Skip to main content

பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்த கணவன்; மாமியாரால் மனமுடைந்த மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 73

Published on 28/08/2024 | Edited on 28/08/2024
advocate santhakumaris valakku en 73

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

வானதி என்ற பெண்ணுடைய வழக்கு இது. சென்னையைச் சேர்ந்த இவர், ஓரளவுக்கு படித்து நார்மலான வேலையில் பணிபுரிய தன்னை தகுதிப்படுத்தியுள்ளார். இந்த பெண்ணுக்கு, பெங்களூரில் இருந்து ஐடி வேலை பார்க்கும் ஒரு மாப்பிள்ளை வரன் வருகிறது. திருமணத்திற்கு முன்பு வானதியுடன் பேச விருப்பப்பட்ட மாப்பிள்ளையிடம் பெண் வீட்டார் அதற்கு அனுமதி மறுக்கின்றனர். இதனால், அந்த பையன் கோபித்துக்கொண்டு போய்விட, இருப்பினும் வானதிக்கு பையனை பிடித்திருக்கிறது. அதனால், வானதி தன் வீட்டில் பேசியவுடன், இருவரும் பேச பெண் வீட்டார் அனுமதித்தனர். பேசியதில் இருவருக்கும் ஒருவருக்கொருவரை பிடித்துப்போகிறது. நல்ல பையன் நமக்கு கிடைத்துவிட்டான் என்ற சந்தோஷம் வானதிக்கு இருக்கிறது. அதன் பிறகு, இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. அதன் பின் தான், மாமியார் அதிகம் எதிர்பார்ப்பவர் என்று வானதிக்கு தெரிகிறது. இருந்தாலும், வானதிக்கு கிட்டத்தட்ட 80 பவுன் நகை, பையனுக்கு சங்கிலி என ஏறத்தாழ 90 பவுன் பக்கத்தில் நகைகளை பெண் வீட்டார் போட்டிருக்கிறார்கள். 

இருவருக்குமான திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக தான் சென்றுகொண்டிருந்தது. மாமியார் தான், அந்த வீட்டில் எல்லாமும் செய்கிறார். நாட்கள் செல்ல செல்ல, வானதி மாமியார் பெண் வீட்டாரையும் பற்றியும், வானதியின் சமையலை பற்றியும் குறைக் கூறிக்கொண்டே இருக்கிறார். இன்னும் அதிகமான நகைகளை போட்டிருக்கலாம் என்று சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். இதற்கிடையில், சிஷேரியன் மூலம் வானதிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. தனது பையனால் தான் வானதிக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று ஹாஸ்பிட்டலில் வந்து மாமியார் குறைக்கூறிக்கொண்டே இருக்கிறார். இதனால், சிஷேரியனால் பிறந்ததால் அதிகம் வலிக்கொண்ட வானதிக்கும், அவரது அப்பா அம்மாவுக்கும் வருத்தம் வருகிறது. இது தவறு என பையன் தன் அம்மாவிடம் சொன்னாலும், அவர் பையனிடம் கோபித்துக்கொண்டு வாக்குவாதம் செய்கிறார். சில மாதங்கள் கழித்து வானதியும், பையனும் குழந்தையோடு பெங்களூருக்கு சென்றுவிட்டனர்.

