துரோகத்திற்கு மட்டுமே மூச்சு முட்டும் அளவிற்கு மனப்பந்தை மூழ்கடிப்பதைப் போன்ற வலி இருக்கும். அந்த வலி தரும் வேதனைக்கு எந்த மருந்தும் தீர்வைத் தருவதில்லை அப்படியொரு துரோகத்தின் வெளிப்பாடுதான் ஜானகியின் இந்தக் கதை. ஜானகிக்கு இத்தனை சீக்கிரம் கல்யாண ஆசை வந்திருக்க வேண்டாம் என்றுதான் அவருடைய தந்தை விஸ்வதிற்கு தோன்றியது. என்னதான் அத்தைப் பையனாக இருந்தாலும் அவன் தன்னுடைய நான்கு பெண்களில் யாராவது ஒருத்திக்கு கணவனாக வரவேண்டியவனாக இருந்தாலும் சட்டென்று ஜானகியைக் காட்டி இவளைத்தான் கல்யாணம் செய்துக்கொள்ளப்போகிறேன் என்று அவனும், அவன்தான் என் கணவன் என்று அவளும் முடிவெடுப்பார்கள் என்று அவர் யோசித்திருக்கவில்லை, தங்கையின் சுறுசுறுப்பு சுட்டுப்போட்டாலும் பெரியவளுக்கு வராது. அது ஒரு கட்டுப்பெட்டி என்பதால் அவரே ஒரு ஏப்பை சாப்பையான மாப்பிள்ளைக்கு கட்டிவைத்து அவசர அவசரமாக ஜானகிக்கு மணமுடித்தார் காரணம் காதும் காதும் வைத்தாற்போல ஜானகி மூன்று மாதங்கள் குளிக்கவில்லை என்பதுதான்.
எதிர்பாராத ஒன்று நடக்கும் போது ஏதாவது ஒன்று தாழும் மற்றொன்று உயரும் என்பது உலகநியதி. அப்படி தாழ்ந்துதான் போனார்கள் ஜானகியும் ரவீந்திரனும். காதல் கல்யாணம் என்று காட்டிய அவசரம் குருவிகள் கலைத்த அரிசி மாவுக் கோலமாய் ஆனது. ஆறுவருடங்கள் முதல் குழந்தையை குறைப் பிரசவத்தில் மண்ணுக்கு தாரை வார்த்தப் பின்னும் நான்கைந்து அபார்ஷன்களைத் தாங்க முடியாமல் ஜானகிக்கு ஜன்னி வந்தது. அதன் பிறகு அவளின் உடலைத் தேற்றி மீண்டும் கருவுற்று இருந்தபோதுதான் அறிந்தாள். தன் கணவனின் தன் ஆண்மையை ஊருக்கு நிரூபிக்க மற்றொரு குடும்பத்தையும் உருவாக்கியிருக்கிறான் என்று! ஜானகியின் வார்த்தைகள் ரவிந்திரனிடம் கேள்விகளாய் முளைத்தன. ஆண்மகனின் திமிர்த்தனம் பட்டவர்த்தமாக ஒவ்வொரு இரவும் ஜானகியின் மனதைப் போலவே அவளின் உடலும் நசுங்கிக்கொண்டு இருந்தது?!
பாட்ஷாவில் ரஜினி ஒரு டயலாக் பேசுவாரே எனக்கு இன்னொரு பெயர் இருக்குன்னு அப்படித்தான் ரவீந்திரனும் ஊர் கூடி திருவிழாவின் மையத்தில் அட்டகாசமாக ஆடிவரும் ஏதோவொரு இறைவனின் அம்சமாய் உயிருடன் ஆட்டின் ரத்தத்தையும் கோழியின் ரத்தத்தையும் ருசிபார்த்துக் கொண்டு இருந்தான். தீவிரமான சாமிகொண்டாடியாம். யார் வைத்த கொள்ளியோ வீடு வெந்து போச்சு என்பதைப் போல கொஞ்சம் கொஞ்சம் ஆக ரவீந்திரனின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் தொழில் இழந்து மதியிழந்து அவனின் செயல்கள் எல்லாம் நடுவாந்தரத்திற்கும் கீழ். மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவன் கற்றுக் கொடுத்த தையல் தொழிலில் நான்காவது பிள்ளையாய் அவனையும் கவனித்து வந்தாள் ஜானகி. பச்சைரத்தம் குடித்தாரே அதனால இருக்குமோ சாமிக்குத்தமாக இருக்கணும் ஜானகி நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதே ஊரிலே சாமியாடும் போது கூட உம் புருஷன் சுத்தபத்தமா இல்லை எனக்குத் தெரிந்து ....இப்படி அநேக இருக்குமோக்கள்....யூகங்களாய்....!
