Skip to main content

"எப்பொழுது பெண்மையை உணர்ந்தேனோ, அன்றே ஏதோ ஒரு வகையில் தாய்மையையும் உணர்ந்தேன்!" - லதா சரவணன் எழுதும் 'இப்படியும் இவர்கள்' #29

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

ுப


இந்தக் கடிதம் நான் என் அன்பு மகனுக்காக எழுதுவது. இருபத்தியிரண்டு வருடங்களின் பந்தம் இன்று நீள்கிறது என்று நீ நினைக்கலாம். ஆனால் என்று பெண்மையை உணர்ந்தேனோ அன்றே ஏதோ ஒரு வகையில் தாய்மையினையும் உணர்ந்திருக்கிறேன். அதை முழுமை பெறச் செய்தது நீதான். என் வேதனைகள், வலிகள் உன்னை வந்தடையக் கூடாதென்று விழிப்புணர்வாய் இருந்தேன். சுற்றிலும் இருள் மங்கியிருந்தாலும் என் விழிகளின் வெளிச்சத்தில் உனக்கு பாதை அமைத்துத் தர வேண்டும் என்று ஏங்கியிருந்தேன். எதையெல்லாம் பார்த்து ஏக்கம் கொண்டேனோ அதையெல்லாம் உனக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கடலின் மேல் நீர்குமிழியைப் போல எதிர்நீச்சல் போட்டு, தாய்மையை எனக்கு உணரச் செய்யும் முன்பே நான் உனக்கு மனதளவில் தாயாகிப்போனேன்.


அடிவயிற்றைப் புரட்டி இரத்தமாய் பீறிட்டு வாய் வழி சுரந்தபோது உணர்ந்தேன் நீ ஜனித்துவிட்டாய், எனக்குள் ஒரு பரவசம். என் மாதாந்திர விலக்கில் இருந்து விலக்கப்பட்டு, "இவ இந்த மாசமாவது..." என்று ஏறியிருந்த உறவின் புருவ முடிச்சினை அவிழ்க்க நீ உதித்திருக்கிறாய். எப்படிக் கேட்பது யாரிடம் சொல்வது அன்றைக்கு என்னிடம் அலைபேசியில்லை என் அன்னைக்கு சொல்லிட, நீ குழந்தையாய் எண்ணிக் கொண்டிருக்கும் நானே இன்னொரு குழந்தைக்குத் தாயாகப் போகிறேன் என்று! 

மறுதினம் மதியான வெயிலில் மருத்துவ மனையில் அந்தப் பரிசோதனைக் குப்பியில் இரண்டு மூன்று சுட்டுகள் சிறுநீர் கொண்டு சோதித்த போது தான் அறிந்தேன் இரு கோடுகளின் அடர்த்தியில் என் வாழ்வின் முழுமைக்கான ஆதாரமாய் நீ! அந்தச் செல்லச் சுமையைச் சுமக்கத் தொடங்கியிருக்கிறேன் என்று! என் இரத்தத் திட்டுக்களோடு, மெல்ல மெல்ல சுவாசத்திற்குள் பங்கு போடும் என் கட்டித் தங்கம் மெருகேறுகிறது என்று, கருப்பையின் உட்பக்கச் சுவரில் உன் முற்றுப் பெறாத விரல்களில் நீ கோலமிட்ட அன்று, இன்னதென்று உணராதவொரு உணர்வு உள்ளங்கையில் உணர்ந்தேன் உன் துடிப்பை, இடுப்புச் சேலையை விலக்கிப் பார்க்கும் போது தெரியும் அங்குமிங்குமாய் நீ முட்டி மோதி ஓடிப் பிடித்து என்னுடன் விளையாடுவது இலேசாகப் புரண்டு விட்டால் நான் இருக்கிறேன் ஜாக்கிரதை என எச்சரிப்பாயே?! எனது சுவாசக்குழாயையும் உணவுக்குழாயினையும் வாடகைக்கு எடுத்த நீ என்னை மொத்தமாய் சிறையெடுத்து விட்டாய்.

