பெண்களைச் சுற்றி பின்னப்படும் வலைகள் ஏராளம். எந்தெந்த வகைகளில் எல்லாம் தாங்கள் ஏமாற்றப்படுவோம், அவற்றிலிருந்து எப்படி தங்களைத் தற்காத்துக் கொள்வது என்பது குறித்து சிந்திப்பதிலேயே அவர்கள் பாதி நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. அப்படியான ஒரு வழக்கு குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.
ஜெயா என்கிற பெண். கணவனை இழந்து இரண்டு குழந்தைகளோடு வாழ்பவள். அப்போது அவளுக்கு உதவ ஒருவர் முன்வந்தார். அவள் மறுத்தபோதும் அவர் வற்புறுத்தினார். திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். இவளும் சம்மதித்து திருமணம் நடைபெற்றது. இது தெரிந்தால் தன்னுடைய பெற்றோரின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும் என்றும், முதலில் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொள்வோம், பின்பு பெற்றோரிடம் சொல்வோம் என்றும் அவர் கூறினார். அவளும் சம்மதித்தாள்.
திருமணத்திற்குப் பிறகு அவன் இரவு நேரங்களில் வெளியே செல்ல ஆரம்பித்தான். விசாரித்தபோது தான் தன்னுடைய அப்பா, அம்மாவைப் பார்க்கச் செல்வதாகக் கூறினான். அவர்களிடம் விரைவில் சொல்லும்படி அவள் கூறினாலும் ஏதேனும் காரணங்கள் சொல்லிக்கொண்டே இருந்தான். திடீரென்று முழுவதுமாகக் காணாமல் போனான். அவன் வீட்டுக்கு அவள் சென்றாள். அப்போதுதான் அவனுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று இருந்தது தெரிய வந்தது.
இவள், தான் ஏமாற்றப்பட்டது குறித்து அவன் பெற்றோரிடம் கூறினாள். யாரும் நியாயம் வழங்கவில்லை. திருமணத்திற்கான அனைத்து ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு அவன் இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டாள். அங்கு சென்று புதுப்பெண்ணின் பெற்றோரிடம் முறையிட்டாள். இவள் அழுவது கண்டு மணப்பெண்ணால் தாங்க முடியவில்லை. அவனோடு இனி வாழ முடியாது என்று முடிவெடுத்தாள். மணப்பெண்ணும் அவளுடைய தந்தையும் அவன் மேல் போலீசில் புகார் கொடுத்தனர்.
எப்படி இருந்தாலும் இரண்டு தண்டனைகள் அவனுக்குக் கிடைக்கும் என்கிற நிலை இருந்தது. திருமணச் செலவு முழுவதையும் அவனிடமிருந்து பெற்றுக் கொண்டனர். தாலியைக் கழற்றி காவல் நிலையத்தில் எறிந்து விட்டுச் சென்றாள் மணப்பெண். திருமணத்தைப் பதிவு செய்ய பெண்கள் தவறக் கூடாது. திருமணத்தின் போதே பதிவு செய்ய வேண்டும் என்பதைக் கூறி உடனடியாக பதிவுத் திருமணமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பல ஏமாற்றங்களில் இருந்து அவர்கள் தப்பிக்கலாம். சட்டரீதியான பாதுகாப்பும் அவர்களுக்குக் கிடைக்கும்.