பல்வேறு வகையில் தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு முதல் பெண் துப்பறிவாளர் மாலதி பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் பெற்றோரே தன் மகனை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
நல்லபடியாக பள்ளிப்படிப்பு, கல்லூரி முடித்து வேலைக்கு போன பொறுப்பான பையன், எந்த விதமான கெட்ட பழக்கவழக்கமோ, தவறான நடத்தையோ இல்லாமல் இருந்தவன். வேலைக்கு போக ஆரம்பித்ததும் வேலை பார்க்கும் இடமும் வீடும் மிக தூரமாக இருந்ததால் வெளியே ஹாஸ்டலில் தங்கிக் கொண்டான். திருமணம் குறித்த பேச்சை எடுத்தாலே இப்போதைக்கு வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறான். அவனுடைய செயல்பாடுகளிம் மாற்றம் தெரிவதாக உணர்ந்த பெற்றோர் அவனை கண்காணிக்கச் சொல்லி நம்மிடம் வந்தார்கள்.
நாமும் ஒரு பையனைத் தானே கண்காணிக்க போகிறோம் என்று சாதாரணமாக நினைத்தால் சற்றே கடினமாகத்தான் இருந்தது. அவர் எந்த ஹாஸ்டலில் தங்கி இருந்தார் என்ற தகவல் இல்லை. ஆனால், வேலை செய்த ஐடி கம்பெனி வாசலில் போய் காத்துக்கிடப்போம், ஆயிரக்கணக்கில் வண்டி உள்ளே போகும் வரும், அதில் இவரின் வாகன எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு பின் தொடர்வோம். அதுவும் ஹெல்மெட் வேறு போட்டு இருப்பார், அவர் தானா என்ற சந்தேகத்தோடு தான் பின் தொடர்வோம். பல நாட்கள் கழித்து அவரை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதை கண்டு பிடித்தோம்.
நல்லவேளை அந்த அடுக்குமாடி குடியிருப்பு 16 வீடுகளை மட்டுமே கொண்டிருந்தது. ஆனாலும் உள்ளே போய் விசாரிக்கவில்லை, காத்திருந்தோம். ஒரு நாள் பெண் ஒருவரோடு வெளியே வந்தார், அவர்களின் நெருக்கம் கண்டிப்பாக கணவன் மனைவியாக இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த தகவலை அந்த பையனின் வீட்டிற்கு எடுத்துச் சொன்னோம், பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த பெற்றோருக்கு இரண்டு அதிர்ச்சி, ஒன்று தன்னுடைய மகன் தங்களுக்கு சொல்லாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்துகிறார் என்பதும் மற்றொன்று அந்த பெண் அவனின் சித்தி பொண்ணு அதாவது அவனுக்கு தங்கை உறவு முறை. அவளுடன் குடும்பம் நடத்துகிறார் என்பது தெரிந்து அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
குடும்ப உறவுகளில் ஒரே குல தெய்வத்தை கும்பிடுகிறவர்களில் பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பங்காளி முறை வருவார்கள். வேறு குலசாமி கும்பிடுபவர்களில் இருந்து தான் பெண் எடுப்பார்கள். ஏனெனில் அவர்கள் தான் மாமன் மச்சான் உறவு வருவார்கள் என்பார்கள். இதையெல்லாம் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கும் பட்சத்தில் உறவுகளுக்குள்ளான வித்தியாசங்கள் உணர்வார்கள். அண்ணனும் தங்கையும் திருமணம் செய்துகொள்கிற நெருடல், உறவுச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம்.