Skip to main content

காணாமல் போன பிரபல செய்தி வாசிப்பாளர்; மகளுக்காக காத்திருந்த தந்தையின் உடல் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம் :64  

Published on 22/08/2024 | Edited on 22/08/2024
thilagavathi ips rtd thadayam 64

காணாமல் போன பிரபல செய்தி வாசிப்பாளர் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் குஷ்குண்டா பகுதிக்காக தொலைக்காட்சி இயங்கி வருகிறது. அந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக சல்மா சுல்தானா என்ற பெண் ஒருவர் இருக்கிறார். ஊரறிந்த பேரழியாக இருந்த அவரின் நிகழ்ச்சியைக் காண ஆவலாக மக்கள் காத்திருப்பார்கள். 10ஆம் வகுப்பு வரை படித்த சல்மா சுல்தானா, தொலைக்காட்சியில் வேலை பார்ப்பது தான் ஆர்வமாக இருக்கிறது என அவரின் பெற்றோரிடம் சொல்ல, அவர்களுக்கு தொலைக்காட்சி நிறுவனத்தில் சல்மா சுல்தானா பணிபுரிய அனுமதிக்கின்றனர். அதன் பேரில், அனுபவத்தை கற்றுக்கொள்ள உள்ளூரில் உள்ள சிறிய தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்கு சேருகிறார். அங்கு சேர்ந்த அவருக்கு அந்த நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு துறையிலும் பயிற்சி வழங்குகிறார்கள். அதன் பிறகு அவரை அந்நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக நியமிக்கிறார்கள். அதன் பின்னர், ஊர் திருவிழா, இசை நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் சல்மா. எந்த நிகழ்ச்சியையும், சல்மா சிறப்பாக தொகுத்து வழங்குவார் என்ற பெயர் அம்மாவட்டத்தில் சல்மாவுக்கு கிடைக்கிறது. ஒரு ஸ்டாராக வலம் வருகிறார். 

இப்படியே நாட்கள் செல்ல, கோர்பா மாவட்டத் தலைநகரில் உள்ள ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனத்தில் சல்மாவுக்கு அழைப்பு வருகிறது. இதை பற்றி தனது பெற்றோரிடம் சொல்ல, தினமும் குஷ்முண்டா பகுதியில் இருந்து தான் கோர்பாவுக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் சல்மாவை வேலை பார்க்க அனுமதிக்கிறார்கள். அதன்படி, தினமும் காலை 6 மணிக்கு எழுந்து ரயில்வே ஸ்டேசனிலோ அல்லது பஸ் ஸ்டாண்டிற்கோ சென்று மாவட்ட தலைநகருக்கு சென்று வேலை பார்த்து மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார்.  இப்படியாக சல்மா அந்த நிறுவனத்தில் இரண்டு வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். 19 வயதான சல்மா வழக்கம்போல், கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தினமும் தொலைக்காட்சியில் தனது மகள் செய்தி வாசிக்கும் நேரத்தை தெரிந்துகொண்டு சல்மாவின் பெற்றோர் பார்த்து ரசிப்பார்கள். ஆனால், அன்று அந்த நேரத்தில் தனது மகள் செய்தி வாசிக்காமல் வேறு யாரோ ஒருவர் செய்து வாசிப்பதை சல்மாவின் பெற்றோர் பார்த்து ஆச்சரியமடைகிறார்கள்.  தொலைக்காட்சியில் மகளுக்கு வேறு வேலை இருக்கும் என்ற எண்ணிய பெற்றோர் மாலை வரை காத்திருக்கிறார்கள். ஆனால், அன்று முழுவதும் தொலைக்காட்சியில் சல்மா செய்தி வாசிக்காமல் இருந்ததையும், இரவு 9 மணி ஆகியும் வீட்டுக்கு வராததையும் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், தொலைக்காட்சி நிறுவனத்தில் போன் செய்து விசாரித்ததில், அங்கு வரவில்லை எனத் தெரிவிக்கிறார்கள். 

