இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 65 ரன்களும், ராகுல் 27 ரன்களும் சேர்த்தனர். கோலி 38 ரன்களை சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் என்ற வெற்றியை இலக்குடன் விளையாட தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இருப்பினும் கேன் வில்லியம்சனின் சிறப்பான 95 ரன்களால் நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்களை எடுத்து. ஆட்டம் சமனில் முடிந்த காரணத்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
இதில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் குப்தில் களமிறங்கினர். பும்ரா வீசிய அந்த சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி 17 ரன்கள் விளாசியது. 18 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் இந்திய அணியின் ராகுல் மற்றும் ரோஹித் களமிறங்கினர். முதல் நான்கு பந்துகள் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடியை வெளிப்படுத்தியது. கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு விரட்டிய ரோஹித் சர்மா இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை மூன்று போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.