Skip to main content

இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத கணவர்; புதுப்பெண்ணிற்கு அதிகரித்த சிக்கல் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 60

Published on 29/07/2024 | Edited on 29/07/2024
Advocate santhakumaris valakku en 60

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

சவிதா என்கிற தெலுங்கு பெண்ணுடைய வழக்கு இது. அவருக்கு, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கம்பம் என்ற ஊரிலிருந்து விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒரு வரன் அமைகிறது. வீட்டில் பேசும்போது பெண்ணை அறிமுகப்படுத்தி பெண்ணின் தந்தை, சவிதாவிற்கு ஒன்பது வருடம் முன்பு மூளையில் ஏற்பட்ட கட்டியினால் அறுவை சிகிச்சை செய்திருப்பதை சொல்லி விருப்பம் இருந்தால் மட்டும் திருமண ஏற்பாடு செய்யலாம் என்று உண்மையை சொல்லி விடுகிறார். பெண்ணும் இப்பொழுது நல்ல தொழில்நுட்ப துறையில் திறம்பட வேலைபார்த்து வருகிறாள் என்றார். பையனும் பெண்ணை பிடித்து இருக்கிறது, ஆனால் தனியாக பேச வேண்டும் என்று கேட்டு பேசும்போது மேலும் விவரம் கேட்டு கொள்கிறான். சவிதாவும் தான் இப்பொழுது முழுமையாக குணமாகி நன்றாக இருப்பதை சொல்கிறாள். 

பையன் வீட்டையும், சவிதாவின் தந்தை போய் பார்த்து வருகிறார். வசதி குறைவாக மிக சாதாரணமான விவசாய குடும்பமாக இருந்தது. இருந்தாலும் பிடித்து போக கல்யாணத்தில் பெண்ணிற்கு வரதட்சணையாக 150 பவுன் நகை போட்டு, ஐந்து லட்சம் பணமும் கொடுக்கிறார். கணவன் குடும்பம் கிறிஸ்துவ மதம் மேல் பிடித்தம் இருப்பதை திருமணம் பின்பு தான் பெண்ணிற்கு புரிகிறது. ஆனாலும், அதை ஏற்று கொள்கிறாள். மேலும், பையனுக்கு தாம்பத்திய உறவு கொள்ளமுடியாத பிரச்சனை வேறு இருப்பது தெரிகிறது. தன்னுடைய அப்பா மெடிக்கல் ஆபிசர் என்பதால் அவரிடம் சொல்லி தீர்வு காணலாம் என்று அழைக்கிறாள். ஆனால், பையன் இதை வெளியே சொல்லக்கூடாது என்று நினைக்கிறான். சவிதா தன் பெற்றோரிடம் இருந்தாலும் சொல்லிவிடுகிறாள். இவளது தந்தை பையனிடம் பொதுவாக என்ன பிரச்சனை என்று கேட்க அவரும் தன் வேலையை பற்றிய கவலையை பகிர மாப்பிள்ளைக்கு ஐந்து லட்சம் பண உதவி கொடுத்து மகளை பங்குதாரராக போட்டு புது கம்பெனி ஒன்றை தொடங்க சொல்கிறார்.

அதற்குப் பின்னர், மெல்ல அவரது உடல் பிரச்சனை பற்றி மகள் சொன்னதாகவும் இது சரிபண்ணக்கூடியது தான் என்று பேச ஆரம்பிக்க அவனுக்கு கோபம் வந்து விடுகிறது. கணவன் மனைவி இடையில் நடக்கும் விஷயம் இது. இதற்கு மேல் பேசவேண்டாம் என்று வந்து விடுகிறான். மனைவி அவரது தந்தையிடம் இது குறித்து சொன்னதால், மனைவியிடம் சண்டை பிடிக்கிறான். அவள் டாக்டரிடம் கூப்பிட்டாலும் கூட வருவதில்லை. குழந்தை பெற்றுக்கொள்ளவும் விருப்பம் காட்டாமல் இருக்கிறான். தன்னைப் பற்றி வெளியே சொன்னால், அவளது சிகிச்சை பற்றியும் தன் பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என்று சொல்வதைக் கேட்டு இவளுக்கு அதிர்ச்சி ஆகிறது. இதற்கிடையில் கிருஸ்துவ முறைப்படி வேறு ஒருமுறை திருமணம் செய்து வைக்கிறார்கள். பெண்ணின் பெற்றோர் இதுபற்றி வருத்தப்படுகின்றனர். மேலும் அவனது உடல் பிரச்னையைப் பற்றி மீண்டும் விசாரித்த போது முதலில் பெண்ணை கூட்டி சென்று மருத்துவரைப் பாருங்கள் அவளுக்கு தான் உடலுறவு நேரத்தில் மனம் ஒருமித்து இருக்காமல் மனநிலை தவறி விடுகிறாள் என்ற குற்றச்சாட்டை அந்தப் பையன் வைக்கிறான். பெண்ணின் தந்தை அப்படி எதுவும் இல்லை என்று கூறி பெண்ணிற்கு முழு பரிசோதனை செய்து பார்த்ததில் பெண்களுக்கு பெரும்பான்மையாக வரும் பி.சி.ஓ.டி தொந்தரவு இருப்பது தெரிய வருகிறது. 

பையன் இதை வைத்து குறை கூறி கடுமையாக பேச பெண்ணின் தந்தைக்கும் இவனுக்கும் வாக்குவாதம் ஆகிறது. சவிதா தன் கணவனுடன் வாழவே நினைத்து பையனுடன் சென்னைக்கு சென்று விடுகிறாள். ஆனாலும், இருவரும்  ஒத்துமையாக இல்லை. வீட்டிற்கு அதிகமாக வராமல், பணம் கொடுக்காமல் இருப்பது என்று இருக்கிறான். ஒரு நாள், சவிதா ஆபிசிற்கு சென்றவுடன் இங்கு ஏன் வந்தாய் என பையன் சண்டை போடுகிறான். சவிதாவும் சண்டை போடுகிறாள். இதனால், ஆபிசில் உள்ளவர்கள் முன்பு அவமானமாகிறது. அதன் பின்னர், அந்தப் பையன் வீட்டிற்கு வருவதே இல்லை. இந்த நிலையில் தான் என்னைப் பார்க்க அந்தப் பெண் வந்திருந்தார். தன் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும். அவருக்கு அந்தக் குறை இருந்தாலும் ஸ்பெர்ம் பாங்கில் மூலம் அவரது குழந்தையை நான் பெற்று கொள்ள தயாராக இருப்பதாக சொல்கிறாள். நாங்கள் சென்னை குடும்ப நீதிமன்றத்தில் சேர்ந்து வாழ மணு போட்டோம். அவர் பக்கம் வழக்கம் போல பெண்ணிற்கு மூளைக் கோளாறு என்று ஒரு வழக்கு போட்டுவிட நாங்கள் இடைக்கால மனு ஒன்று போட்டு பெண் எந்த மெடிக்கல் டெஸ்டிற்கும் தயாராக இருப்பதாக சொன்னோம். மேலும் பெண்ணிற்கு மெயின்டனன்ஸ் கேட்டு மாதம் 74,000 ருபாய் கொடுக்கும் படி கேட்டோம். கூடுதலாக பெண்ணிற்கு போட்ட 150 பவுன் நகையையும், கம்பெனிக்கு என்று குடுத்த சுமார் பத்து லட்சம் பணமும் கேட்டு பெட்டிஷன் போட்டோம். இந்த வழக்கு மூன்று வருடமாக நடந்தது. பையனின் பெற்றோர் வரவழைக்க சொல்லியும் வரவில்லை. மீடியேஷன் போட்டு பேசியும் பலனில்லை. இறுதியாக பேசி நஷ்ட ஈடாக நாற்பந்தைந்து லட்சம் பெறப்பட்டு விவாகரத்து வழங்கப்பட்டது. தற்போது அந்தப் பெண் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டு குழந்தையோடு மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.