Skip to main content

தாராவி தமிழன்னாலே அசிங்கமானவனா? ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள் #1

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் தாராவி கதைகள் என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். தாராவி மக்களின் வாழ்க்கைமுறை குறித்து அவர் பகிர்ந்துகொண்ட முதல் பகுதி...

 

நான் நக்கீரனின் செய்திப்பிரிவில் கால் நூற்றாண்டு பணியாற்றிய முன்னாள் ஊழியன். அதற்கு முன்பாக பன்னிரண்டு ஆண்டுகள் மும்பை தாராவியில் வசித்தேன். வேறு இடங்களில் வசிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும்கூட அங்குதான் வாழவேண்டும் என்று முடிவெடுத்து அங்கு வசித்தேன். தாராவி தமிழன் என்றாலே அவன் குற்றவாளி; நாற்றம் பிடித்தவன் என்பது மாதிரியான எண்ணம் எங்கும் பரவியிருந்தது. அங்கு வசித்த மக்களின் வாழ்வியலைக் கதையில் சொல்லவேண்டும்... கவிதையில் சொல்லவேண்டும்... கருத்துரைகளில் சொல்லவேண்டும் என்பதற்காக அந்த வாழ்வியலை ஆழ்ந்து கவனித்தேன். அதனால் தாராவி வாழ்க்கைப் பற்றி என்னால் விரிவாகப் பேசமுடியும். 

 

தாராவி என்பது மும்பையில் பெரிய சேரி. அங்கு 5 லட்சம் மக்கள்வரை வசிக்கிறார்கள். அது தனித்தொகுதியாகிவிடக்கூடாது என்பதற்காக அருகில் உள்ள சில தொகுதிகளோடு அந்த மக்களைப் பகுதிபகுதியாகப் பிரித்து இணைத்தார்கள். தாராவி தனித்தொகுதியானால் தமிழர்கள் பெரும்பான்மைபெற்றுவிடுவார்கள் என்ற காரணத்தினால் அதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதைச் செய்யமால்விட்டார்கள். தாராவி மும்பையில் மட்டும் பெரிய சேரியல்ல; ஆசியாவிலேயே அதுதான் பெரிய சேரி. அந்தக் காலகட்டத்தில் லண்டனில் பெரிய சேரி இருந்தது. அதற்கடுத்து உலகிலேயே இரண்டாவது பெரிய சேரி என்றால் அது தாராவிதான். மும்பையின் நடுவில் அழுக்கான ஒரு சேரி இருப்பதை அங்கிருந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அங்கு தமிழர்கள் குடியேறியது 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான். அப்போது வெள்ளையர்கள் அங்கு தோல் தொழிற்சாலை நடத்திக்கொண்டிருந்தனர். அதில் வேலை செய்வதற்காக நெல்லை மற்றும் சேலம் பகுதிகளில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள்தான் அங்கு ஆரம்பத்தில் குடியேறியவர்கள். தேயிலை தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக இலங்கைக்கு எப்படித் தமிழர்களை அழைத்துச்சென்று குறைவான கூலி கொடுத்து வறுமைக்குள்ளாக்கினார்களோ அதே போன்றுதான் இங்கும் செய்தார்கள். 150க்கும் மேலான தோல் தொழிற்சாலைகள் அங்கு இருந்தன. அங்கிருந்து வரும் துர்நாற்றம் 100 மீட்டர் தொலைவிற்காவது வரும். அங்கு இருப்பவர்களுக்கு இது பழகிவிடும். ஆனால், புதிதாக அங்கு ஒருவர் செல்கிறார் என்றால் மிகவும் சிரமமாக இருக்கும். ஒரு கட்டிடத்தில் 10 பொதுக்கழிப்பறைகள் இருக்கும். அதில் சிலவற்றில் கதவும் இருக்காது. கதவு இல்லாத கழிப்பறையில் ஆபாசமாகத் தெரியக்கூடாது என்பதற்காக தண்ணீர் எடுத்துக்கொண்ட சென்ற வாளியை முன்னே வைத்துவிட்டு மலம் கழிப்பார்கள். தாராவி பற்றி நான் எழுதிய ஒரு கவிதையில், 'இடுப்பில் அரிப்பு இல்லாதவன் இங்கு உயர்சாதிக்காரன்' என்று எழுதியிருந்தேன். அத்தனை பேரும் இடுப்பில் சொறிந்துக்கொண்டுதான் இருப்பார்கள். இது அங்கிருந்த அரசு தவறு மட்டுமல்ல; நம்மளுடைய தவறும்தான். அங்கு மின்சாரப் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை என்பதெல்லாம் இருக்காது. அந்த அளவிற்கு சிறந்த வசதியை மாநகராட்சி ஏற்படுத்திக்கொடுத்திருக்கும். இருப்பினும், அந்த இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நம் ஆட்கள் நினைக்கமாட்டர்கள். கழிவறைக்கு அரசாங்கம் கதவு போட்டுக்கொடுத்தால் அதைக் கழட்டி எடுத்துச் செல்லும் செயலைச் செய்வதும் நம் ஆட்கள்தான். 

