ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்தது. பாகிஸ்தான், அயர்லாந்து போன்ற அணிகளை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹேலி மற்றும் மோனி கூட்டணி 7.3 ஓவர்களுக்கு 52 ரன்களை சேர்த்த நிலையில் 25 ரன்களுக்கு ஹேலி அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லேன்னிங், மோனிக்கு கைகொடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய மோனி 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கிரேஸ் ஹாரிஸ் கேப்டன் லேன்னிங் உடன் கைகோர்த்து இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இந்த ஜோடி 6 ஓவர்களில் 53 ரன்களை சேர்த்தது. இறுதியில் ஆஸி அணி 20 ஓவர்களில் 172 ரன்களை குவித்தது.
173 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஷெபாலி வர்மா 9 ரன்களிலும் ஸ்மிருதி மந்தனா 2 ரன்களிலும் யாஸ்டிகா பாட்டியா 4 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். 3.4 ஓவர்களில் இந்திய அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. இதனைத் தொடர்ந்து கேப்டன் ஹர்மன் ப்ரீத் கர் மற்றும் ஜெமீமா ரோட்ரிக்ஸ் கூட்டு சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணி கட்டாயம் வென்று விடும் என்ற நிலை தெரிந்தது. அந்த சூழ்நிலையில், ஜெமீமா 43 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை ஆடிய ஹர்மன் 52 ரன்களில் ரன் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் தோற்றதன் மூலம் இந்திய அணி தனது இறுதி வாய்ப்பை இழந்தது. இந்திய அணியின் மோசனமான பீல்டிங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு இருந்த நல்வாய்ப்பும் ஆஸி வெற்றி பெற உதவியது. இந்திய அணி வெல்லும் என்ற நிலை வந்த போது கேப்டன் ஹர்மனின் பேட் மண்ணில் சிக்கிக் கொண்டதால் ரன் அவுட் ஆனார். ஆஸி மீண்டும் வெற்றிப்பாதைக்கு சென்றது இதுவும் ஒரு காரணம்.
அரையிறுதியில் தோற்றதன் மூலம் இம்முறையும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கனவு தகர்ந்தது. இறுதிப் போட்டியில் ஆஸி வென்றால் அந்த அணி 6 முறையாக மகளிர் உலகக் கோப்பையை பெற்ற அணியாக மாறும்.