Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #27

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

marana muhurtham part 27

 

எல்லோருக்குள்ளும் இருக்கும் பொதுவான எண்ணம் என்னவென்றால், திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்தான் அதிகமாகப் பிரச்சனைகள் இருக்கும் என்பதாகும். ஆனால் அது ஆகாதவர்களைக் கேட்டால்தான், அந்த எண்ணம் எவ்வளவு பெரிய தவறு என்பது புரியும். 

 

பாவம் தியாவும் மலையளவு பிரச்சனைகளை மனதில் அடக்கி வைத்துக்கொண்டு, கடைசியில் அதன் எடை அழுத்தி அழுத்தி மண்ணிலேயே புதைந்தவள் போல் ஆகிவிட்டாள். 

 

தியா தொடர்பான மர்ம முடிச்சு அவிழுமா என்று காத்திருந்த நொடியில், கதவு அதிர்ந்து அதிரவைத்தது, ’அப்பாவோ...’ என்ற அச்சத்தில் சில நொடிகள் ஐஸ் கட்டியாய் உறைந்துபோனாள். பின்னர் ’யாராக இருந்தாலும் இருக்கட்டும். உண்மைக்குப் போராடும் நாம் ஏன் பயப்பட வேண்டும்? அப்பாவாக இருந்தாலும் உங்கள் நடவடிக்கை சரியில்லை. உங்கள் மீது சந்தேகம் வருகிறது. பள்ளியில் என்ன நடக்கிறது... என்று சொல்லிவிடுவோம். மிஞ்சி அவரால் என்ன செய்யமுடியும்? அதிரடி நடவடிக்கை என்று நினைத்துக்கொண்டு, என்னை வீட்டுக்குள் போட்டுக் கொஞ்ச நாள் பூட்டுவார். அவ்வளவுதானே? பூட்டட்டும்.  

 

இந்த அறைக்குள்ளேயே என்னைக் குழிதோண்டி புதைத்துவிடவாப் போகிறார்? எப்படியும் என்னை அவர் ஒருநாள் விடுவிடுத்துதானே ஆகணும்? இல்லை என்றாலும், தியா விசயத்தை அவள் குடும்பம் உட்பட அனைவரிடமும் மெல்ல மெல்ல சந்தேகத்தைப் பற்ற வைத்தாகிவிட்டது. அதனால் விவகாரம் எரிந்து புகைந்து வெளியே வந்துதானே ஆகணும். ஷாலு, பர்தா எல்லாம் இருக்கும்போது தியா விவகாரத்தை இனி யாராலும் புதைக்க முடியாது...’

 

இப்படி தனக்குள் யுத்த அணுக்களை ஒரே நொடியில் உருவாக்கிக்கொண்டவள்... தைரியமாகக் கதவைத் திறக்க முன்வந்தாள்.

 

நெருக்கடி முற்றுகிறபோது அதுவே ஒரு மூர்க்கத்தைத் தரும். அப்படிப்பட்ட மூர்க்கம் அவளுக்கு உண்டானது.

 

அதனால்...

”யார் கதவைத் தட்றது?” என்று கோபத்துடன் கதவைத் திறந்தாள். அங்கே, அப்பா எஸ்.கே.எஸ். இல்லை.

 

ராம்தான் நின்றுகொண்டிருந்தான்.

’அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டாள் கவி.

"என்னாச்சு ராம்" என்றாள், ஒரே நொடியில் தன்னை இயல்பாக்கிக்கொண்டு. அந்த தொனியில் அவளையும் மீறி  எரிச்சல்  வெளிப்பட்டது,

"கார் சாவிய வச்சிட்டு போய்ட்டேன்" என அறையைக் கண்களால் மேய்ந்தான். அங்கிருந்த டீபாயின் மீது சாவி இருந்தது.

 

சட்டென்று ஓடிச்சென்று சாவியை எடுத்துக்கொண்டு பட்டென்று திரும்பினான்.

"என்னாச்சு கவி?  ரொம்ப சோகமா இருக்கற? அழுதியா? கண்ணு சிவந்திருக்கு?" என்று குடைந்தான்.

"டேய் நீ  வெளில போய் இரண்டு நிமிடம் இருக்குமா? அதுக்குள்ள என்ன பிரச்சனை இருக்கு நான் அழறதுக்கு? நான், மத்தவங்களை அழவைக்காம இருந்தா போதாதா?", என்று அவனை விரட்டினாள்.

"ஒகே டா..  பை" என்று  சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தான்.

"அப்பாடா...” என்று பெருமூச்சு விட்டபடி கதவைச் சாத்தி, செல்லை ஆன் பண்ணினாள்.
தியாவின் இறுதி வாக்குமூலம்... தொடர்ந்தது.

 

அதில் தியா, கவியையும், ஷாலுவையும் பிரிந்து துடித்ததைப் பற்றி எழுதியதைப் படிக்கும்போதே கவியின் மனம் அழுதது.  

