2014-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் முதல் இன்னிங்ஸில் 48-வது ஓவரில் இலங்கை அணியின் குலசேகரா முதல் 5 பந்துகளில் 14 ரன்களை கொடுத்திருந்தார். கடைசி பந்திற்கு 4 டீப் ஃபீல்டர்களை ஆஃப் சைடு நிறுத்தினார். ஆஃப் சைடில் பவுண்டரி அடிக்க முடியாத அளவிற்கு ஃபீல்டு செட் செய்தார். பந்தை ஆஃப் ஸ்டம்பிற்கு அகலமாக வீசினார். ஆனால் பேட்ஸ்மேன் பிளிக் செய்து லெக் சைடில் சிக்ஸர் விளாசினார். அந்த போட்டியில் 264 ரன்கள் விளாசினார் ரோகித்.
இவர் சிறப்பாக ஆடும்போது எப்படிப்பட்ட பந்தும் பவுண்டரிக்கு செல்லும். புல் ஷாட் மற்றும் கட் ஷாட்களை அடிப்பதில் வல்லவர். நடராஜா ஷாட் என அவரது ஷாட் வர்ணிக்கப்படும். 150+ வேகத்தில் வரும் பந்தையும் நடந்து வந்து எல்லைக்கோட்டிற்கு அப்பால் அனுப்புவார்.
2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் சச்சின் சாதனையை யார் முறியடிக்க முடியும் என்று சச்சினிடம் கேட்டார். அதற்கு சர்வதேச போட்டிகளில் தனது சாதனையை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரால் முறியடிக்க முடியும் என்று சச்சின் கூறியிருந்தார். 2012-ல் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில்கூட விளையாடியது கிடையாது. ஆனால் சச்சின், சர்மாவை பற்றி அன்றே துல்லியமாக கணித்திருந்தார்.
இன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சர்மா உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும், ஐ.சி.சி. ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் 2-வது இடத்திலும் உள்ளார். ரோகித்தின் இந்த வளர்ச்சியை அன்றே சச்சின் கணிக்க காரணம் சர்மாவின் அளவில்லாத திறமை.
2007-ஆம் ஆண்டே இந்திய அணிக்கு அறிமுகமானார் ரோகித். ஆனால் நிலையான பேட்டிங்கை வெளிபடுத்தாத காரணத்தால் அவ்வப்போது அணியில் இடம்பெறுவதும், அணியிலிருந்து நீக்கப்படுவதுமாகவும் இருந்தார். திறமை அதிகம் இருந்தும், அதை அதிகம் வெளிபடுத்தாத வீரராக சர்மா செயல்பட்டு வந்தார். ஒரு சாதாரண வீரராக அறியப்பட்ட சர்மாவுக்கு 2013-ஆம் ஆண்டு இரு பெரிய திருப்புமுனைகளை அளித்தது.
2013-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சர்மாவுக்கு துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. ஒருபுறம் விக்கெட்கள் சரிய, மறுபுறம் நிதானத்துடன் விளையாடி வெற்றியை உறுதி செய்தார் சர்மா.
2013-ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளின்போது பாதியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஷிப் பதவியை விட்டு விலகினார் ரிக்கி பாண்டிங். ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதல் முறையாக அந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது.
இந்த இரண்டு நிகழ்வுகளும் திறமை அதிகம் இருந்தும் சாதாரண பேட்ஸ்மேனாக மட்டுமே அறியப்பட்ட சர்மாவை உலகின் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும், சிறந்த கேப்டனாகவும் உருவெடுக்க உதவியது.
ரோகித் சர்மா இதுவரை 206 ஒருநாள் போட்டிகளில் 22 சதங்கள் உட்பட 8,010 ரன்கள் குவித்துள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். 2013-ஆம் ஆண்டு வரை 86 போட்டிகளில் 1,978 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். பேட்டிங் சராசரி 25. 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு 120 போட்டிகளுக்கு 6,032 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டங்களில் பேட்டிங் சராசரி 51.
அதிக 150+, அதிக இரட்டை சதங்கள், அதிக சிக்ஸர்கள் என சர்மாவின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே போகும். 2015-க்கு பிறகு சர்மா பங்கேற்ற 19 தொடர்களில் 15 தொடர்களில் சதம் விளாசியுள்ளார். சர்மா சராசரியாக 5 போட்டிகளுக்கு ஒரு சதம் வீதம் அடித்து வருகின்றார். இன்று உலகின் தலைசிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உருவெடுத்து உள்ளார்.
