![IPL](http://image.nakkheeran.in/cdn/farfuture/6UO6UCEm_M6OdAwq2YcRh2AspwUp4wKAZpcuCC_8O_I/1598013154/sites/default/files/inline-images/ipl-final-1_3.jpg)
ஐ.பி.எல். போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் முதல்போட்டியில் இருந்தே விளையாட அனுமதிக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13 -ஆவது ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. அனைத்து அணி வீரர்களும் இந்தத் தொடருக்காக உற்சாகமாக தயாராகி வருகின்றனர். சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான் அணி வீரர்கள் ஏற்கனவே இத்தொடரில் பங்கேற்பதற்காக அமீரகம் சென்றுவிட்டனர். இந்நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் முதல்போட்டியிலிருந்து விளையாட முடியாத சூழல் நிலவி வந்தது. அதாவது, அமீரகம் வந்தடையும் வீரர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள். அதன் பின்புதான் அவர்கள் பயிற்சி எடுக்கவோ அல்லது விளையாடவோ அனுமதிக்கப் படுவார்கள் என விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரானது செப்டம்பர் மாதம் 16 -ஆம் தேதி நிறைவடைகிறது. இதனை முடித்துவிட்டு இரு அணி வீரர்களும் அமீரகம் வந்து, பின்பு தனிமைப்படுத்தி அவர்கள் விளையாடத் தயாராகும் முன் முதற்கட்ட போட்டிகள் சில முடிவடைந்துவிடும். இரு அணிகளைச் சேர்ந்த அதிரடி வீரர்கள் பலர் ஐ.பி.எல். அணிகளில் முக்கிய இடம் வகிப்பதால் அவர்கள் இல்லாத போட்டிகளில் சற்று விறுவிறுப்பு குறையலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் சஞ்சீவ் சுரிவாலா இது குறித்து கூறும் போது, "ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஏற்கனவே பாதுகாப்பான சூழலில்தான் உள்ளனர். அவர்கள் தனி விமானத்தில் அமீரகம் அழைத்து வரப்பட இருக்கின்றனர். இதனால் அங்கு அவர்களுக்கு 6 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பது தேவைப்படாது. எனவே அவர்கள் முதல் போட்டியிலிருந்தே விளையாட முடியும்" எனக் கூறியுள்ளார். இந்தத் தகவலானது கிரிக்கெட் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
பென் ஸ்டோக்ஸ், டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் உள்ளிட்ட 29 வீரர்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.