முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மனைவியின் நடவடிக்கை சந்தேகம் இருப்பதாக கூறி கணவன் கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
ஒரு பையன், தன்னுடைய மனைவியை பற்றி விசாரித்து கூறும்படி சொன்னார். அவரிடம் விசாரித்ததில், பெற்றோர் சம்மதத்தோடு விருப்பப்பட்டு தான் திருமணம் செய்து கொண்டதாகவும், மனைவியின் வாழ்க்கையில் ஏதோ ஒரு சீக்ரேட்டை மறைத்து வைத்திருப்பது போல் தோன்றுகிறதாகவும் சொன்னார். மனைவி, தனக்கு யாருமே இல்லை என்று சொல்லி தான் திருமணம் செய்து கொண்டாள். ஆரம்பத்தில் குடும்ப வாழ்க்கைக்கு ரொம்பவே கஷ்டப்பட்டார். சில மாதங்கள் கழித்து தான், குடும்ப வாழ்க்கைக்கு கொஞ்ச கொஞ்சமாக அட்ஜஸ்ட் செய்து வந்தாள். திடீரென்று, இரண்டு நாள் தன்னுடைய பிரண்ட்ஸ் வீட்டுக்கு செல்வதாக சொல்லி அங்கு செல்வாள். அதை பற்றி கேட்டாலும், வாக்குவாதம் செய்கிறாள். மனைவிக்கு ஒரு குடும்பம் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. மனைவியின் இருந்த அட்ரஸை ஆதார் கார்டு மூலம் தேடி அங்கு சென்றாலும், வாடகைக்கு இருந்ததாக தெரிந்தது எனச் சொன்னார்.
வழக்கம்போல், நாங்கள் அந்த கேஸை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை ஃபாலோவ் செய்கிறோம். இப்படியே ஃபாலோவ் செய்யும் போது ஒரு குளூவ் கிடைத்தது. இரண்டு நாள் பிரண்ட்ஸ் வீட்டுக்கு செல்வதாக சொன்ன பெண், ஒரு பெண்ணை சந்திக்கிறாள். அந்த பெண் இரண்டு வயது பெரியவள். இரண்டு பேரும், நார்மலாக பெயர் சொல்லி தான் பேசுகிறார்கள், அதன் பிறகு கிளம்பிவிடுகிறார்கள். அதன் பிறகு, இரண்டு வயது பெரிய பெண்ணை ஃபாலோவ் செய்யும் போது அவள் பிஜி ஹாஸ்டலுக்கு சென்றுவிடுகிறாள். சில நாட்கள் கழித்து இந்த பெண் ஒரு பஸ்ஸில் ஏறி செல்கிறாள். அந்த பஸ்ஸில் எங்களுக்கு புக்கிங் இல்லாததால், இந்த பெண் எங்கு செல்கிறாள் என்பதை டெஸ்டினேசன் பாயிண்ட் வரை தெரிந்துக்கொண்டோம். இந்த பெண், ஏதோ ஒரு குடும்பத்தில் இருக்கிறார் என்பது வரை கண்டுபிடித்தோம். அந்த குடும்பம் இருக்கும் இடத்தை தெரிந்துகொண்டு அந்த குடும்பத்தை மானிட்டர் செய்ய ஆரம்பித்தோம். அதை குடும்பம் என்றே சொல்ல முடியாது. ஆண்கள் இல்லாத பெண்கள் கூட்டமாக தான் இருக்கிறது. பிறந்து பெரியவனான ஆண் மட்டுமே தான் இருக்கிறானே தவிர கணவர் என்ற முறையில் அங்கு யாருமே இல்லை.
அவர்களுடைய நடவடிக்கைகள், பேச்சுகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் அவர்களுக்குள்ளே சண்டை போடுவது, வெளியில் உள்ளவர்களை இவர்களுக்கு அடிமை மாதிரியாக நடத்துவதுமாக இருக்கிறார்கள். இதோடு அவர்களை கண்காணிப்பதை நிறுத்திவிட்டு, அந்த பையனை வரவழைத்து விஷயத்தை சொன்னோம். எனது அறிவுரையின் பேரில், அந்த பையன் மனைவியை கவுன்சிலிங்கிற்காக அழைத்து வந்தார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அவள், நான் பேச பேச மெதுவாக பேசத் தொடங்கினாள். திருமணம் நடப்பதற்கு முன்பே குடும்பம் இருந்தது. அப்பா இறந்துவிட்டார். அம்மா, அவருடைய சகோதரிகள் குடும்பத்தோடு இருந்தோம் எனச் சொன்னார்.
அதன் பிறகு, என்ன பிரச்சனை என்று கேட்ட போது, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைத்து தான் வாழ்ந்தோம். படித்து, வேலைக்கு சென்று பிறகு மற்ற குடும்பங்களை பார்க்கும் போது தான் இப்படியும் வாழலாம் என்பது புரியவந்தது. வீட்டில் உள்ள பெண்களின் பேச்சால் குடும்பத்தில் உள்ள ஆண்கள் கைவிட்டு சென்றுவிட்டனர். தன்னை யாராவது பெண் பார்க்க வந்தால் குடும்பத்தின் வரலாற்றை புரிந்துகொண்டு ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறார்கள். அதனால், எனக்கும் ஒரு குடும்பம் வந்து நான் நன்றாக இருக்க வேண்டுமென்றால் என்னுடைய குடும்பத்தை மறைத்தால் தான் நடக்கும் என எனக்கு தெரிந்தது. அதனால், இப்படியொரு திருமணம் செய்து கொண்டேன். இந்த விஷயத்தை பெரியம்மா மகளுக்கு மட்டும் தெரியும். எனக்கு இப்படியொரு குடும்பம் இருக்கிறது என்பதை கணவரின் குடும்பத்திற்கு தெரிந்தால் என்னை மதிக்கவே மாட்டார்கள். அந்த குடும்பமே எனக்கு வேண்டாம். அவர்கள் இல்லாமலே நான் வாழ வேண்டும் என்று விருப்பப்படுகிறேன் என்றாள். நான் அந்த பெண்ணிடம், உனது கணவரிடம் நான் பேசிக்கொள்கிறேன். இந்த வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமென்றால், உனது குடும்பத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மறந்து வாழ முயற்சி செய் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தேன்.
அதன் பிறகு, அந்த பையனை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். அந்த குடும்பத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்று உணர்ந்து வெளியே வந்திருக்கிறாள். இந்த விஷயம் உனக்கு தெரிந்துவிட்டது என மனைவியிடம் காட்டிக்கொள்ள வேண்டாம். கணவனுக்கு தெரிந்துவிட்டது என்று நினைத்துவிட்டால், அவள் மனமுடைவாள். அந்த குடும்பத்தில் இருந்து வெளியே வரும் வரை அவளுக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என சொன்னேன். அந்த பையனும், புரிந்துகொண்டு மனைவிக்கு சப்போர்ட்டாக இருப்பேன் எனத் தெரிவித்து சென்றார்.