இதனை தொடர்ந்து, சல்மாவுக்கு நெருக்கானவர்கள் பல பேருக்கு சல்மாவின் பெற்றோர் போன் பண்ணி விசாரிக்கிறார்கள். ஆனால், யாரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. இரண்டு மூன்று நாட்கள் ஆன பிறகு, சல்மா காணாமல் போனதை மக்களிடையே பெரும் பதற்றத்தை உண்டாக்குகிறது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல, சல்மா யாருடனோ காதலித்து திருமணம் செய்துவிட்டாள், சினிமா ஆசையில் பேராசையுடன் மும்பை சென்றுவிட்டாள் என சல்மாவின் ஒழுக்கத்தை பற்றி மக்கள் தவறாக பேசுகிறார்கள். இதையெல்லாம் தெரிந்துகொண்ட சல்மாவின் பெற்றோர், சரியாக சாப்பிடாமல், தூங்காமல் நொறுங்கி போகிறார்கள். கடைசி வரை சல்மா கிடைக்கவே இல்லை. காவல்துறையும், சல்மா பணிபுரிந்த இடம், நண்பர்கள் என எல்லாவற்றுக்கு சென்று சல்மாவை பற்றி விசாரிக்கிறார்கள். எந்தவித தகவலும் கிடைக்காததால், அந்த கேஸ் அப்படியே செல்கிறது. 

இதுவரைக்கும் புகார் அளிக்காத சல்மாவின் பெற்றோர், 2019 ஜனவரி மாதத்தில் காவல் நிலையத்திற்கு சென்று கம்ப்ளைண்ட் கொடுக்கிறார்கள். அந்த கேஸை எடுத்துக்கொண்டு காவல்துறையும் சல்மாவை பற்றி விசாரிக்கிறார்கள். இதற்கிடையில், சல்மாவினுடைய தந்தை இறந்துவிடுகிறார். இதை, சல்மா வேலை பார்த்த தொலைக்காட்சி நிறுவனம், சல்மாவின் தந்தை இறந்துவிட்ட செய்தியை போட்டு அவரின் சடலத்தை உனக்காக வைத்திருக்கிறோம், உடனடியாக சேர வேண்டும் எனச் செய்தியாக போடுகிறார்கள். சல்மா இந்த செய்தியை கேட்டு வந்துவிடுவாள் என்று எண்ணி இறந்து போன சடலத்தை காத்திருக்க வைக்கிறார்கள். ஆனால், எந்தவித பயனில்லாததால், ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் சல்மாவினுடைய அப்பாவை அடக்கம் செய்கிறார்கள். எவ்வளவு தேடியும் சல்மா கிடைக்காததால், அதை கண்டுபிடிக்க முடியாத வழக்காக வைக்கப்படுகிறது. இப்படியே நான்கு வருடங்கள் செல்கிறது. 2023ஆம் ஆண்டில் கேரளாவைச் சேர்ந்த ராபின்சன் குரியா என்ற ஐபிஎஸ் ஆபிஸர் சத்தீஸ்கர், கோர்பாவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக வேலைக்கு சேருகிறார். அங்கு சேர்ந்த அவர், அம்மாவட்டத்தில், கண்டுபிடிக்க முடியாத காணாமல் போன பெண்கள் பற்றி பட்டியலிட்டு அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார். ‘ஆபரேசன் முஸ்கான்’ என்ற பெயர் வைத்து முதல் வழக்காக சல்மாவின் வழக்கை கையில் எடுக்கிறார். அதன்படி, இந்த வழக்கை விசாரித்ததில், சல்மாவுக்கு ஒரு பிரைவேட் பேங்கில் அக்கெளண்ட் இருந்திருப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த அக்கெளண்டில் இருந்து சல்மா 7 லட்சத்தை வாங்கியிருக்கிறார் என்பதையும், சல்மா மரணத்திற்கு பிறகும் யாரோ அந்த தொகையை பேங்கில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. அதன் பிறகு, சல்மாவினுடைய போனை எடுத்து யாருடன் பேசியிருக்கிறார் என்ற பட்டியலை எடுக்கிறார். இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்..