இதற்கிடையில், தனது மகனை மருமகள் மயக்கி வைத்திருக்கிறாள் என்று எண்ணம் மாமியாருக்கு வந்துவிடுகிறது. இத்தனை நாள் நம்மை எதிர்த்து பேசாத மகன், மனைவிக்காக தன்னை எதிர்த்து பேசிவிட்டான் என்று கோபம் மாமியாருக்கு அதிகம் இருந்திருக்கிறது. இதனால் மருமகளை பற்றி மகனிடம் தப்பு தப்பாக குறை கூறுகிறார். இதற்கிடையில், இவர்கள் அனைவரும் பெரிய வீட்டிற்கு மாற்றம் செய்கிறார்கள். அங்கு சென்றாலும், மனைவியிடம் நெருங்க விடாமல், மகனிடம் அவரது அம்மா பேசிக்கொண்டே இருக்கிறார். இதற்கிடையில், ஒரு பிராஜக்ட் விஷயமாக அமெரிக்கா சென்று 6 மாதம் கழித்து மீண்டும் இந்தியா வருகிறான் பையன். இதையடுத்து, வானதிக்கு இரண்டாவது குழந்தை உருவாகி விடுகிறது. ஆனால், அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது மாமியாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. குழந்தை பிரசவத்திற்கு தன் வீட்டிற்கு செல்ல வானதி ஆசைப்பட்டாலும் அதற்கு மாமியார் சம்மதிக்க மறுக்கிறார். பெண் வீட்டார், மாமியாரிடம் கெஞ்சிய பின்பு, அதற்கு சம்மதித்த பின் வானதி தன் வீட்டுக்கு செல்கிறார். இதற்கிடையில், வீடு வாங்குவதற்கு வானதியின் நகைகளை மாமியார் கேட்க, அதற்கு வானதி சம்மதித்தாலும், மாமியாரின் குணத்தை அறிந்த வானதியினுடைய அப்பா அதற்கு சம்மதிக்க மறுக்கிறார். அந்த வீடும், மாமியார் மாமனார் பெயரில் பையன் எழுத இருப்பதால், வானதிக்கு அச்சம் வருகிறது. இருந்தாலும், கணவன் கஷ்டப்படுகிற நேரத்தில் உதவி செய்யாமல் இருந்தால் நல்லா இருக்காது என்று எண்ணி கிட்டத்தட்ட 50 பவுன் நகைகளை கணவரிடம் கொடுத்து உதவுகிறார். இந்த அளவு பணம் பத்தாததால், பையனும், மாமியார், பெண் வீட்டாரிடம் மேலும் 25 லட்ச பணத்தை  கேட்க வானதியுடைய அப்பாவும் பேங்க் மூலம் அந்த பணத்தை கொடுக்கிறார். 

இதையடுத்து, அந்த பணத்தை வைத்து வீடு வாங்குவதற்கான பத்திரம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இந்த விஷயம் முடிந்த பிறகு, வானதியை கண்டாலே மாமியாருக்கு பிடிக்காமல் போகிறது. இதற்கிடையில், பையனுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறான். அந்த பெண்ணும், மாமியாரை புகழ்ந்து பேசி தள்ளியுள்ளார். மாமியாருக்கும், அந்த பெண்ணை பிடித்து போய் அடிக்கடி தன் வீட்டுக்கு வரச் சொல்கிறார். இதையடுத்து, 1 வாரம் அந்த பெண்ணை தன் வீட்டில் தங்க வைக்கிறான் பையன். ஆனால், இதில் சந்தேகமடைந்த வானதி இதற்கு அனுமதி தர மறுக்கிறாள். இதனால் கோபமடைந்த பையன், தன்னுடைய அறையை அந்த பெண்ணுக்கு கொடுக்கிறான். இதில் இருந்து அந்த பெண்ணை வானதிக்கு பிடிக்காமல் போகிறது. ஆனால், அந்த பெண் அடிக்கடி வீட்டுக்கு வந்து மாமியாருக்கு பிடித்த பொருட்களை எல்லாம் வாங்கி வந்துள்ளார். இவளை போன்ற மருமகள் நமக்கு கிடைக்கவில்லையே என்ற எண்ணம் மாமியாருக்கு வந்து, இதுபற்றி பையனிடம் சொல்கிறார். கணவருக்கும், அந்த பெண்ணுக்கு ஏதோ ஒரு உறவு இருக்கிறது என்பதை உணர்ந்து பயந்த வானதி, அந்த பெண்ணை அடிக்கடி வீட்டுக்கு வர வைக்க வேண்டாம் என்று மாமியாரிடம் சொல்ல, மாமியார் வானதியிடம் சண்டை போடுகிறாள். அந்த பெண் வீட்டுக்கு வர, தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வானதி பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவிடுகிறாள். இரவு நேரமாகியும் வானதி வீட்டுக்கு வராததால், பையனும் மாமியாருக்கு கோவிலுக்குச் சென்று அழைக்க அவள் வர மறுத்து சண்டை போடுகிறாள். அந்த பெண் இனிமேல் வீட்டுக்கு வரமாட்டாள் என்று கணவன் உத்தரவாதம் அளித்த பின், வானதி வீட்டுக்கு வருகிறாள். ஆனாலும், இந்த சம்பவம் தொடர்கிறது. 