ஒரேயொரு கதிரியக்கப் படத்தில் கருப்பு நிறத்தில் உருவமாய் உன்னைக் கண்டபோது திகைப்பில் நகைப்பூத்தேன் பிரமிப்பில் ஒரு முறை, சந்தோஷத்தில் ஒரு முறை என்னை நம்பி வளரும் உன்னை நல்லபடியாய் நிலம் சேர்க்க வேண்டுமே என்ற பயத்தில் ஒரு முறை என, பலமுறை அழுதிருக்கிறேன் பிறர் அறியாமல். வயிற்றில் பிள்ளை இருக்கும்போது நல்ல நினைவுகளை வளர்த்துக் கொள், நல்ல புத்தகங்களைப் படி, சுற்றிலும் பல உரையாடல்களில் பிறந்ததென்னவோ பிதற்றல்களாய் எனக்குப்பட்டது. ஆனால் எனக்குள் என் சுக துக்கங்களைக் கண்ணீரைப் பார்த்து, வருத்தங்களை வருடல்களாய் ஏற்று நீ வயிற்றுக்குள் வளர்ந்தாய்.  சிறு வளையல்களின் ஓசையில் என் இருப்பை நான் உனக்கு அனுதினமும் உணர்த்தினேன். வெளிவராமலேயே சுடுதண்ணீரில் என் வயிற்றினுள்ளேயே நனைந்தாய். தட்டுத் தடுமாறி தலைப்பிரசவம் உபகரணங்களின் உதவிகள் இல்லை வளர்ச்சியில்லை பச்சைப்பிள்ளைக்கு என்று அவசரப்பிரிவில் அறுவைச்சிகிச்சை ஆளனுப்பிட, மயக்கம் கொடுக்கும் முன் சிலமணிநேரம் எனை ஈன்ற அன்னை நான் ஈன்றிடப் போகும் கன்றுக்காய் கடவுளின் சந்நதியில்! சடுதியில் பிள்ளை சுகப்பிரசவமாய் பிறக்க பிரசவலி கொள்ளச் செய்தது. அன்னையின் பிராத்தனையா? அல்லது கடவுளின் அனுக்கிரகமா? இரண்டுமே!

 


முதலுதவிக்குப் பிறகு, பிரசவத்தின் சுரீர் என்ற வலியில் அம்மாவை கஷ்டப்படுத்தப் போகிறாய் என்ற எண்ணம். எந்த வசதியும் இல்லையே பிள்ளைக்கும் அன்னைக்கும் வேறு ஏதாவது சிக்கலாகிவிட்டால் என்ற பயத்தையெல்லாம் தவிடு பொடியாக்கி எதற்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர் தயாரா வைச்சிக்கோ, அப்பறம் ஆம்புலன்ஸுக்குப் போன் பண்ணிடு ஏதும் பிரச்சனைன்னா அவங்க வீட்டுக்குப் பதில் சொல்ல முடியாதுடீ, எட்டு ஒன்பது பேர் தன் பணி நேரத்தையும் மறந்து தாயையும் சேயையும் நலமாய்ப் பிரிக்க வருத்தப்பட, சரியாய்க் கழுவாத நிலையில் முதல் பிள்ளை சற்று கதறிக்கொண்டே இருக்க, அதே வேகத்தில் அந்த நர்ஸ் என் வயிற்றின் மேல் அமர்ந்தார் என்னாச்சு? 

 


பயப்படாதே பிள்ளை தலை திரும்பியிருக்கு அநேகமா கால் வழியா வரும் போல, அதிஷ்டம் டி, துர்க்கையின் அம்சம் அதுவும் ராகுகாலம் ஆரம்பிச்சிடுச்சி அவரவர் நம்பிக்கையில், 17 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு முதலில் இரத்தமும், நீரும் கலந்து விழுந்தாய். முதலில் பிள்ளை அழுகலை! என்று மருத்துவரின் சொற்களில் சட்டென்று உன் பிஞ்சு முதுகில் ஒரு அடி! ஏய்? என்ற கூக்குரல் உன்னிடம், பாதி மயக்கத்தில் இருந்த என்னிடம் உன் பிள்ளைக்குத் திமிரைப் பார்த்தியா ஏய்ன்னு கூப்பிடறா பிறந்ததும் என்று மருத்துவர் சிரிக்க விடிந்தால் தீபாவளி. பண்டிகையின் மகிழ்ச்சியோடு பிள்ளையின் வரத்தும் சேர்ந்து கொள்ள, எல்லார் முகத்திலும் பயம் விலகிய உணர்வு மகிழ்ச்சி! பார்க்கணுமா என்று எனக்கே கேட்காத அளவிற்குப் பலவீனமான குரலில் நான், ஒருமுறை காட்டியபின் சுத்தப்படுத்த எடுத்துச் செல்ல அளவுக்கதிகமான ரத்தப்போக்கும், அயர்ச்சியும், சேர்ந்து நான் இன்ஸ்டென்ட் மயக்கத்திற்குப் போய் எழுந்திருப்பதற்குள் என் குழந்தைகள் இருவரும் கண்ணாடிப் பெட்டிக்காய் மற்றொரு மருத்துவமனையில்! 
 

 

ரக

 

இதோ இருபத்தியிரண்டு தீபாவளி கடந்துவிட்டது இன்றும் என் கண்களுக்கு நீ குழந்தைதான், குப்புற விழுந்து, அமர்ந்து, தவழ்ந்து, தத்தி தாவி நடந்து, மழலையில் பிதற்றி, உன்னுடன் டோராவும், டாம் அண்ட் ஜெர்ரியும் ரசித்து, இப்போது சன்மியூசிக்கில் பாடல் கேட்கும் போது தோன்றுகிறது உன் வளர்ச்சி! உடலளவில் வளர்ந்தாலும் மனதளவில் எனது அருகாமைக்கு ஏங்கிய ஐந்துநாள் குழந்தைதான் நீ! உங்கள் கரங்களுக்குள் பாதுகாக்கும் பொக்கிஷமாய் நீ எனை புதைத்திருக்கிறாய். நீ முகம் பார்க்கத் தொடங்கிய போது முகநூல் இல்லை, வலம் வந்த நேரத்தில் வாட்ஸ் அப்பில்லை, நம் உலகம் முழுவதும் நம்மை சுற்றியே சிருஷ்டிக்கப்பட்டு இருந்தது. இப்போது அவையெல்லாம் நம்மை நெட்டித்தள்ள நம் படுக்கையில் வந்து பங்கு கொண்டு விட்டது. மகனே நீ அரைகுறை இருளில் போர்வைக்குள்ளிருந்து மணிக்கணக்காய் கதைக்கிறாய். உரிமையும் அக்கறையும் இருந்தும் யார் என்று கேள்வி கேட்க எனக்கும் ஆசைதான். 