ஐந்து ரூபாய் ரேஷன் அரிசியின் தடிமனான பருக்கைக்கும், உலை கொதிக்கும் போது வீசும் மூடை நாற்றத்திற்கும் தொண்டையையும், மூக்கையும் பழக்கப்படுத்திக்கொண்டார்கள் மூன்று பிள்ளைகளும். காய்ந்து போன இட்லிகளுக்கு கால்கடுக்க நின்று கடன் வாங்கி வரும் பிள்ளைகளின் வறுமை நெஞ்சைப் பிளக்க, காட்டில் வழிதவறும் மானைப்போல வழிதடுமாறினாள் ஜானகி. ஏற்கனவே நான்கு பெண் பிள்ளைகள் திரும்பிப்பார்ப்பதற்குள் இத்தனை வயிற்றைக் கழுவ தன்னால் முடியாது என்று கைவிரித்துவிட தாய்வீடும் கைவிரிக்க, தன் சுமையை தானே முதுகில் சுமக்க மாற்றான்களை உடலில் சுமக்கத் தொடங்கி விட்டாள் ஜானகி. தகவல் தெரிந்து தந்தையின் கைகள் கூட நள்ளிரவில் அந்தரங்கத்தை தொட ச்சீ ... ஆண்கள் என்றாலே மறத்து போய்விட்டது பிரமிளாவின் வசனத்திற்கு அன்று அர்த்தம் புரிந்தது அவளுக்கு ! கால்போன போக்கில் தன் காதலும், காதல் கணவனும் தொலைந்த போது அத்தனை ஒன்றும் ஏமாற்றமும் வருத்தமும் மனதில் குடிகொள்வில்லை, மாறாக வயிற்றின் சுமையிறக்கிய பிள்ளைத்தார்ச்சியின் மனநிலையில் இருந்தாள் ஜானகி.
வருடங்கள் கடந்தது பிள்ளைகளின் வருமானம் ஜானகியின் சுமத்தலை தோள் மாற்றியது ஆனால் சுயம் தொலைந்ததைப் போல தொலைந்து போன ரவீந்திரனும் காலம் போன கடைசியில் வந்து ஒட்டிக்கொண்டான். அம்மா எங்களுக்காக நீ எத்தனையோ கஷ்டப்பட்ட இனிமேலும் கஷ்டப்படாதே என்று சென்றவாரம் வரையில் பேசிக்கொண்டு இருந்த மூத்தமகள் நேற்று காலையில்தான் பக்கத்து தெரு மெக்கானிக்குடன் காதல்வாகனத்தில் காணாமல் போயிருந்தாள். இன்னொரு ஜானகியாய் மகள் உருவாகி விடுவாளோ என்று பயத்தில் நடந்துவிட்ட தவறுக்கு தன்னையே காரணமாய் காட்டி மகனும் ஒதுக்கிவிட இளைய மகனின் அருகில் ஒருவாய் சோற்றுக்கு இறைஞ்சியபடியே ஜானகி. இதில் ரவிந்திரனை எங்கே வைத்துக்கொள்வது ?! சிறிய மகனின் ஆறுதல் எத்தனை நாளைக்கு என்று நெஞ்சில் எழும்போதே தனது கைத்தொழிலான பாழடைந்திருந்த தையல் மிஷனுக்கு எண்ணெய் ஊற்றி ஓட்டிப்பார்த்தாள். கடகடவென்ற அதன் ஒலி பழைய வாழ்க்கையின் நினைவுகளைக் கீறிட, காதலாய் கண்ட கண்களை நினைக்க ஆரம்பித்தது மனது. ஒரு கட்டத்திற்குப் பின் நினைவுகள்தானே வரமாய் போகிறது. இரண்டு வேளை உணவு நம் இருவயிற்றுக்கும் போதும் என்று ரவீந்திரனிடம் மையமாய் பேசிவைத்தாள். புரிந்ததோ இல்லையோ தலையாட்டினான் அவன்.
