Skip to main content

பெண்களை வற்புறுத்தி திருமணம் செஞ்சு வச்சா இப்படித்தான் நடக்கும் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 37

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
 detective-malathis-investigation-37

தன் மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று கணவன் அளித்த புகாரில் விசாரித்தபோது கிடைத்த அதிர்ச்சியான தகவல்களைப் பற்றி முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.

ஒரு குழந்தையுடன் அந்த நபர் என்னை பார்க்க வந்திருந்தார். என் மனைவியையும் எங்களது இரண்டாவது குழந்தையையும் காணவில்லை என்றார். அவள் கூட படித்த காதலனுடன் போய்விட்டாள். எனக்கு என் குழந்தை வேண்டும். அவள் எனக்கு தேவையில்லை என்றார். சரி என்று அவருக்கு தெரிந்த தகவல்களை வாங்கினோம். அந்த பெண்ணிற்கு வயது 28, இவருக்கு வயது 40 மேல் இருக்கலாம். முதல் குழந்தை ஐந்தாம் வகுப்பு படிக்கிறது. இரண்டாவது குழந்தை ப்ரி.கே.ஜி  படிக்கிறது.

என்ன பிரச்சனை எதனால் மனைவி விட்டு சென்றார் என்று  கேட்டேன். சமீப காலமாக அந்த காதலனுடன் தொடர்பு அதிகமாக இருந்தது என்றார். சரி போன் நம்பர் கொடுங்கள் மனைவியின் இடத்தை ட்ரேஸ் செய்யலாம் என்றேன். போன் இல்லை அவளிடம். அவனுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதால் நான் பிடுங்கி வைத்துவிட்டேன் என்றார். அந்த பையனை பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா என்று கேட்டேன். அந்த பெண்ணுடைய ஊரில் தான் அவனும் இருக்கிறான் என்பது வரை தான் அவருக்கு தெரிந்திருந்தது. சரி இருவரின் கூட படித்தவர் யாரேனும் இருக்கிறாரா என்று மேலும் விவரம் தெரிந்து கொண்டு எங்கள் வேலையை தொடங்கினோம்.

அவர்கள் ஊருக்குச் சென்று அந்த பெண்ணின் தோழிகளிடம் விசாரித்தோம். விசாரித்ததில் அந்த பெண்ணிற்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை என்று தெரிந்தது. தன்னை வயதான ஒருவரிடம் கட்டி வைத்துவிட்டனர் என்று புலம்புவாள் என்றனர். அந்த காதலனை பற்றி கேட்டபோது, அவள் எல்லாரிடமும் நன்றாகத்தான் பேசுவாள். அந்த பையனிடம் சற்று இன்னும் க்ளோஸாக இருப்பாள் என்றனர். சரி என்று அடுத்ததாக பெண்ணின் அம்மா மற்றும் அக்காவிடம் பேசி பார்க்கலாம் என்று முயற்சி செய்து பார்த்தோம். அவர்களுக்கு சொல்ல ஏதோ ஒன்று இருக்கிறது ஆனால் சொல்லவில்லை. அந்த பெண் கஷ்டப்பட்டு இருந்திருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது. அந்த அம்மாவிற்கு மட்டும் மனசு கேட்கவில்லை. எனக்கு பின்னர் போன் செய்து பேசிவிட்டார். 

நாங்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தோம். இப்போது வெளியில் சென்று தனித்து வாழ நன்றாகத்தான் இருக்கும். ஆனால் நீண்ட நாட்களுக்கு வசதி இல்லாமல் வாழ முடியாது வந்துவிடு அவர் எதுவும் சொல்லமாட்டார் என்றோம் மேடம் கேட்கவில்லை என்றார். அந்த பெண்ணிற்கு கணவர் தனி கார் கூட வாங்கிக் கொடுத்து வசதியாக வைத்திருந்திருக்கிறார். அவர்கள் அந்த பெண்ணிடம் பேசியதை வைத்து ஓரளவு இடத்தை கணித்துவிட்டனர். சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சொந்தக்காரர் வீட்டில் தான் இருக்கிறாள் என்று. அந்த அம்மாவும் என்ன நடந்தது என்று சொல்ல ஆரம்பிக்கிறார். அந்த கணவருக்கு ஏற்கெனவே ஒரு திருமணம் ஆகி மன ஒற்றுமை இல்லாமல் பிரிந்து விட்டபின் தான், இந்த பெண்ணை  வசதி குறைவாக இருந்தாலும் திருமணம் செய்திருக்கிறார். பெண்ணின் வீட்டிலும் செலவு கம்மிதானே என்று பெண்ணிடம் நிறைய சொல்லி குடும்ப சூழலை எடுத்துச் சொல்லி கட்டிக் கொடுத்துவிட்டனர். ஆனால் இவளுக்கு போகப் போக ஏமாற்றமாகவும், பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. அம்மா வீட்டிற்கு அனுப்பாமல் வைத்திருப்பது. ஏதோ விசேஷம் என்று அழைத்து வந்தாலும் அவரும் கூடவே வந்து கையோடு அழைத்துச் சென்று விடுவார் என்றார். பெண்ணை எப்படியாவது கூட்டி வந்துவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார் அந்த அம்மா.

சரி என்று அந்த சொந்தக்காரர் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை அழைத்து வந்து இருவரையும் கூடி அமர்த்தி பேசி அனுப்பி வைத்தோம். அந்த பெண்ணும் அவருடன் சென்றுவிட்டது. ஆனால் சிறிது நாட்களிலேயே மீண்டும் அந்த கணவர் என்னிடம் வந்து, என் மனைவி என் பெரிய பெண்ணை கூட்டிச் சென்றுவிட்டாள் என்றார். நான் வழக்கமாக அழைக்க செல்லும் நேரத்திற்கு சற்று நேரம் முன்பே போய் கூட்டி போய்விட்டாள் என்றார். ஏற்கனவே தெரிந்த இடங்கள் தேடிய அனுபவத்தை வைத்து எப்படியோ மீண்டும் அவர் மனைவியை அழைக்க செல்வதற்குள், அந்த பெண் போலீஸ் ஸ்டேஷன் போய்விட்டார். எல்லாரும் அங்கு செல்ல அந்த பெண், நான் இவரோடு செல்லமாட்டேன் கொடுமைப்படுத்துகிறார். இவரோடு வாழ பிடிக்கவில்லை என்று பிடிவாதமாக சொன்னாள். என்னுடைய பெண்ணிற்கு நான் இவ்வளவு வசதி செய்து வைத்திருந்தேன். அதற்கு ஈடாக இவளால் செய்ய முடியுமா? முடியும் என்றால் அம்மாவுடன் இருந்து கொள்ளட்டும் என்று அவர் கணவர் கேட்கிறார்.

பெரிய பெண் அம்மாவிடம் இருக்கிறேன் என்று சட்டென்று கூற, சின்ன பெண் அப்பாவிடம் இருக்கிறேன் என்று சொல்லி விட்டது. இப்படி பேசி ஸ்டேஷனில் பிரிந்து போய்விட்டார்கள் அத்துடன் பேச்சு முடிந்தது. விவாகரத்து எதுவும் வாங்கவில்லை. ஆனால் சற்று நாள் கழித்து அவர் போன் செய்து, அந்த பெண் தன்னுடனே வந்து விட்டது எனவும், ஆனால் அவள் இங்கு தெரிந்த ஊரில் வாழ வெட்கப்படுவதால், நாங்கள் எல்லாரும் வேறு ஊருக்கு இடம் மாறுகிறோம் என்றார். நன்றாக வாழ்ந்தால் சரி என்றேன். 

இதன் வழியாக தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்,  குடும்பச் சூழலை காட்டி பெண்ணை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தால், இந்த நிலைமை தான் வரும். ஆனால் இது கண்டிப்பாக பிள்ளைகளின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பெண்ணும் இரண்டு டிகிரி படித்தும் முடிவெடுக்க முடியவில்லை. நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம் குழந்தைகளை பாதிக்கும் என்று யோசித்து முடிவெடுக்க வேண்டும்.