 

அந்த வேளச்சேரி கே.எம்.ஹெச்.எஸ்.எஸ். பள்ளியில் முதல் நாள் வகுப்பறைக்குச் சென்றபோதே, தியாவிற்கு அந்த வகுப்பானது புலிக் குகைக்குள் நுழைவது போன்ற ஒரு பயங்கரத்தை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டிருந்தாள்.

 

கவியின் உடலிலும் தியாவின் பதற்றம் பரவியது.

”சரி, யாரோ,  யாருக்கோ, எந்த வகையிலோ டார்ச்சர் கொடுத்தால் நமக்கென்ன? ஓநாய்களும் பலியாடுகளும் பதற்றத்தை உண்டாக்கினாலும், காலம் பார்த்துக்கொள்ளட்டும்... நமக்குப் படிப்புதான் முக்கியம் என்று காந்தியடிகளின் ’குரங்கு பொம்மைகள்’ போல அமைதியாகப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால்...” என்று அந்தப் பள்ளியில் தான் பார்த்ததையும் அங்கே நடந்ததையும் திகிலோடு சொல்லிக்கொண்டிருந்தாள். 

 

அதைப் படிக்கப்  படிக்க நம் பள்ளியிலா இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கிறது? என்று கொதிக்க ஆரம்பித்தாள். 

 

அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வு இன்றியமையாத ஒன்று. அதற்கு ஆசிரியர்கள் மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் ஒருமுறை. புனிதமான ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு அந்த மார்க்கை காரணம் காட்டி மாணவிகளை அடக்கி ஆள நினைப்பது, அடிமையாக்கி அசிங்கமாக நடப்பது.. நர மாசிசம் சாப்பிடும் செயலைவிடவும் கொடியது. தியா சொன்னதையெல்லாம் கேட்டு, கவி நெருப்பாற்றில் நீந்தினாள்,  பனிப்பாறையில் வெற்றுடம்புடன் படுத்ததைப் போல் துடித்தாள். 

 

அடுத்து தியா தனக்கு நேர்ந்ததை விவரிக்கத் தொடங்கியபோது... கவி நடுங்கினாள்; மிரண்டாள்; வியர்த்துப்போனாள். பிறகு திடீர்க் கோபம் பொங்க, தன்னை மறந்து... அங்கிருந்த கண்ணாடி டீபாயின் மீது கைகளால் குத்தினாள். படீர் என அது உடைந்து தெறித்தது. கவியின் கைகளில் எல்லாம் ரத்தம் கசிந்து சொட்டியது. எல்லார் மீதும் வெறுப்பு வந்தது. இந்த உலக உருண்டையை வேகமாக உதைத்தே இரண்டாக உடைத்துவிட வேண்டும் போலிருந்தது.  ஒரு வாளை எடுத்து, கறி வெட்டுவது போல, சக்..சக்..சக்.. என்று அவர்களை வெட்டிக் குதற வேண்டும் போல ஆத்திரம் கொப்பளித்தது. 

 

அப்படியே திகைத்துப் போய்... தரையின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்தாள். அவள் கண்களில் கோவைப்பழம் பழுத்தன. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தன் அறையிலேயே அமர்ந்து அழுதாள். இதயம் வெடித்துவிடும் போலிருந்தது.

 

எதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இறங்கி புலனாய்வில் இறங்கினாளோ, இப்போது அதையெல்லாம் ஏன் தெரிந்துகொண்டோம் என்று மருண்டாள். அவள் மீதே அவளுக்கு வெறுப்பு உண்டானது. 

 

கடைசியில் ஏதோ முடிவுக்கு வந்தவளாக எழுந்து, யாருக்கோ ஃபோன் பண்ணினாள் கவி. பிறகு அறையிலிருந்து வெளியே வந்தாள்.

 

அம்மா, நடு ஹாலில் அமர்ந்து எதையோ படித்துக்கொண்டிருக்க, அவரை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் வெளியே நடந்தாள்.

 

அவளது முகம், தோற்றம், நடை எல்லாம் அம்மா திலகாவைக் கலவரப்படுத்த...

“கவி, எங்க கிளம்புற?” என்றார் திலகா. பதில் சொல்லாமல் கவி, நடக்க... ”ஏய் கவி, எங்க போற? என்னாச்சு உனக்கு?” என்று எழுந்துவந்து கேட்டார் திலகா.

 

அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்த கவி...

“நான் எங்க போறேன்னு உனக்கு கட்டாயம் தெரியணுமாம்மா?” என்றாள்.

“ஆமாண்டி... உங்க அப்பா உன்னைப் பத்திக் கேட்டா என்னன்னு சொல்றது?” என்றார் திலகா.

 

அதற்கு கவி சொன்ன பதில்... உடம்பெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல அம்மா திலகாவை அதிரவைத்தது.

 

(திக் திக் தொடரும்)
 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #26