Skip to main content

நீ கல்யாணம் பண்ணப் போறது என் மனைவி; மாப்பிள்ளைக்கு வந்த அதிர்ச்சி- டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 04

Published on 22/03/2023 | Edited on 25/03/2023

 

 Detective Malathi's Investigation : 03 

 

துப்பறியும் பணி என்பது சாதாரண பணியல்ல. அதுவும் அந்தப் பணியில் ஒரு பெண் ஈடுபடுவது மிகப்பெரிய விஷயம். கடினமான சவால்களை எதிர்கொண்டு தொடர்ந்து இதில் பயணித்து வரும் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி அவர்கள் தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

வெளிநாட்டில் துப்பறிவாளர்களுக்கு இருக்கும் மரியாதை நம் நாட்டில் கிடையாது. பெரும்பாலும் குடும்பங்கள் சார்ந்த வழக்குகளே நம்மிடம் வரும். ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை உடனே மறந்துவிட வேண்டும் என்பதே எங்கள் துறையின் தாரக மந்திரம். திருமண நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு பையன் நம்மைத் தொடர்புகொண்டான். "நீ என்னுடைய மனைவியைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்" என்று எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன என்றான் அந்தப் பையன். மொபைல் அதிகம் இல்லாத காலம் அது. எனவே தொலைப்பேசியில் இந்தப் பையனுக்கு வரும் அழைப்புகளை நாம் எடுத்துப் பேசும்போது "இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது" என்றனர்.

 

விசாரித்தபோது உண்மையிலேயே அந்தப் பெண்ணுக்கு ஒருவரோடு திருமணம் பதிவாகியுள்ளது தெரிந்தது. குடியிருந்த வீட்டில், வீட்டு உரிமையாளரின் பையனுடன் இந்தப் பெண்ணுக்குத் தொடர்பு இருந்துள்ளது. எனவே இருவரும் யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். சில நாட்கள் நன்றாகவே கடந்தன. அந்தப் பெண்ணின் தந்தைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி சென்னைக்கு சென்றனர். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு அந்த உறவின் மேல் ஈடுபாடு இல்லை. அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் இந்தப் பையனுக்கு அதிர்ச்சியானது. இந்த விஷயத்தை அந்தப் பெண்ணுடைய தந்தைக்கு தயங்கித் தயங்கி சொன்னோம். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் கேட்டார். தற்போது நிச்சயம் செய்திருக்கும் கல்யாணத்தை நிறுத்துவது என்று முடிவு செய்தார். 

 

இரண்டு பக்கமும் பேசி சமாதானம் செய்தோம். தன்னுடைய தந்தைக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாக அந்தப் பெண் வருந்தினாள். ஆனால் பதிவுத் திருமணம் செய்துகொண்ட பையனோடு வாழ அவள் விரும்பவில்லை. அந்தப் பையனையும் சமாதானப்படுத்தினோம். இருவரும் பிரிந்து சென்றனர். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. நம்முடைய கலாச்சாரத்தை நாம் எப்படி காப்பாற்றப் போகிறோம் என்கிற கவலை தற்போது அதிகம் இருக்கிறது. காலம் விரைவாக மாறி வருகிறது. பெண்கள் தைரியமாக வெளியே வருவது ஒரு நல்ல மாற்றம். தவறான நோக்கத்துக்காக உளவு பார்க்க விரும்புபவர்களின் வழக்குகளை நாம் எடுத்துக் கொள்வதில்லை.