ஆனால் தற்போது சில நாட்களாக நீ என்னை அழகாக விலக்குகிறாயே?! எனக்கான உன் தேடல்களில் வெறும் தேவைகள் மட்டுமே நிரம்பி வழிகிறது. அலட்சியத்தின் உச்சம் என்ன? அறியாமையை எள்ளி நகையாடுவது எப்படியென்பதையும் நீ எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறாயே? அந்தப் பயத்தில் தான்.... காதல் உன்னைக் கட்டிப் போட்டு விட்டது அது தாய்மையை மறக்கச் செய்து காமத்தை உன்னில் விதைக்கச் செய்துவிட்டது என்று பொம்மை முத்தங்களை அந்த தொடுதிரையில் நீ பறக்கச் செய்யும் போது கண் கூசும் வார்தைகளின் உரையாடலை ஏதேச்சையாக காண நேர்ந்த போதுமே நான் கண்டு கொண்டேன். இதற்கும் மேல் நண்பர்களாய் சேர்ந்து கொண்டு ஒரு பெண்ணைச் சிதைத்து இருக்கிறாயே அதையும் நள்ளிரவில் நயவஞ்சகமாய் ரசிக்கிறாயே? அன்றே தெரிந்து கொண்டேன் உன் அரைகுறைப் பார்வையின் அன்னையென் தனத்தின் மீது கூட எப்படி படிந்திருக்கும் என்று!


சிதைக்கப்பட்ட அந்த உறுப்பைப் போல் ஒன்றில்தான் நீயும் வெளியே உலகத்தைச் சேர்ந்தாய் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை மகனே நான் உனக்கு இந்த உடற்பசியைக் கற்றுத் தரவில்லையே. நாளை உன் பிறந்தநாள் ஆனால் அந்த சூரிய உதயத்தை நீ தரிசிக்க இருக்க மாட்டாய். அதிர்ச்சியாகத்தான் உள்ளது, எனக்கும் இன்னொரு பட்சி மாட்டியிருக்கிறாள் காலையில் உனக்குப் பிறந்தநாள் பரிசு என்று யார் கேட்கிறார்கள் என்றே தெரியாமல் உளறிய உன் நயவஞ்ச நட்பின் குரலில் நாளை உன் உடலின் வெறியைத் தணிக்கப்போகும் அந்தப் பெண்ணின் மேல் எழுந்த பச்சாதாபம் தான் இதைச் செய்ய வைத்தது. கறந்து வைத்த பாலின் மிச்சம் வைத்த சில சொட்டுக்களைக் கண்டிருந்தால் அதில் நீர்த்துப்போயிருந்த மாத்திரையின் பொடியின் துகள்களைக் கண்டிருக்கலாம். ஆனால் நாளைய இன்பத்தின் ஆசை உன்னை அதை ஆராய விடவில்லை. என்ன தவறு செய்தாலும் தாய் பொறுப்பாள் ஆனால், தன்னைப் போன்ற ஒரு பெண்மையைச் சிதைக்கும் மகனை அவள் பொறுக்க மாட்டாள். 
 

http://onelink.to/nknapp


போய் வா மகனே.... பிறந்த நாளே உனக்கு இறந்த நாளாகட்டும் அடுத்த முறை வேறொரு அன்னைக்கு நல்ல மகனாய் பிற... அன்றே உன் சூலை தரிக்க விடாமல் இருந்திருந்தால் மலடி என்ற ஒரு பட்டத்தோடு போயிருக்கும் என் வாழ்வு. ஆனால் நீ சிதைக்கும் அத்தனை மலர்களும் ஒவ்வொரு முறையும் நீயும் ஒரு அன்னைக்கு பிறந்தவன்தானே என்ற கேள்வியைச் சுமந்து கொண்டே உன் அரக்கத்தனத்தைச் சகித்திருக்கும் உனக்கு இன்று உலகிலிருந்து விடுதலை ஆனால் எனக்கு?! உனைச் சுமந்த அடிவயிற்றைக் கட்டிக் கொண்டு அழுகிறேன் நேர்மையான தாயின் தொடுதலை உன் உடல் இனி அறியப்போவதில்லை. முற்றுப் புள்ளியோடு கடிதம் தன் முடிவுரையை எழுதிக்கொண்டது. 

அன்புடன்,
அம்மா.

 

 

சார்ந்த செய்திகள்