தன்னிடம் வந்த வித்தியாசமான மற்றும் ஆச்சரியமான வழக்குகள் குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மிடம் விரிவாக விவரிக்கிறார்.
தங்களுடைய பெண்ணைக் காணவில்லை என்று பெற்றோர் என்னிடம் புகார் கொடுத்தனர். அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆவதற்கு இன்னும் ஒரு மாதம் மீதமிருந்தது. அந்த நேரத்தில் அந்தப் பெண் ஒருவரைக் காதலித்து வந்தாள். அதனால் அவளை எப்படியாவது கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கேட்டனர். நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். செல்போன் இல்லாத காலம் அது. சந்தேகத்துக்குரிய நபரின் வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டியிருந்தது. அப்போதுதான் அந்தப் பெண் அங்கிருந்து காரில் கிளம்பினாள். நாங்களும் காரிலேயே பின்தொடர்ந்தோம். மருதமலையை நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. காதலர்கள் தாலி கட்டுவதற்குத் தயாராகினர். ஒருவழியாக திருமணத்தைத் தடுத்து நிறுத்தினோம். போலீசார் துணையுடன் அந்தப் பெண்ணை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தோம்.
அதன் பிறகு போலீசாரின் உதவியுடன் 18 வயது நிரம்பிய பிறகு அந்தப் பெண் திருமணம் செய்துகொண்டாள். அந்தத் திருமணம் அவளுக்கு வெற்றிகரமாக அமையவில்லை. 18 வயது என்பது இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையை முடிவு செய்வதற்கான வயது அல்ல என்பது என்னுடைய கருத்து. அந்த நேரத்தில் ஏற்படும் காதல், ஈர்ப்பினால் ஏற்படுவது தான். 23 வயதில்தான் நல்லது எது கெட்டது எது என்பது தெரியும். வாழ்க்கை குறித்த தெளிவான புரிதல் இருக்கும். அப்போது எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சரியாக இருக்கும். கொலை வழக்குகள் போன்றவற்றை நாம் எடுப்பதில்லை. குடும்பம் சார்ந்த வழக்குகளைத் தான் பெரும்பாலும் நாம் எடுத்துக் கொள்கிறோம். மனைவி ஒருவர் தன்னுடைய கணவர் குறித்து என்னிடம் புகார் கொடுத்தார். கணவருக்குத் தவறான தொடர்புகள் இருக்கிறது என்று நாங்கள் கொடுத்த ரிப்போர்ட்டை அந்தப் பெண் குடும்பத்தார் முன்னிலையில் போட்டுடைத்தாள்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கணவர் நான்கைந்து பேரோடு எங்களுடைய அலுவலகத்துக்கு வந்து மிரட்டினார். அதன் பிறகு அவர் திருந்தி வாழ்ந்தார் என்பது வேறு கதை. சில வழக்குகள் குறித்து என்னுடைய குடும்பத்தாரோடு ஆலோசனை நடத்துவேன். வயது வித்தியாசமின்றி சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் காரணம். நம்முடைய வரம்புகள் எது என்பதை அறிந்துகொண்டு, நம்முடைய சமுதாயத்துக்கு ஏற்றது போல் வாழ்ந்தால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராது.