![varun chakravarthy](http://image.nakkheeran.in/cdn/farfuture/RuZuamFYnzt1mbiu7gpL_AAEhHlsPuuNaNJM0w6jMyk/1604926438/sites/default/files/inline-images/Varun-Chakravarthy-3.jpg)
இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடரில் பங்கெடுக்கும் வீரர்கள் பட்டியல் கடந்த மாத இறுதியில் வெளியானது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இருபது ஓவர் போட்டித்தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான வருண் சக்கரவர்த்தி பெயரும் இடம் பெற்றிருந்தது.
ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி, நடப்புத் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் டெல்லி அணிக்கு எதிராக 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதும் அடங்கும். சிக்கனமாக ரன்கள் விட்டுக்கொடுத்து, முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளையும் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி, ரசிகர்களின் கவனத்தை மட்டுமின்றி, அணித் தேர்வாளர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், அவருக்குத் தற்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் வருண் சக்கரவர்த்தி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.
![cnc](http://image.nakkheeran.in/cdn/farfuture/PL81U2OEyWi4fIc51p2Q-EYuanv6bRyAM1xzG7KYrSQ/1603347336/sites/default/files/inline-images/01%20%281%29_0.png)
வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் அணியில் இடம்பெறுவார் என பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடராஜன் ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.