Skip to main content

இரண்டு பேரை திருமணம் செய்த பெண்; செல்லாமல் போன பதிவுத் திருமணம் -  வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 43

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
advocate-santhakumaris-valakku-en-43

உறவுச் சிக்கலில் நடைபெறுகிற வழக்குகள் பற்றி வழக்கு எண் தொடரின் வழியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடையே விவரிக்கிறார். இருவரை திருமணம் செய்த பெண்ணைப் பற்றியும், பதிவு செய்த திருமணமே செல்லாமல் போன ஒரு வழக்கு பற்றியும் விவரிக்கிறார்.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிற இந்து மதத்தைச் சேர்ந்த வெங்கட்டும், உடன் பணியாற்றுகிற கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஜெனியும் காதலிக்கிறார்கள். திரையரங்கம், பூங்கா என்று ஊர் சுற்றுகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

திடீரென ஜெனியை சொந்த ஊருக்கு வருமாறு வீட்டிலிருந்து அழைக்கிறார்கள், ஊருக்கு போனவளை நிச்சய திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை போட்டோவை காண்பிக்கிறார்கள். சென்னையில் ஒரு பையனை காதலிக்கிற தகவலை சொல்லாமல், அலுவலகத்தில் உயர் பதவி அடைந்ததும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று பொய் சொல்லி சென்னைக்கு திரும்புகிறார்

ஊரிலிருந்து திரும்பி வந்த ஜெனி, காதலன் வெங்கட் கிட்ட தனக்கு மாப்பிள்ளை பார்த்த விசயத்தை சொன்னதும், நாம திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு இந்து கோவிலின் வெளியே நின்று தாலி கட்டி திருமணம் செய்துகொள்கிறார்கள். தமிழக அரசின் பதிவு திருமணமும் செய்து கொள்கிறார்கள். ஆனால் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்கவில்லை, ஜெனி ஹாஸ்டலில் இருக்கிறாள். வெங்கட் நண்பர்களோடு அறை எடுத்து தங்கி இருக்கிறான்.

அவ்வப்போது சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். மறுபடியும் ஜெனிக்கு ஊரிலிருந்து அழைப்பு, இந்த முறை அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அழைப்பு வந்திருக்கிறது, ஊருக்கு போனவளுக்கு அதிர்ச்சி, அங்கே சர்ச் மூலமாக மாப்பிள்ளை பார்த்து இவளுக்கு திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறார்கள், ஏற்கனவே திருமணம் ஆனதை வீட்டில் சொல்லாமல் அவளும் திருமணம் செய்து கொள்கிறாள். 

இப்போது வெங்கட் தன்னுடைய மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்று நம்மிடம் வருகிறார். திருமணமானதற்கான சான்றாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிந்த சான்றும் இருந்தது. ஆனால் அங்கேதான் சிக்கலும் இருந்தது. இந்து மாப்பிள்ளையும், கிறித்தவ பெண்ணும் திருமணத்தைப் பதிவு செய்தால் சிறப்பு திருமணப் பதிவு சட்டத்தின் கீழ் செய்ய வேண்டும். சாதாரண திருமணப் பதிவு செல்லாது, இவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணம் கொடுத்து சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அது இந்து மதத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை பெண்ணிற்கான சான்றிதழ் ஆகும்.

இந்த வழக்கு நீதிமன்றம் சென்றபோது, வெங்கட்டும் ஜெனியும் செய்த திருமணம் செல்லாது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் இரண்டாவதாக ஜெனி செய்த திருமணம் கிறித்துவ மாப்பிள்ளையை கிறித்துவ முறைப்படி கிறித்துவ தேவாலயத்தில் வைத்து செய்திருக்கிறாள். அந்த திருமணம் முறைப்படி செல்லுபடியாகும். ஜெனியும் குடும்பத்தை விட்டு பெற்றோரை விட்டு இரண்டாவதாக திருமணம் செய்த மாப்பிள்ளையை விட்டு பிரிந்து வரவில்லை. வெங்கட்டுடன் நடந்த திருமணம் செல்லாமல் போனது. 

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கிறித்துவ, முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்து பதிவு செய்ய வேண்டுமானால் ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்டின் கீழ் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யாத திருமணம் செல்லாமல் போகும்.