இதனால், சில நாட்கள் கழித்து கோவில் வாசலில் குழந்தைகளுடன் வானதி உட்கார்ந்திருப்பதை அக்கம்பக்கத்தினர் கண்டு அடையாளம் கண்டதால், பையன் கோபம் கொண்டு அந்த பெண்ணை தர தரவென இழுத்து தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறான். இதையடுத்து, வானதியினுடைய அப்பா அம்மா அவளை அழைத்து சென்னையில் உள்ள தங்கள் வீட்டுக்கு வருகின்றனர். சில நாட்கள் கழித்து, பையன் வானதி வீட்டுக்கு வந்து மூத்த குழந்தையை கொடுக்க வேண்டும் என்று சத்தம் போட்டு வானதியை அடித்துவிட்டு கிளம்பிவிடுகிறான். இதனால், வானதி போலீஸ் ஸ்டேசனில் கம்ப்ளைண்ட் கொடுக்கிறாள். ஆனால், அங்கு எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால், அவளுக்கு சந்தேகம் வருகிறது. பணத்தின் மூலம் அந்த கம்ப்ளைண்டை ஒன்னும் இல்லாமல் செய்திருக்கிறார்கள் என்பதை வானதி அறிகிறாள். சில நாட்கள் கழித்து, பையன் வானதியின் வீட்டுக்கு வந்து வானதியை அடித்து உள்ளே பூட்டிவிட்டு குழந்தையை தூக்கி காரில் ஏற்றிச் சென்றிருக்கிறான்.  குழந்தையை கடத்திவிட்டான் என்று சத்தம் போட்டதால் இந்த விஷயம் அக்கம்பக்கத்தினர் அனைவருக்கும் தெரியவருகிறது. அதன் பின்பு, இந்த விஷயம் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட் கொடுக்கிறாள். போலீசார் அவர்கள் இருவர்களையும் சமாதானப்படுத்தினாலும், மாமியார் வானதியை மட்டுமே குறைக் கூறுகிறார். போலீசாரின் அறிவுரையின்படி, பொது இடத்தில் வைத்து குழந்தையை கணவனிடம் இரண்டு முறை வானதி காட்டுகிறாள். மூன்றாவது முறையாக குழந்தைகளை காட்டும்போது வானதியை பையன் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறான். 

அதன்பின்பு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு வானதி என்னை பார்த்து விஷயத்தை சொன்னார். கணவருடன் வாழ விருப்பமில்லை என்று வானதி முடிவாக இருந்ததால், குடும்ப நீதிமன்றத்தில் டைவர்ஸ் கேஸ் போட்டோம். குழந்தைகள் தங்களுடன் இருக்க வேண்டும் என்று பையன் கேஸ் போட, 5 வயது வரை பொது இடத்தில் வைத்து குழந்தைகளை கணவரிடம் காண்பிக்கலாம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதற்கு வானதி மறுத்ததால், குடும்ப நீதிமன்றத்திலேயே குழந்தைகளை பார்க்கலாம் என்று உத்தரவிட்டது. அதன் பின்பு, நகை, பணம் ஆகியவற்றை திரும்ப கொடுக்க பெட்டிசன் போட்டோம். அந்த பொருட்களை திருப்பி வாங்கியும், குழந்தைகளுக்கு தலா 10 லட்ச பணம் வைப்பு நிதியாக வாங்கிய பிறகும் மியூட்ச்சுவல் கன்செண்டில் இருவருக்கும் விவகாரத்து ஆனது.