அதிகாலையில் கோவிலுக்குப் போய்விட்டு நைந்து போன பழைய லுங்கியில் இருக்கும் ரவீந்திரனுக்கு சிறிய கரைப் போட்ட 60 ரூபாய் வேட்டியும் 200 ரூபாய்க்கு சட்டையும் எடுத்து வந்தாள். இதற்கே, வாரம் முழுக்க பழைய துணிகள் தைக்கவேண்டியிருந்தது. தன் உற்ற தோழியான தையல் மிஷினின் மேல் அவற்றை வைத்துவிட்டு ரவீந்திரன் உட்கார்ந்திருக்கும் தட்டியைத் தாண்டி அவனைத் தேடினாள். பிரபு அப்பா எங்கேடா இங்கேதானே இருந்தார். காணோமே! வாயில் புடவையினை கூட அழகாய் உடுத்தியிருந்த அன்னையின் நேர்த்தி வியர்வையில் சன்னமாய் வழிந்தோடும் குங்குமக் கோடு கூட நீண்ட நாளைக்கு முன்பு இப்படி மலர்ச்சியாய் அம்மாவைப் பார்த்திருக்கிறான். மனதின் ஓரம் சட்டென உதறல் அவனுக்கு இருந்தாலும் அவள் முகம் பார்க்காமல், எனக்கென்னமா தெரியும். அவரு எப்போ எங்கே போவாருன்னு நானென்ன கண்டேன்.
வேலையைப் பாரு எங்கயாவது சுத்திட்டு வந்துடுவாரு, ஆருடம் சொல்வதைப் போல சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான். கேள்விகள் குடைந்த மனதை அடக்க வழிதெரியவில்லை ஜானகிக்கு எங்கே போயிருப்பாரு? காலம் முழுமைக்கும் நீதான்னு இப்படி கைவிட்டுப் போய்விட்டாரேன்னு முதல்முறை ரவீந்திரன் காணாமல் போனபோது மனதின் ஓரம் வலித்தது அதன்பிறகு அவன் இரண்டு முறை வந்தது பிறகு மீண்டும் காணாமல் போனது என இருக்கு, இருந்தால் ஒரு கைபிடி அதிகமாக உலைவைக்க வேண்டும் இல்லையென்றால் குறைத்துக்கொள்ளவேண்டும் என்ற மனநிலைக்கு அவள் வந்திருந்தாள். ஆனால், நேற்றைய முடிவின் நிலையில் இன்று ஏதோ பெரியதாக இழந்து விட்டது போல தோன்றியது ஜானகிக்கு. இனிமேல் ரவீந்திரன் என்ற உருவம் தன் கண்களுக்கு புலப்படாமலேயே போய்விடமோ என்று முதன் முறையாக பயந்து யோசித்த ஜானகிக்கு தெரியாது, தன் தந்தையை வடமாநிலத்திற்கு போகும் ஏதோவொரு இரயிலில் அதிகாலையிலேயே பிரபு ஏற்றிவிட்டு வந்தது.
முகம் தெரியாத குழந்தைபோல ஏதோ ஸ்டேஷனில் இறங்கி ஏன் இங்கே அமர்ந்திருக்கிறோம் என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமலேயே சட்டைப்பையில் வைக்கப்பட்ட சில சில்லரைக் காசுகளை தொட்டுப்பார்த்துக் கொண்டு மலங்க மலங்க விழித்திருக்கும் ரவீந்திரனுக்கும் தெரியாமலே போனது பிள்ளையின் துரோகம். நீ போ அம்மா வந்திடுவா என்ற பிரபுவின் கடைசி வார்த்தைகள் ரவீந்திரன் காதுகளில் காலியாகும் ஒவ்வொரு பெட்டியிலும் அவன் ஜானகியைத் தேடிக்கொண்டிருக்கிறான்.
அடுத்த பகுதி - "பிள்ளைகளின் குற்றச்சாட்டுகளை தவிர்கக நினைக்கும் பெற்றோர் அதற்கு லஞ்சம்.." லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #14