2000-ஆம் ஆண்டுகளில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகளால் கிரிக்கெட் அணிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதில் இந்திய அணியும் ஒன்று.
பல மாற்றங்களை செய்ய வேண்டிய நிலையிலும், புதிதாக அணியை கட்டமைக்க வேண்டிய சூழ்நிலையிலும் இந்திய அணிக்கு கங்குலி என்னும் தனித்துவமான லீடர் தலைமையேற்றிருந்தார். கேப்டனாக இருந்த கங்குலி அணியை வலிமைப்படுத்த பல முயற்சிகள் செய்ததில் கிடைத்த பொக்கிஷம் தான் யுவராஜ். பிக்ஸிங் காரணமாக சிதைவுற்றிருந்த இந்திய அணிக்கு சிங்கம் போல ஒரு இளம் வீரராக யுவராஜ் சிங் அறிமுகமானார்.
விக்கெட்கள் விழும்போது இக்கட்டான நிலையில் நிதானமாக விளையாடும் பேட்ஸ்மேன், ரன் ரேட் அதிகம் தேவைப்படும் நேரங்களில் அதிரடி மன்னன், பீல்டிங்கில் ரன் அவுட், டைவ் கேட்ச் பிடித்து ஆட்டத்தை மாற்றும் திறமை கொண்ட அசாத்திய பீல்டர், பார்ட்னர்ஷிப்களை பிரேக் செய்யும் பவுலர் என பல பரிணாமங்களில் செயல்படும் ஒரு வீரரை இந்திய அணிக்கு கொண்டு வந்தார் கங்குலி.
பேட்டிங்:
லார்ட்ஸ் மைதானத்தில் நாட்வேஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 326 என்ற இமாலய இலக்கை வைத்தது. பின்னர் ஆடிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கத்தை தந்தனர். 106 ரன்களில் ஒரு விக்கெட் என்ற நிலையிலிருந்து 146 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்து தடுமாறியது இந்திய அணி.
26 ஓவரில் 179 ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான நிலையில் களத்தில் யுவராஜ் மற்றும் கைஃப் ஆகிய இரு இளம் வீரர்கள் இருந்தனர். இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளின் 2-வது பேட்டிங் இந்திய நேரப்படி இரவு நேரங்களில் நடைபெறும். முக்கிய விக்கெட்கள் இழந்து கடைசியாக அனுபவமில்லாத இரு இளம் வீரர்கள் மட்டுமே விளையாடுவதால் இந்திய அணி இந்த ரன்களை அடிக்க வாய்ப்பில்லை என இந்தியாவில் மேட்ச் பார்க்காமல் உறங்க சென்றனர் பலர்.
ஆனால் அந்த 2 வீரர்களும் உலக கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரத்தை படைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறியாமல் பலர் டிவியை ஆப் செய்தனர். இந்திய அணி ஒரு சரித்திர வெற்றி படைத்ததை காலையில் எழுந்து தான் பலர் அறிந்தனர். பிளின்டாப், டேரன் காஃப், அலெக்ஸ் டியூடர் ஆஷ்லே கில்ஸ் என சிறந்த பவுலிங் யூனிட்டை வெளுத்து வாங்கியது இந்த இளம் ஜோடி. யுவராஜ், கைஃப் இருவரும் அரைசதம் அடித்து, 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்தனர். போட்டியை பார்த்துக் கொண்டிருந்த சில ரசிகர்களை ஏமாற்றாமல் இந்தியாவை வரலாற்று வெற்றி பெற வைத்தனர் இவர்கள்.
2000-ஆம் ஆண்டு ஐசிசி நாக்அவுட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் போட்டியில் பேட்டிங் செய்ய கிடைத்த வாய்ப்பில் மெக்ராத், பிரட் லீ, கில்லஸ்பி என மிரட்டும் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை அசால்ட்டாக எதிர்கொண்டு 80 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார் யுவராஜ்.
ஃபீல்டிங்:
2002-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஹர்பஜன் வீசிய பந்தை ஜாண்ட்டி ரோட்ஸ் லெக் சைடு அடித்தபோது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் யுவராஜ். அந்த கேட்ச் ஆட்டத்தை மாற்றி சுலபமாக வெற்றி பெரும் நிலையிலிருந்த தென் ஆப்பிரிக்கா அணியை தடுமாறி தோல்வியடைய வைத்தது.
பவுலிங்:
பார்ட்னர்ஷிப்பை உடைத்து விக்கெட் எடுக்க வேண்டிய நிலையில் அணி உள்ளபோது கேப்டனின் அழைப்பு யுவராஜ் சிங்கை நோக்கி இருக்கும். 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் காலிறுதி, மற்றும் அரையிறுதி போட்டிகளில் மொத்தம் 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
போராட்ட குணம்:
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் தனது வாழ்க்கையில் மீண்டு வருவதற்கு சைக்கிள் பந்தைய வீரரான ஆம்ஸ்ட்ராங் வாழ்க்கை உதவியது. 1996-ஆம் ஆண்டு லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு 7 முறை தொடர்ந்து ஐரோப்பிய அளவில் சைக்கிள் பந்தைய போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு சிகிச்சை அளித்த அதே மருத்துவ குழு யுவராஜ்க்கும் சிகிச்சை அளித்தது.
சிகிச்சைக்கு பிறகு 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். அந்த போட்டியில் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 34 ரன்கள் குவித்தார். கம்பேக்கிற்கு பிறகு 2012-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 142. 10 போட்டிகளில் 15 விக்கெட்கள். பவுலிங் சராசரி 12. எக்னாமி ரேட் 6. இப்படி மிகச்சிறப்பான ஒரு கம்பேக் கொடுத்து அசத்தினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக 2017-ஆம் ஆண்டு இந்திய அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தடுமாறிய போது தோனியுடன் யுவராஜ் பார்ட்னர்ஷிப்பில் 256 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
உலகக்கோப்பைகளின் நாயகன்:
1996-ஆம் ஆண்டு அண்டர் 15 உலகக்கோப்பை, 2000-ஆம் ஆண்டில் அண்டர் 19 உலகக்கோப்பை, 2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை என இந்திய வென்ற தொடர்களில் தொடர்நாயகன் விருதை பெற்றுள்ளார்.
புற்றுநோய்:
யுவராஜ் சிங்கின் சொந்த தொண்டு நிறுவனமான வர்ன்ரங்ஈஹய் நிறுவனம் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர்க்கு சிகிச்சை அளித்தது வருகிறது. "புற்றுநோய் மரணம் அல்ல. அதுவே முடிவும் அல்ல. பயப்பட வேண்டாம். நம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள். பாசிடிவ் எண்ணத்துடன் இருங்கள். தயவுசெய்து எந்தவொரு சூழ்நிலையிலும் உங்கள் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்.” என்று ஒரு நேர்காணலில் மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். தனது இக்கட்டான காலகட்டத்தில் மிகவும் பாசிடிவ் ஆக இருந்த இவரது புற்றுநோய் உடனான போராட்டம், ரசிகர்களுக்கு இவர் மேல் இருந்த ஈர்ப்பை அதிகப்படுத்தியது.
சச்சினுக்கு 2011 உலகக்கோப்பை, கங்குலியின் பல சாதனை வெற்றிகள், தோனியின் 2007 உலகக்கோப்பை என மூவரின் முக்கிய வெற்றிகளுக்கும் தளபதியாக இருந்தவர் யுவராஜ். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியிருக்கலாம், ஆனால் இந்திய அணிக்கு எப்போதும் யுவராஜ் சிங் மாதிரி ஒரு வீரர் கிடைக்கபோவதில்லை.