கடந்த 2009ஆம் ஆண்டு முதல், மகளிருக்கான டி20 உலகக்கோப்பை போட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியின் 9வது தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (03-10-24) தொடங்குகிறது. வங்க தேசத்தில் நடைபெறுவதாக இந்த போட்டி, அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாகவும், கலவரம் காரணமாகவும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இன்று தொடங்கும் இந்த போட்டி, வருகிற 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இப்போட்டியில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று இரு அணிகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெறும் இந்த போட்டியில், இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தை நாளை (04-10-24) நியூசிலாந்து அணியோடு மோதவிருக்கிறது.
லீக் சுற்றுகள் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணி, அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று முன்னேறும். முதல் அரை இறுதி ஆட்டம், அக்டோபர் 17ஆம் தேதியும், இரண்டாம் அரை இறுதி ஆட்டம், அக்டோபர் 18ஆம் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 20ஆம் தேதியும் நடைபெற உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, ஆஸ்திரேலியா அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த வகையில், இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கும் இந்திய மகளிர் அணி, சாம்பியன் பட்டத்தை வென்று தொடரைக் கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.