 

dharavi

 

திருமணமாகி முதல்முதலாக தாராவியில் நான் வசித்த வீடு 7க்கு 6 அளவுள்ள 42 சதுரஅடி கொண்ட சிறிய குடிசைதான். குடிசைகளும் நெருக்கநெருக்கமாக இருக்கும். நானும் என் மனைவியும் இரவில் ஏதாவது பேசிக்கொண்டு இருந்தால் மறுநாள் காலை பக்கத்து வீட்டுகார அக்கா என் மனைவியிடம் அதுபற்றி கேட்கும். என் மனைவி கிராமத்தில் வளர்ந்தவர் என்பதால் அவரால் அங்கு இருக்கவே முடியவில்லை. ஆறு மாதங்களிலேயே நான் ஊருக்குப் போகிறேன் எனக் கிளம்பிவிட்டார். ஏன் உனக்கு தாராவி பிடிக்கவில்லை என்று மனைவியிடம் கேட்டதற்கு அவர் சில காரணங்களைச் சொன்னார். அதைப் பின்னாட்களில், 'கோலமிட வாசலற்ற, பாடை கொண்டு செல்ல பாதையற்ற, விருந்தழைக்கச் சூழலற்ற, கூடி முயங்கி எழச் சூழலற்ற, வேய்ந்திருக்கும் நாட்களில் ஓய்ந்திருக்க கோடியற்ற தாராவி, நவநகரின் நடுவிருக்கும் வியர்வைப் பெருஞ்சேரி' என ஒரு கவிதையாக எழுதினேன். நான் மேற்சொன்ன அத்தனை பிரச்சனைகளும் அங்கு நிறைந்திருந்தன . யாரவது ஒருவர் இறந்துவிட்டால் அவர் வீட்டில் பிணத்தை வைக்கமுடியாது. கொஞ்சம் தள்ளி ஒரு மைதானம் போல அமைத்திருப்போம். அங்குக் கொண்டுபோய்தான் வைக்கவேண்டிய நிலை இருக்கும். அங்கிருந்து நேரடியாக சுடுகாட்டிற்கு எடுத்துக்கொண்டு சென்றுவிட முடியாது. தெருக்களும் குறுகலானதாக இருப்பதால் அந்த இடத்திலிருந்து தோளில்தான் பிணத்தை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். பிரதான சாலைக்கு வந்தபிறகுதான் ஒரு பாடையில் வைத்து சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லமுடியும். கணவன் மனைவிக்கு இடையேயான தாம்பத்யம் என்பது தெய்வீகமானதும் ரகசியமானதுமாகும். அதையே அந்த நான்கு தகரத்தினுள் தயங்கித்தயங்கித்தான் செய்யவேண்டும். பக்கத்து வீட்டில் மலம் கழித்திருந்தார்கள் என்றால் அந்த நரகல் சாக்கடையில் வரும். நம் வீட்டிற்கு முன்வந்து நின்றது என்றால் நாம்தான் தண்ணீர் ஊற்றி தள்ளிவிடவேண்டும். அந்த அளவிற்கு ஆரோக்கியக் கேடான விஷயங்கள் அங்கு நிறைந்திருந்தன.         

 

தொடரும்...