தான் சந்தித்த அதிர்ச்சியான ஒரு வழக்கு குறித்து நம்மிடம் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி பகிர்ந்து கொள்கிறார்.
வெளியூருக்கு தன் பெண்ணைப் படிப்பதற்காக அனுப்பிய பெற்றோர், அந்தப் பெண் குறித்து விசாரித்துச் சொல்லுமாறு நம்மிடம் வந்தனர். அந்தப் பெண் ஒருவரோடு நெருக்கமாக இருந்து வருவது தெரிந்தது. திடீரென்று ஒருநாள் அந்தப் பையன் சட்டையை எல்லாம் கழற்றிவிட்டு அந்தப் பெண்ணை ரோட்டில் இழுத்துச் செல்வதாகத் தகவல் வந்தது. நாங்கள் சென்று பார்த்தபோது காட்டுமிராண்டித்தனமாக அந்தப் பெண்ணை அவன் இழுத்துச் சென்றான். கேள்வி கேட்பவர்களை அடிக்கச் சென்றான். அவனை நான் பின் தொடர்ந்தேன். காவல்நிலையத்துக்கு ஃபோன் செய்தேன்.
மஃப்டியில் போலீசார் வந்தனர். எஸ்ஐ கேள்வி கேட்டபோது அவர் மீதும் அவன் கை வைத்தான். அவர் விட்ட அறையில் கீழே விழுந்தான். தான் அந்தப் பெண்ணைக் காதலிப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றான். போலீஸ் ஸ்டேஷனுக்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். நாங்களும் உடன் சென்றோம். அங்கு அந்தப் பெண்ணிடம் நான் பேசினேன். தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், இன்னொரு பையனோடு தான் பேசுவதும், பழகுவதும் தன் காதலனுக்குப் பிடிக்கவில்லை என்றும் அவள் கூறினாள். அதன் காரணமாகவே அவன் தன்னை அடித்து ரோட்டில் இழுத்து வந்ததாகவும் கூறினாள்.
இவ்வளவு நடந்தும் தன் காதலனோடு செல்லவே அந்தப் பெண் விரும்பினாள். அவளின் முடிவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் மீது அவளுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. நடந்த அனைத்தையும் குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் நாம் ரிப்போர்ட் கொடுத்தோம். மற்ற மாநிலங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொள்வது என்பது சவாலான காரியம் தான். அப்படியான சூழ்நிலையில் ஏற்கனவே அங்கு இருக்கும் துப்பறியும் நிறுவனங்களை நாம் அணுகுவோம். எங்களுக்கு மிகவும் சவாலாக அமைந்த இடம் பம்பாய் தான். அங்கு சென்று துப்பறிய மொழிப் பிரச்சனை, பழக்க வழக்கங்கள், உணவு ஆகியவை எங்களுக்கு சவாலாக இருந்தது. எல்லாவற்றையும் சமாளித்து தான் இந்த துறையில் இவ்வளவு வருடங்களாக நீடித்து வருகிறோம்.