்கள்" என்று பதிலளித்தாள். "பிரின்சிபல் வாட்ச்மேனை அழைத்து விசாரிக்கும்போது, அழுது ஆர்ப்பாட்டம் செய்து, ‘நான் வயதானவன். மாணவிகள் எனக்குக் குழந்தைகள் மாதிரி. நான் அப்படி செய்வேனா?’ என்று அம்புலி மாமா கதையெல்லாம் விட்டான். ‘மாணவிகள் வேண்டுமென்றே என்னைக் கிண்டல் செய்து கலாட்டா பண்ணுவாங்க, அவர்களைக் கண்டித்ததற்குப் பழியை என் மீது போடுகிறார்கள்’ என்று ஏதேதோ பயாஸ்கோப் காட்டி, பிரின்சிபாலிடம் கெஞ்சி, அவர் மனசை மாற்றி தைரியமாக தப்பு பண்ண ஆரம்பித்தான் என்று வாட்ச்மேன் என்னும் அரக்கனின் வண்டவாளங்களையெல்லாம் தண்டவாளம் ஏற்றினாள் பர்தா பெண்" என்று அந்தப் பெண் சொன்னதை எல்லாம் ராமிற்கு டிரான்ஸ்ஃபர் செய்துகொண்டிருந்தாள் கவி.
"வாட்ச்மேனின் அட்டூழியங்களுக்கு எல்லாம் முடிவு கட்ட நினைத்து அவனை சூரசம்ஹாரம் செய்தோம். பார்ப்பவர்களுக்கு ஹார்ட்அட்டாக் போல ஒரு மாயை உருவாக்கினோம். ஆனால் வாட்ச்மேனின் மரணம் திட்டமிட்ட கொலைதான்" என்று சந்திரமுகி ஜோதிகா மாதிரி கண்களை உருட்டி ஆக்ரோஷத்துடன் சொல்லிக்கொண்டிருந்தாள் கவி.
பர்தா பெண் அந்த பள்ளியைச் சேர்ந்த பெண்தான் என்பதைத் திட்டவட்டமாகப் புரிந்துகொண்டான் ராம். அந்தப் பெண் யாராக இருக்கும்? எப்படி வாட்ச்மேனை கொலை செய்திருப்பார்கள்? என்று பொங்கிவரும் சோப்பு நுரையைப் போன்ற வினாக்கள் மனதில் ததும்ப, கண்களை வியப்பாய் விரித்து கவியையே பார்த்துக்கொண்டிருந்தான் ராம்.
அவள் அடுத்த குண்டை எடுத்து அவனிடம் வீசினாள்.
( திக்திக் தொடரும்..)
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #45