குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
ஜெனிபர் என்ற பெண் என்னுடைய ஆபிஸுக்கு வந்த பெரிய பிரச்சனையில் மாட்டியிருப்பதாகவும், தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரினார். நான், அந்தப் பெண்ணை அமரவைத்து என்ன பிரச்சனை என்று விசாரித்தேன். அதற்கு அந்தப் பெண், எனக்கு ஏற்கெனவே ஒரு பையனுடன் திருமணமாகிவிட்டது. ஆனால், என்னுடைய வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். நான் திருமணம் செய்துகொண்ட விஷயம் எனது பெற்றோருக்கு தெரியாது. ஆனால், எங்கள் ஊரில் காதல் திருமணத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கொலைக்கூட செய்வார்கள். அதனால், நான் செய்து கொண்ட ரெஜிஸ்டர் மேரஜை டைவர்ஸ் செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்கு நான், நீ திருமணம் செய்துகொண்ட ஆவணத்தை கொண்டு வா என அனுப்பி விட்டேன்.
அந்தப் பெண்ணும் சில நாட்களில் ஆவணத்தை எடுத்துக்கொண்டு அந்தப் பையனையும் அழைத்து வந்தாள். அந்தப் பையன், இந்தப் பெண்ணை விட முடியாமல் அழுதான். அந்தப் பெண்ணும் தன்னுடைய காதலை விடமுடியாமல் தவிக்கிறாள். ஆனால், தனது பெற்றோரின் குணத்தால் இந்தக் காதலை விட நினைக்கிறாள். காதலை பெற்றோர் எதிர்த்தால் அவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து வெளி மாநிலத்திற்கோ அல்லது வெளிநாடுக்கோ சென்று விடலாம். ஆனால், ஜெனிபர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் நாம் என்னதான் செய்ய முடியும்.
ஜெனிபர் வேலை செய்யும் இடத்திற்கு எதிரே உள்ள கம்பெனியில் தான் இந்தப் பாஸ்கர் வேலை செய்துள்ளார். இருவரும், தினமும் ஒரு இடத்தில் ஏறி இறங்கும் இடத்தில் சந்திக்கின்றனர். இவர்களுக்குள் பழக்கம் ஆகிறது. நாளடைவில் நட்பாகி பின்னர் காதலாக மாறுகிறது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் பாஸ்கர் கேட்ட போது, தனது ஊரில் இந்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று ஜெனிபர் கூறியிருக்கிறார். மூன்று வருட காலத்துக்கு இவர்கள் இருவரும் தெருவோரம் உள்ள பிள்ளையார் கோவிலில் வைத்து தாலி திருமணம் செய்துகொள்கிறார்கள். அதோடு மட்டும் நிற்காமல், இவர்கள் இருவரும் ஒரு இடைத்தரகர் மூலம் இருபதாயிரம் கொடுத்து ரெஜிஸ்டர் மேரஜ் செய்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் தான், ஜெனிபருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். பெண்ணும் இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றால் வேறு ஒரு மாப்பிள்ளைக்கு உடனேயே திருமணம் செய்து வைப்பார்கள் என்று கூறுகிறார்கள். அதனால், பாஸ்கருடன் என்னால் சேர்ந்து வாழ முடியாது என ஜெனிபர் கூறுகிறார். இருவருக்கும் காதல் இருக்கு, ஆனால், கல்யாணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ முடியாத சூழலும் இருக்கிறது. இப்படியான ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் இருவரும் இருக்கிறார்கள்.
நான் அவர்கள் ரெஜிஸ்டர் மேரஜ் செய்துகொண்ட ஆவணத்தை பார்த்ததில், ஜெனிபர் ஒரு கிறிஸ்துவ பெண், பாஸ்கர் ஒரு இந்து பையன். ஆனால், இவர்கள் இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் செய்திருக்கிறார்கள் என ஆவணத்தில் இருக்கிறது. இந்து சட்டத்தின் அடிப்படையில், ஒரு இந்துவுக்கும் இன்னொரு இந்துவுக்கும் தான் திருமணம் நடக்க வேண்டும். இந்தத் திருமணம் இந்து மத முறைப்படி நடக்க வேண்டும். சுயமரியாதை திருமணம் என்பது செக்சன் ஏ வில் வரும். ஆனால், இவர்கள் இந்து முறைப்படியோ, சுயமரியாதை திருமணமோ அல்லது கிறிஸ்துவ முறைப்படியோ திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அந்த ஆவணத்திலும், ரெஜிஸ்டர் ஆபிஸில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறது. அந்த இடைத்தரகர் இவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தவறாக ரெஜிஸ்டர் செய்திருக்கிறார் எனத் தெரியவந்தது. அதனால், இது செல்லாத ஒரு ரெஜிஸ்ட்ரேசன்.
குடும்ப நீதிமன்றத்தில், இந்த ரெஜிஸ்ட்ரேசன் செல்லாது என்று மனு போட்டோம். அதில் இருவரையும் அழைத்து பேசியதில் பாஸ்கர் ஜெனிபரோடு வாழ விருப்பம் என்று கூறுகிறான். ஆனால், ஜெனிபர் இந்தச் சமூகத்துக்கு பயந்து வாழ முடியாது எனக் கூறுகிறாள். மறுபடியும் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து நாங்கள் வாதாடியதில் இந்த பாயின்ட்ஸை நீதிபதி ஏற்றுக்கொண்டார். மேலும், ரெஜிஸ்டர் ஆபிஸில் ஆவணமாக பதிவு செய்யப்பட்டிருந்த டாக்குமெண்டை கேன்சல் செய்யுமாறு கோரினோம். அதன் பேரில், இந்த ரெஜிஸ்டர் மேரஜ் செல்லாது என்ற உத்தரவை வாங்கினோம். காதலர்கள் பிரிந்தாலும், இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.