ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த குவாலிபையர் ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய சென்னை அணி 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய மும்பை அணி 19 ஆவது ஓவரில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்ற இலக்கை எட்டியது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு சென்னை அணியின் பயிற்சியாளரை இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது வர்ணனையாளராக இருக்க கூடிய சஞ்சய் மஞ்சிரேக்கர் பேட்டி எடுத்தார். அவரின் இந்த பேட்டி தற்போது சர்ச்சையாகியுள்ளது.
பேட்டியின் தொடக்கத்தில், "இந்தப் போட்டியில் எல்லா முடிவுகளையும் தோனிதான் எடுக்கிறார் என மக்கள் நினைப்பார்கள். ஆனால் இவர்தான் இன்று முடிவுகளை எடுத்திருக்கிறார்" என்று பிளெமிங்கை நோக்கிக் கூறினார். சென்னையின் தோல்விக்காக பயிற்சியாளர் பிளெம்மிங்கை குறைகூறும் வகையில் அவரது தொடக்கம் அமைந்தது. இதனை கேட்ட பிளெம்மிங் சற்று முகம் சுளித்தபடி திரும்பினார்.
அதன் பின் அவர் கேட்ட கேள்விகளும் சென்னை அணியையும், அவர்களது ஆட்டத்தையும் கலாய்க்கும் வகையிலேயே அமைந்தது. இதனை கண்ட பல ரசிகர்களும் சமூகவலைதளங்களில் வர்ணனையாளராக இருக்கும் ஒருவர் மும்பை அணிக்கு மட்டும் ஆதரவாக பேசுவது முறையல்ல என பதிவிட்டு வருகின்றனர். சஞ்சய் மஞ்சிரேக்கர் ஏற்கனவே பல முறை தோனி குறித்து கருத்து கூறி அவை சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.