Skip to main content

மாயமான பெண்; பணத்திற்காக டார்கெட் செய்யும் இயக்கம் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு:90

Published on 04/12/2024 | Edited on 04/12/2024
detective malathis investigation 90

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.

பொதுவாக பணக்கார குடும்பத்தில் பணிச்சுமையின் காரணமாக கணவர், மனைவி ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க மாட்டார்கள். இது போன்ற சூழலில் இருப்பவர்களை டார்கெட் செய்து அவர்களிடமிருக்கும் பணத்தை பறிக்கும் ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த இயக்கத்தால் டார்கெட் செய்யப்பட்ட ஒரு நபர் என்னிடம் மனைவியை காணவில்லையென்று சொல்லி வந்தார். என்னவென்று கேட்டபோது, மனைவியுடன் அவளின் பெயரில் இருக்கும் சொத்துகள் வேறு ஒரு இயக்கத்திற்கு கை மாற்றப்பட்டிருக்கிறது என்பதை கூறினார். 

எப்படி கை மாற்றப்பட்டிருக்கும் என்று அந்த இயக்கத்தை பின்தொடர்ந்தபோது. அந்த இயக்கம் ஒரு வகுப்பை நடத்துகிறது அந்த வகுப்பில் ஏழைகள், பணக்காரர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வார். அப்படிப்பட்ட அந்த இடத்திற்கு என்னிடம் விசாரிக்க சொன்னவரின் மனைவி சென்றிருக்கிறார். அதன் பிறகு அந்த இயக்கத்தில் வேலை பார்க்கும் நபர்கள் தொடர்ந்து அந்த வகுப்பிற்கு வர சொல்லியிருக்கின்றனர். பின்பு அந்த பெண்ணிடம் இருக்கும் சொத்துகளை அந்த பெண்ணுக்கு தெரியாமல் விசாரித்திருக்கின்றனர். அதன் பின்பு சொத்தை கைமாற்றியிருக்கின்றனர். அந்த பெண்ணிடம் இருந்து கைமாற்றப்பட்ட சொத்துகள் அனைத்தும் அவளுடைய அப்பாவுடையது. அதனால் சுலபமாக கைமாற்றிக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு இந்த வேலையை அந்த இயக்கம் செய்திருக்கிறது.   

என்னிடம் வந்த நபர் இப்போது அந்த சொத்துகளை மீட்பதற்கான வழிகளில் முயற்சித்து வருகிறார். ஆனால் கடைசி வரை அவரின் மனைவி எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் போய்விட்டது. இதை நான் விழிப்புணர்வாகத்தான் சொல்கிறேன். குறிப்பாக அந்த இயக்கத்தினரிடம் சொத்துகள் வைத்துள்ள பெண்கள், நல்ல வேலையில் இருக்கும் பெண்கள் சிக்குகிறார்கள். அப்படி சிக்கியவர்களிடன் மன அமைதி கிடைக்கும் என்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என்றும் சொல்லி அவர்கள் நடத்தும் வகுப்புகளுக்கு வரச்சொல்லி அவர்களுக்கு தெரியாமலேயே ஏமாற்றி வருகிறார்கள் என்றார்.