தன் தாய் மீது சந்தேகம் கொண்ட மகனின் வழக்கு குறித்தும் அதைத் துப்பறிந்த விதம் குறித்தும், முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மிடம் விவரிக்கிறார்.
திருமணமான தம்பதிகள் குறித்த வழக்குகளுக்கு மட்டும் கொஞ்சம் அதிக கால அளவை நாங்கள் எடுத்துக் கொள்வோம். இரவு நேரங்களிலும் எங்களுடைய விசாரணை நடவடிக்கைகள் தொடரும். மிடில் கிளாஸ் மக்களால் கொடுக்க முடிந்த அளவுதான் எங்களுடைய கட்டணம் இருக்கும். தன்னுடைய குடும்பத்தின் மேல் அதிக அக்கறை கொண்ட ஒரு பையனுடைய வழக்கு இது. அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அந்தப் பையன் என்னிடம் வந்து தன் தாய் குறித்து விசாரிக்க வேண்டும் என்றான்.
அவனுடைய தந்தையை அழைத்து வர வேண்டும் என்று கூறினேன். மறுநாள் தன் தந்தையுடன் அவன் வந்தான். வசதியான குடும்பம் அது. படிக்காத பெண்ணான அவனுடைய தாய், காலையில் வெளியே கிளம்பிச் சென்று மாலை வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். வீட்டுக்குத் தேவையான பொருட்களை அதிகமாக ஆர்டர் செய்து ஆட்டோவில் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரை நாம் பின்தொடர ஆரம்பித்தோம். அவர் இதற்கு முன் குடியிருந்த அவர்களின் வீடு இருந்த பகுதிக்கு தினமும் சென்றார்.
அங்கிருப்பவர்கள் இவரைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். அங்கு பலருக்கு இவர் உதவிகள் செய்தார். தவறான பழக்கம் எதுவும் அவருக்கு இல்லை என்பதை அறிந்தோம். பேச்சுத் துணைக்கு தன்னைச் சுற்றி ஆட்கள் வேண்டும் என்று நினைத்ததால் தான் அவர் தினமும் அங்கு சென்றார். பொருட்களை வாங்கி அங்கிருப்பவர்களுக்கு கொடுத்துவிட்டு பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டிற்குத் திரும்புகிறார்.
இதை நாங்கள் அந்தப் பையனிடம் சொன்னோம். தனிமை தான் அவருடைய பிரச்சனை, பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாததால் அந்த அம்மா இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை குடும்பத்தினருக்குப் புரிய வைத்தோம். அவரது மகனுக்கும் எடுத்துச் சொன்னோம். இதெல்லாமா ஒரு பிரச்சனை என நினைத்த குடும்பத்தினர் பின்பு உளவியல் ரீதியிலான அவரது மனப் போராட்டத்தை புரிந்து கொண்டனர். மற்றவர்களிடம் அவர் ஏமாறுவது குறித்து அந்தப் பெண்ணுக்கும் புரிய வைத்தோம். அந்த மகனும், தந்தையும் புரிந்து கொண்டனர். அந்தக் குடும்பம் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறது.