ரஃபேல் விமான பேர ஊழல்! RAFALE SCAM
ரஃபேல் என்ற பெயரைக் கேட்டாலே பிரதமர் மோடி தெறித்து ஓடினார். அது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்தார். ஆனால், குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே ராகுல் இந்த கேள்வியை விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார். பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் மோடி, உரத்த குரலில் எதையெதையோ பேசினார். ஆனால், ரஃபேல் குறித்து பேசவே இல்லை. அவர் பேச்சுக்கு எதிராக கேள்விக் கணைகள் புறப்பட்டு வந்த நேரத்தில் ஜோர்டான் நாட்டுக்கு ஜோராக பயணம் மேற்கொண்டுவிட்டார். இருந்தாலும், காங்கிரஸ் கட்சி பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தது.
முதலில் ரஃபேல் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தஸ்ஸால்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான போர் விமானத்துக்கு பெயர்தான் ரஃபேல். அந்த விமானம் குறைவான மைலேஜ்தான் தருகிறது. இரட்டை எஞ்சின் விமானம் என்று சொன்னாலும், பலமுறை இரண்டு என்ஜின்களுமே பழுதாகி விழுந்த நிகழ்வுகள் இருக்கின்றன என்று ராணுவ தளவாடங்கள் தொடர்பான ஆய்வுப் பத்திரிகைகள் எழுதியிருந்தன. இப்படிப்பட்ட ஒரு விமானத்தை வாங்கக்கூடாது என்று சு.சாமியே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர்கூட, தனக்கு பல்வேறு வகையில் ஸ்பான்ஸர் செய்யும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்காக மறைமுகமாக இப்படி எதிர்க்கிறார் என்று சொல்லி விடலாம். ஆனால், மேக் இன் இந்தியா என்று சொல்லிவிட்டு, அடுத்த நாட்டு விமானங்களை வாங்குவதற்கு உள்நோக்கம் இல்லாமலா இருக்கும் என்று பொதுவானவர்களே சந்தேகம் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்கென ஒரு எதிர்கால போர் விமானத்தை தயாரிக்க முனைந்தபோது, கூட்டிலிருந்து விலகி பிரான்ஸ் தனியாக தயாரித்ததுதான் இந்த ரஃபேல் விமானம். அதேசமயம் ஐரோப்பிய யூனியனில் இணைந்த நாடுகள் சேர்ந்து தயாரித்த, யூரோபைட்டர் என்ற விமானம் மிகவும் தரம் வாய்ந்தது என்று கூறப்பட்டது. ரஃபேல் விமானங்கள் விற்பனைக்கு தயாராகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை யாரும் சீந்தாமல் கிடந்த அந்த விமானங்கள், லிபியா போரின் போது செயல்பாட்டுக்கு வந்தன. பிரான்சுக்கு சொந்தமான மிராஜ் வகை போர் விமானங்களை அழித்து தனது பெருமையைக் காட்டிக்கொண்டது.
அதன்பிறகு, பல நாடுகளிடம் வியாபாரம் பேசிப்பார்த்தது பிரான்ஸ். ஆனால், அந்த விமானத்தின் செயல்பாட்டை குறைகூறி பிரேசில், கனடா, அல்ஜீரியா, கிரீஸ் உள்ளிட்ட பல நாடுகள் வாங்க மறுத்துவிட்டன. இந்த நிலையில்தான் தஸ்ஸால்ட் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை விற்க ஏர்பஸ் நிறுவனம் முடிவெடுத்தது. இதையடுத்து தஸ்ஸால்ட் நிறுவனத்தை மூடும் அபாயம் ஏற்பட்டது. அப்படிப்பட்ட நிறுவனத்தை காப்பாற்றத்தான் மோடி கைகொடுத்திருக்கிறார். அவருக்கு முன் எகிப்து மட்டுமே ரஃபேல் ரக விமானத்தை வாங்கியிருந்தது. இப்போது, இந்தியாவும் அந்த விமானத்தை வாங்கத் துணிந்தது. இந்த வியாபாரத்தை பிரேசிலின் ராணுவ தளவாட ஆய்வுப் பத்திரிகைகள் இந்த ஒப்பந்ததின் மதிப்பு 36 விமானங்களுக்கு 72 ஆயிரம் கோடிகள் இருக்கலாம் என்று அம்பலப்படுத்தின. இந்த விமானத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் வாங்க முடிவெடுத்து விலை பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என்று பேசப்பட்டது என்கிறார்கள். ஆனால், மோடி அரசு அந்த விமானத்தை 1,570 கோடி ரூபாய் விலைக்கு வாங்க முடிவு செய்தது ஏன் என்று காங்கிரஸ் கேட்கிறது.
இந்தச் சூழலில்தான், ரஃபேல் விமானத்தை மோடி அரசு வாங்க உத்தேசித்துள்ள விலையை ராகுல் கேட்டார். அதற்கு பதிலளித்த அன்றைய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது ஒரு ரகசிய ஒப்பந்தம் என்றும், அதனால் விலையை வெளியிடக்கூடாது என்றும் கூறினார். ஆனால், அன்றைய நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ விலையை வெளியிட்டால் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கூறினார். விமானத்தின் தொழில்நுட்பத்தை வெளியிட்டால்தான் தவறு. விலையை வெளியிடுவதில் என்ன ஆபத்து இருக்கப் போகிறது என்று சாமானியர்களே கேட்கும் அளவுக்கு நிலைமை முற்றியது. இந்த ஒப்பந்தம் முடிவாவதற்கு முன்னரே, யூரோபைட்டர் நிறுவனம் தனது விமானத்தை 20 சதவீதம் தள்ளுபடியில் விற்க முன்வந்ததை இந்தியா ஏன் ஏற்கவில்லை என்பதற்கும் காரணத்தை காங்கிரஸ் கேட்டது.
கடைசியாக, காங்கிரஸ் அரசாங்கம் இதற்கு முன் ராணுவ விமானங்களோ, தளவாடங்களோ வாங்கியபோது, விலை விபரங்களைத் தெரிவித்தது இல்லை என்றும் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். அவருக்கு பதில் அளித்த ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் அரசு வெளியிட்ட விலைப்பட்டியல் விவரத்தை இணைத்தார். அத்துடன் அருண்ஜேட்லியை பொய்யர் என்று பொருள்படும்படி அவருடைய பெயரை “ஜெட்லை” என்றும் குறிப்பிட்டார். இவற்றுக்கு இடையே வீணாகத் தூங்கிக் கொண்டிருக்கும் இந்திய விமானப்படைக்கு எந்த விமானத்தை வாங்கினாலும் ஒன்றுதான் என்று முணுமுணுக்கிறவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். இந்த ஊழல் அம்பலமானதைத் தொடர்ந்து, இதுவரை எந்த பிரதமருக்கும் இல்லாத வகையில், “எனது பிரதமர் ஒரு திருடர்” என்ற அர்த்தப்படும்படி, “மேரா பிஎம் சோர் ஹே” என்ற ஹேஸ் டேக்கில் மோடிக்கு எதிரான பதிவுகளைப் போட்டு உலக அளவில் ட்ரெண்டிங் செய்தனர்.
ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டியதை ஒப்புக்கொள்ளும்வகையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே ஒரு பேட்டியளித்தார். பிரான்சிடமிருந்து மோடி அரசு வாங்க முடிவு செய்த ரஃபேல் போர் விமானங்களைப் பராமரிக்கவும், உதிரிபாகங்களை உற்பத்தி செய்யவும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யவும், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்க ஒப்பந்தத்தில் வகைசெய்யப்பட்டிருந்தது. பிரான்ஸ் அரசு தேர்வு செய்வதற்கு வசதியாக இரண்டு நிறுவனங்களை இந்திய அரசு குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசு ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தது என்று ஹோலண்டே கூறியிருந்தார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் விமானத் தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாத, 10 நாட்களுக்கு முன் வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் அவசரமாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை மோடி அரசு பிரான்ஸுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இதைத்தான் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்க்வா ஹோலண்டே அம்பலப்படுத்தி இருந்தார்.
இதன்மூலம் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுவரை எழுப்பிய சந்தேகங்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் உண்மை என்று ஆகியிருக்கிறது. ஹோலண்டே இப்படி பேட்டி கொடுத்ததும் நிதியமைச்சர் ஜெட்லியும், ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கொந்தளித்தார்கள். காங்கிரஸ் கட்சி பாஜக அரசுக்கு எதிராக வெளிநாட்டுடன் சேர்ந்து சதி செய்கிறது என்று ஜெட்லி கூறினார். ராகுலும் ஹோலண்டேயும் கூடிப்பேசி பாஜக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள் என்று நிர்மலா சீத்தாராமன் கூறினார். பிரான்ஸுக்கே சென்று இதுதொடர்பாக போராடப் போவதாக நிர்மலா கூறினார். ஒப்பந்தம்போடும்போது அதிபராக இருந்தவர் ஹோலண்டே. அவரே, நடந்த உண்மையைச் சொல்கிறார். பொய் சொல்வதில் புகழ்பெற்ற பாஜக அமைச்சர்களோ ஹோலண்டே சொல்வதை பொய் என்றார்கள். பிரான்ஸ் நாட்டில் உண்மைக்கு மாறாக பேசியது நிரூபிக்கப்பட்டால் அவருடைய எதி்ர்காலம் என்னாகும் என்பது ஹோலண்டேவுக்கு தெரியும். அங்கு மீடியாக்கள் இந்திய மீடியாக்களைப் போல ஆளும் அரசின் காலடியில் வாலாட்டிக் கொண்டிருப்பவை அல்ல என்பது நிர்மலாவுக்கு புரியாதது அல்ல. ஹோலண்டே சொன்னது குறித்து தற்போதைய அதிபர் மேக்ரானும் மறுப்பு சொல்லவில்லை. இப்போதும் பொய்களால் பூசிமெழுகவே பாஜக அரசு முயற்சி செய்கிறது.
ஆனால், ராகுல் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. இதே ரஃபேல் போர் விமானத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் இந்திய விமானப்படைக்காக வாங்க முடிவெடுத்து விலை பேசியிருந்தது. அப்போது, ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் அரசு விலை பேசியதாகவும், அதே விமானத்தை மோடி அரசு 1,570 கோடி ரூபாய் விலைக்கு வாங்க முடிவு செய்தது ஏன் என்று ராகுல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக ராகுல் மீது உரிமைமீறல் பிரச்சனையை பாஜக கொண்டுவந்தது. அதையும் மீறி, புதிதாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு பராமரிப்பு மற்றும் உதிரிபாக உற்பத்தி உரிமையை பெற்றுக் கொடுத்தது ஏன் என்று பொதுக்கூட்டத்தில் பேசினார் ராகுல். அதைத்தொடர்ந்து 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் ராகுல் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது. இப்போது, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட அதிபரே உண்மையைச் சொல்லும்போதும், ராகுலின் கேள்விகளுக்கு பதில் சொல்வதை மோடி தவிர்க்கிறார். மோடி மவுனம் சாதித்தாலும், ராகுல், மோடியின் அனைத்து தில்லுமுல்லுகளையும் திருட்டுகளையும் அம்பலப்படுத்தி நீதியைப் பெற்றுத் தருவதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.
“ரஃபேல் ஒப்பந்தத்தில் இப்போதுதான் வேடிக்கை தொடங்கியிருக்கிறது. இனிமேல்தான் விஷயம் சுவாரஸ்யமாகப் போகிறது. விஜய் மல்லையா விவகாரம், லலித் மோடி விவகாரம், நீரவ் மோடி விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல்படுத்திய விவகாரம் என்று எல்லாவற்றிலும் மோடியின் திருட்டுகள் அம்பலமாகும். மோடி நாட்டின் பாதுகாவலர் அல்ல. கொள்ளைக்காரர் என்பதை ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவருவோம். பழுத்த அனுபவம்மிக்க இந்திய அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தைத்தான் காங்கிரஸ் அரசு பிரான்ஸ் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்த நிறுவனத்தின் மரியாதையையும், இந்திய விமானப்படை அதிகாரிகளின் மரியாதையையும் திருட முயற்சி செய்த மோடியிடமிருந்து நீதியைப் பெற்றே தீருவோம்” என்று ராகுல் உறுதியளித்தார். இதனிடையே, அலிபாபாவும் 40 திருடர்களையும் போல, மோடி பாபாவும், அவருடைய 40 அமைச்சரவை சகாக்களும் ரஃபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான கேள்விகளுக்கு எப்போது பதில் சொல்வார்கள் என்று காங்கிரஸ் கட்சியும் கேள்வி எழுப்பியது. மாய பிம்பத்தை உருவாக்கி பிரதமரான மோடி, நிஜமான ஊழல் வலைக்குள் சிக்கிவிட்டார்.
ஊழல்வாதிகளை காப்பாற்ற சட்டமியற்றிய ராஜஸ்தான் பாஜக அரசு! RAJE AIDS CORRUPTION (RAJASTHAN)
ராஜஸ்தானை ஆட்சி செய்த பாஜக முதல்வர் வசுந்தரா ரஜே வினோதமான ஒரு சட்டத்தை கொண்டுவந்தார். பாஜகவின் ஊழல் ஒழிப்பு லட்சணத்துக்கு இந்த சட்டமே சாட்சியாக அமைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, தெளிவான ஆதாரம் இருந்தாலும், பதவியில் இருக்கும் அல்லது ஓய்வுபெற்ற பொது ஊழியர்கள், கலெக்டர்கள், நீதிபதிகள் மீதான ஊழல் அதிகாரிகளுக்கு விசாரணையிலிருந்து விலக்களிக்க இந்தச் சட்டம் வகை செய்தது. ஊழல் அதிகாரிகள் தங்கள் ஊழலை மறைக்க போதுமான கால அவகாசத்தை இந்தச் சட்டம் வழங்கியது. மீடியாக்கள் ஊழல் அதிகாரிகளைப் பற்றிய விவரங்களை வெளியிட தடை விதித்தது. 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து இந்தச்சட்டதிருத்த மசோதாவை பாஜக அரசு வாபஸ் பெற்றது.
அரசு வீட்டை பாஜக எம்எல்ஏவுக்கு ஒதுக்கியதில் ஊழல்! RHB PROPERTY (RAJASTHAN)
2007 ஆம் ஆண்டு ராஜஸ்தான் எம்எல்ஏவாக இருந்த வியாஸுக்கு ஜோத்பூரில் மாநில வீட்டு வசதிவாரியத்துக்குச் சொந்தமான 33 லட்சத்துக 11 ஆயிரத்து 631 ரூபாய் மதிப்புள்ள வீட்டை 50 சதவீதம் தள்ளுபடியில் முதல்வர் வசுந்தரா ரஜே ஒதுக்கீடு செய்தார். இந்த வீடு வீட்டு வசதி வாரிய கமிஷனருக்கு ஒதுக்கப்பட்ட வீடு ஆகும். தள்ளுபடி விலையில் கொடுத்ததால் 17 லட்சத்து 51 ஆயிரத்து 3 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக லோக் அயுக்தா விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டது.