Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; இந்தியாவையே மிரட்டும் ஜம்தாரா! - பகுதி 12

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

digital cheating part 12

 

ஜார்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ளது  ஜம்தாரா மாவட்டம். சந்தால் பர்கானாஸ் மண்டலத்தில் (சந்தால் என்பது பழங்குடியின மக்களின் பெயர்) உள்ள ஆறு மாவட்டங்களில் ஒன்று ஜம்தாரா.  காட்டுக்குள் வீடு என்பது போல் காட்டுக்குள் இந்த மாவட்டம் உள்ளது. நெடிதுயர்ந்த  மரங்கள், ஐந்து பேர் சேர்ந்து கட்டிப் பிடித்தாலும் கட்டிப் பிடிக்க முடியாத விட்டம் கொண்ட மரங்கள் நிறைந்த பகுதி. இந்த மாவட்டத்தின் கிழக்கு பகுதிகள் முழுவதும்  மேற்கு வங்க மாநில எல்லையில் உள்ளன. ஜம்தாராவில் இருந்து 20 கிலோ மீட்டர் பயணமானால் மேற்கு வங்க மாநிலத்துக்குள் போய்விடலாம். ஜம்தாராவில் இருந்து அருகிலுள்ள டியோகா மாவட்டத்தை தாண்டினால் பீகார் மாநிலத்துக்குள் போய்விடலாம். விவசாயத்தையே நம்பியுள்ள மாவட்டம் இது. 

 

மாவட்டத் தலைநகரம் என்றால்  புதுக்கோட்டை, திருவாரூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை  போன்று இருக்கும் என நினைத்துவிடாதீர்கள். அது வளர்ந்த கிராமம். ஜம்தாரா மாவட்டத்தில் ஆறு தாலுக்காக்கள் உள்ளன. அவை பேத்பூர், ஜம்தாரா,  கர்மதாந்த்,  குன்தித், நள, நாராயன்பூர். இந்த மாவட்டத்தில் 118 ஊராட்சிகளும் 1161 கிராமங்களும் உள்ளன. ஜம்தாரா ஒன்றியத்தில் மட்டும் 22 ஊராட்சிகள் உள்ளன. இந்த மாவட்டத்திலுள்ள 30 சதவீத மக்கள் பெங்காலி மொழியை பேசி வருகின்றனர்.  அடுத்ததாக சந்தாலி, கோர்தா என்கிற மொழியை பழங்குடியின மக்கள் பேசி வருகின்றனர். இந்தி மொழியை 5 சதவீத மக்கள் மட்டுமே பேசுகின்றனர். 

 

ஜம்தாரா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 7.91 லட்சம். ஜம்தாரா  பேரூராட்சியின் மக்கள் தொகையே 30 ஆயிரம் சொச்சம் தான். மாவட்டத் தலைநகராகவுள்ள இந்த பேரூராட்சியில் அனைத்து வங்கிகளின் கிளைகளும்  உள்ளன. எல்லா மொபைல் நெட் ஒர்க் கம்பெனிகளும் டவர் அமைத்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மாவட்டத்தில் 60 சதவீதத்துக்கும் மேலானவர்களுக்கு வேலையில்லை. காரணம் படிப்பறிவு இல்லாதது. மாவட்டத்தில்  மொத்தமே 22 உயர்நிலைப் பள்ளிகள் தான் உள்ளன. 15 கி.மீ தூரத்துக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 25 கி.மீ தூரத்துக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி இருந்தால் எப்படி படிக்க முடியும்? தமிழ்நாட்டைப் போல் ஊருக்கு ஊர் தொடக்கப்பள்ளி, 5 கி.மீ தூரத்துக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, 10 கி.மீ தூரத்துக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி போன்றும், நினைத்த ஊரில் தனியார் பள்ளிக்கு அனுமதியும் அங்கு  கிடையாது. கல்லூரி என எடுத்துக்கொண்டால் நான்கு தான் உள்ளன. அதேபோல்  எல்லோருக்கும் அடிப்படை கல்வி என சட்டம் சொன்னாலும் எல்லோரும் போய் பள்ளிக்கூடத்தில் அமர்ந்து விடமுடியாது. பட்டியலின மக்கள் படிக்கக் கூடாது. ஏழை படிக்கக் கூடாது எனச் சொல்லும் சாதி ஆதிக்கவாதிகள் நிறைந்த மாநிலம். அதையும்  மீறி படிக்க நினைத்தால் மட்டும் போதாது, போய்வர நல்ல சாலை வேண்டும்.  போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். அதெல்லாம் அவ்வளவாக இல்லாத மாநிலத்தில் எங்கே போய் படிக்க வைப்பது. இதுபோன்ற காரணங்களால் படிப்பறிவு  குறைவு.   இந்த மாவட்டத்தில் பள்ளிகளை விட வங்கிகள் எண்ணிக்கை அதிகம். பொதுத்துறை வங்கிகளின் 24 கிளைகள் இங்கு செயல்படுகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள்,  காவல் நிலையங்கள், மருத்துவமனைகள் எல்லாமே 5 முக்கிய வளரும் கிராமங்களில் மட்டுமே இருக்கும். அங்குதான் வந்து சேவைகளைப் பெறவேண்டும்.

