வரதட்சணை கொடுமை குறித்த ஒரு வழக்கை நம்மிடம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.
சுபஸ்ரீ படித்த பெண். மாப்பிள்ளை வீட்டார் நல்ல குடும்பம் என்று நினைத்து அவளுடைய பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர். வரதட்சணை எதுவுமே வேண்டாம் என்று கூறும் அளவுக்கு மாப்பிள்ளை வீட்டார் நல்லவர்களாக இருந்தனர். ஆனாலும் 101 பவுன் நகை உட்பட பல்வேறு சீர்வரிசைகளுடன் திருமணத்தை பெண் வீட்டார் நடத்தினர். நகைகளைப் பார்வையிட வேண்டும் என்று மாமனார் கேட்டதால் அவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. நகைகள் மாமியாரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டன.
மாப்பிள்ளை வீட்டில் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. திடீரென்று ஒருநாள் அவன் இந்தப் பெண்ணோடு வாழ விருப்பமில்லை என்று கூறி வீட்டை விட்டுக் கிளம்பினான். அவன் பெங்களூரில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன் பிறகு இருவரையும் தனிக்குடித்தனம் வைத்தனர். அவன் அவளை ஒரு மனுஷியாகவே மதிக்கவில்லை. அவளை வேலைக்குப் போகக்கூடாது என்று சொன்னதால் வேலைக்கும் அவள் போகவில்லை. இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்று மாமனார், மாமியார் அடுத்த பிரச்சனையைக் கிளப்பினர். ஆனால் மருத்துவ பரிசோதனையில் பிரச்சனை அவனிடம் தான் இருக்கிறது என்பது தெரிந்தது.
அனைத்தையும் அவள் சகித்துக்கொண்டு வாழ்ந்தாள். அதன் பிறகு அவனுக்கு குடிப்பழக்கமும் ஏற்பட்டது. அவளுடைய தாயோ, தந்தையோ வீட்டுக்கு வந்தால் அவர்களை அவன் மதிப்பதில்லை. அவர்கள் இனி வரக்கூடாது என்று கூறினான். அவளை எப்படியாவது வெளியே துரத்த வேண்டும் என்று நினைத்து தினமும் அவன் கலாட்டா செய்தான். அவள் மீது அவன் வன்முறையிலும் ஈடுபட்டான். ஒருமுறை அவளைக் கடுமையாகத் தாக்கிவிட்டு அவன் வெளியே கிளம்பினான். பக்கத்து வீட்டார் பார்த்து அவளுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பெற்றோர் வந்து சமாதானம் பேசினாலும் அவன் திருந்துவதாக இல்லை. சேர்ந்து வாழ வேண்டும் என்று நாங்கள் மனு போட்டோம். விவாகரத்து வேண்டும் என்று அவன் மனு போட்டான். விவாகரத்து கொடுத்தால் தான் நகைகளை திரும்பக் கொடுக்க முடியும் என்று மாப்பிள்ளை வீட்டார் கூறினர். இந்த வழக்கு கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஒரு யுத்தம் போல் நடந்தது. இறுதியாக மாப்பிள்ளை தரப்பிலிருந்து 40 லட்ச ரூபாயை இழப்பீடாகக் கொடுத்தனர். அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. அந்த பெண் இப்போது நிம்மதியாக வாழ்கிறாள்.