4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்.5 தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
இதன் இரண்டாவது ஆட்டம் நேற்று பாகிஸ்தான்-நெதர்லாந்து அணிகள் இடையே ஹைதராபாத், ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிவை எதிர்கொண்டாலும், சௌத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் தலா 68 ரன்கள் எடுத்து மீட்டனர். தொடர்ந்து, முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் ஆகியோரும் கணிசமான ரன்களை சேர்த்து இறுதிவரை அணிக்கு பங்களித்தனர். இறுதியில், 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் குவித்தது. நெதர்லாந்தின் பவுலிங்கில், பாஸ் டே லீடே 4 விக்கெட்டுகளும், கொலின் 2 விக்கெட்டுகளும், லோகன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனையடுத்து 287 ரன்கள் இலக்காக கொண்டு நெதர்லாந்து களமிறங்கியது. ஆரம்பத்திலே, மேக்ஸ் 5 ரன்களில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான விக்ரம்ஜித் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் கடந்த விக்ரம்ஜித் 52(67) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு வந்தவர்களில் பாஸ் டி லீட் 67(68) ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் அணியின் சிறப்பாக பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நெதர்லாந்து அணி வீரர்கள் தடுமாறினர். இறுதியாக நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. பாகிஸ்தான் பவுலிங்கில், ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளும், இப்திகர் அஹமது 1 விக்கெட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சவுத் ஷகீல் பெற்றார்.