ரோகித் சர்மா கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் 50+ சராசரி கொண்டு சாதனை படைத்துள்ளார். 2014-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் 3 முறை 200 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். உலகில் முதல் முறையாக சர்வதேச டி20-யில் 4 சதம் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார் ரோகித்.
சர்மாவின் தந்தை குருநாதர் சர்மா ஒரு போக்குவரத்து நிறுவன ஸ்டோர்ஹவுஸில் பராமரிப்பாளராக பணியாற்றி வந்தார். தந்தையின் குறைந்த வருமானம் காரணமாக, மாமா வீட்டில் வளர்க்கப்பட்டார் சர்மா. வார இறுதி நாட்களில் மட்டுமே ஒரு ஒற்றை அறை வீட்டில் வசித்து வந்த பெற்றோரை காண செல்வார்.
1999-ஆம் ஆண்டு மாமாவின் உதவியுடன் ஒரு கிரிக்கெட் முகாமில் சேர்ந்தார். முகாமில் தினேஷ் லாட் பயிற்சியாளராக இருந்தார். அப்போது சர்மா பயின்ற பள்ளியில் கிரிக்கெட் வசதிகள் அதிகம் இல்லாததால், சுவாமி விவேகானந்த் சர்வதேச பள்ளிக்கு மாற்றிக்கொள்ளும்படி லாட் கேட்டுக் கொண்டார். பிறகு சர்மாவிற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆப் ஸ்பின்னராக இருந்த சர்மாவின் பேட்டிங் திறனைக் கண்டு பயிற்சியாளர் லாட் எட்டாவது இடத்தில் இறங்கிய சர்மாவை ஓப்பனிங் செய்யுமாறு கூறினார். ஹாரிஸ் மற்றும் கில்ஸ் ஷீல்டு பள்ளி கிரிக்கெட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி சதமடித்து அசத்தினார்.
ரோகித் பற்றி பிரபலங்களின் கருத்துகள்
சர்மாவின் திறமையைப் போல வேறு எந்த கிரிக்கெட் வீரரிடமும் பார்த்ததில்லை. - ஷேன் வார்னே
எதிரணியின் கேப்டன் சர்மாவாக இருந்தால் வெல்வது கடினம். – கவுதம் கம்பீர்.
சர்மா மற்ற வீரர்களை விட மிகவும் சிறப்பு வாய்ந்தவராக உள்ளார். ஒவ்வொரு பந்துக்கும் 3 முதல் 4 ஷாட்கள் வரை அடிப்பதற்கு தன்னை தயார் செய்து கொள்கிறார். - சுனில் கவாஸ்கர்
நிச்சயமாக கிரிக்கெட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வார். – கிப்ஸ்
சர்மா பேட்டிங் செய்வதை மறுமுனையிலிருந்து ரசிப்பேன். சர்மாவின் மிகப்பெரிய ரசிகன். சர்மா நிலைத்து ஆடுவதற்கு தொடங்கிய பிறகு அவுட் செய்வது கடினம். சர்மா சிறந்த கேப்டன். - விராட் கோலி
சர்மா டாப் கிளாஸ் வீரர். - இயன் பிஷப்
சர்மா ஒரு அற்புதமான கேப்டன். – மகிலா ஜெயவர்தனே
சர்மா பற்றிய சுவாரசிய தகவல்கள்
சர்மா சிலசமயம் தனது பொருட்களை ஹோட்டல் அல்லது விமானங்களில் மறந்துவிட்டு சென்றுவிடுவார். சர்மா நியாபக மறதிக்காரர்.
சர்மா தூங்குவதை அதிகம் விரும்புவார் என்று கோலி கூறியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டை சதம் அடித்தவர், ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள், பவுண்டரிகள் மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
சர்மா ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக எடுத்த 264 ரன்கள் 1983, 1987, 1992, 1996, 1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற எடுக்க வேண்டிய ரன்களை விட அதிகம்.
சர்மா 264 ரன்கள் எடுத்த போது இலங்கை அணி 251 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதுவரை நான்கு ஐபிஎல் இறுதிப்போட்டியை (2009, 2013, 2015, 2017) சந்தித்த சர்மா ஒரு முறை கூட தோல்வியடையவில்லை.
டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடியபோது மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.
2015-ஆம் ஆண்டு அர்ஜுன விருதை பெற்றுள்ளார்.
கங்குலிக்கு அடுத்தபடியாக உலகக்கோப்பை தொடரில் நாக் அவுட் போட்டியில் சதமடித்து சர்மா கலக்கியுள்ளார்.