 

படிப்பறிவுதான் இந்த மாவட்ட பழங்குடியின மக்களுக்கு குறைவு. நாங்கள் அதிபுத்திசாலிகள் எங்களால்தான் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என நினைக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகளையும், நாங்கள் நினைத்தால் உலகம் இயங்காது என நினைக்கும் டெக்னாலஜிஸ்ட்டுகளையும் கதறடிக்கும் மக்கள் உள்ள மாவட்டம்  இது.  ஜம்தாரா மாவட்டத்தில் மாவட்ட நிர்வாக கணக்குப்படி 118 ஊராட்சிகளும் 1161 கிராமங்களும் (காவல்துறை கணக்கு 1175) உள்ளன. ஜம்தாரா ஒன்றியத்தில் மட்டும் 22 ஊராட்சிகள். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 5 கிராமங்கள், 10 கிராமங்கள் என  உள்ளன. கர்மதாந்த் ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. இந்த இரண்டு  ஒன்றியத்தில் மட்டும் 240 சொச்சம் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில்  வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்  ஃசைபர் க்ரைம் மோசடி புகார்கள் உள்ளன என்பதுதான் அதிர்ச்சியான உண்மை. இந்தியாவின் ஃசைபர் க்ரைமின் தலைநகரம் என்றால் அது ஜம்தாரா தான்.   

 

ஜம்தாரா சபாகா நம்பர் அய்கா என்கிற பெயரில் இந்த மாவட்டத்திலுள்ள மக்கள் நடத்தும் ஃசைபர் க்ரைம் குறித்து நெட்ஃபிளிக்ஸ் இரண்டு பகுதியாக வெப்சீரியஸ் எடுத்து வெளியிட்டுள்ளது என்றால் இந்த ஊரின் புகழை அறிந்து கொள்ளுங்கள்.  வட இந்தியா மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள ஃசைபர் க்ரைம் போலிஸாருக்கு இந்த மாவட்டம் குறித்து தெரியும்.  மாவட்டத்தில் 6 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த 6 காவல் நிலையத்தின் கீழ் 3  துணை காவல் நிலையங்கள் உள்ளன. ஜம்தாரா மற்றும் நளா என்கிற இரண்டு காவல் நிலையமும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதியுள்ள 7  காவல் நிலையங்கள் எஸ்.ஐ ரேங்க் அதிகாரிகளே நிர்வாகம் செய்கின்றனர். ஜம்தாரா,  கர்மாதந்த் காவல் நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும் சைபர் க்ரைம் குறித்து பதிவாகும் வழக்குகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. ஜம்தாரா அடுத்துள்ள கிராமம் கர்மாதந்த். இது கர்மாதந்த் தாலுக்காவின் தலைநகரம். இங்குள்ள  காவல்நிலையத்துக்கு இந்தியாவின் 15 மாநிலங்களில் இருந்து க்ரைம் அன்ட் சைபர்செல் பிரிவு போலிஸ் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். 2015ல் 23  வழக்குகளில் 38 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். இந்த தாலுக்காவில்  உள்ள சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீது 2017ல் மட்டும் 330 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளது. 100 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார். 2021ல் 61  வழக்குகளும், 2022ல் 60 வழக்குகளும் பதிவாகின.

 

இந்தியா முழுவதிலுமிருந்து சைபர் க்ரைம் புகார்கள் வந்ததால் ஜம்தாராவில் ஃசைபர் க்ரைம் புகார்களை மட்டும் விசாரிக்கவே தனியாக சைபர்செல்  காவல்நிலையம் 2018ல் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில போலீஸாரும் தங்களிடமுள்ள ஆதாரங்களை எடுத்துக்கொண்டு ஜம்தாரா எஸ்.பியை சந்திக்கின்றனர். அவர்கள் கரடுமுரடான பாதையில் ஜம்தாரா, கர்மாதந்த்,  நாராயன்பூர் காவல்நிலையத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகள் இதுவரை தோராயமாக 350 சைபர் மோசடி  குற்றவாளிகளை அதாவது மோசடியாளர்களை சைபர் க்ரைம் பிரிவு போலீஸார்  கைது செய்துள்ளனர்.  முதன்முதலாக இந்த ஜம்தாராவுக்கு டெல்லி க்ரைம் அன்ட் சைபர் யூனிட் போலீஸார் தான் சென்றனர். அதன்பின் மேற்கு வங்கம், ஆந்திரா, தமிழ்நாட்டில்  இருந்தும் அந்த மாவட்டத்துக்கு குற்றவாளிகளைப் பிடிக்க ஆர்டர் பேப்பர்களோடு  சென்றனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் காத்திருந்தது.

 

ஏன்?  எதனால்?  

 

வேட்டை தொடரும்...