மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (15.11.2023) நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரை சதம் கடந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு பாதியில் வெளியேறினார். 65 பந்துகளை சந்தித்த கில் 79 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
இதனையடுத்து வந்த விராட் கோலி நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த கோலி 80 ரன்கள் எடுத்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் ஏறத்தாழ 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி சதத்தை கடந்தார். இதன் மூலம் சச்சினின் மற்றொரு சாதனையான ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (49) விளாசிய வீரர் எனும் சாதனையையும் முறியடித்து 50 ஆவது சதத்தை கடந்தார்.
தொடர்ந்து ஆடிய கோலி 117 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸும் சதத்தைக் கடந்து 70 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். கடைசிக்கட்ட ராகுலின் அதிரடியான 39 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட்டுகளும், போல்ட் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கான்வேயை 13 ரன்களிலும், ரச்சினையும் 13 ரன்களிலும் முகமது ஷமி வெளியேற்றினார். பின்னர் இணைந்த கேப்டன் வில்லியம்சன், மிட்செல் இணை பொறுமையாக ஆடியது. ஒரு கட்டத்தில் இப்படியே போனால் பெரும் தலைவலி ஆகிவிடுமோ என ரசிகர்கள் பயந்தனர். பவுலர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் பயனில்லை. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த மிட்செல்லின் கேட்சை ஷமி தவறவிட பரபர்ப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், 3 ஆவது விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்த அந்த இணையை மீண்டும் ஷமியே பிரித்தார். வில்லியம்சன் 69 ரன்களில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து லாதமையும் ரன் ஏதும் எடுக்க விடாமல் வெளியேற்றினார். ஆனால் சிறப்பாக ஆடிய மிட்செல் சதமடித்தார்.
பின்னர் வந்த பிலிப்ஸ் கை கொடுக்க, ஆட்டம் மீண்டும் பரபரப்பானது. ஆனால் பும்ரா பிலிப்சை அவுட் ஆக்க ஓரளவு நிம்மதி அடைந்தனர். ஆனாலும் மிட்செல் ஒரு பக்கம் அதிரடி காட்டினார். அடுத்து வந்த சாப்மேனை குல்தீப் அவுட் ஆக்க, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மிட்செல் ரன் ரேட் அழுத்தத்தால் சிக்சர் அடிக்க முயன்று ஷமி பந்தில் 134 ரன்களில் வீழ்ந்தார். அதன் பிறகே இந்திய ரசிகர்களுக்கு நிம்மதி பிறந்தது. தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சிறப்பாக பந்து வீசிய ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது உலகக்கோப்பையில் ஒரு இந்திய வீரரின் சிறப்பான பந்து வீச்சாக அமைந்தது. மேலும் இதன் மூலம் உலகக் கோப்பைகளில் 4 முறை 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீரரானார். பும்ரா, சிராஜ், குல்தீப் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். சிறப்பாக பந்து வீசிய ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் இந்திய அணி வரும் 19 ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இந்திய அணியை எதிர்த்து விளையாடும்.
- வெ.அருண்குமார்