இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. அடிலெய்டில், நாளை தொடங்கும் இப்போட்டி, பிங்க் நிறப்பந்தைக் கொண்டு பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், முதுகுப் பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர், இந்தியாவிற்கெதிரான முதல் போட்டியில் ஆடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது. இதற்கிடையே டெஸ்ட் தொடர் தொடங்குவதை முன்னிட்டு, ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது இந்தியாவிற்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஆடுவாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "ஸ்டீவ் ஸ்மித ஆடுவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவருக்கு இதற்கு முன் பலமுறை முதுகுப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பயிற்சியின்போது பேட் செய்யும் அளவிற்கு நீங்களும் பேட் செய்தால், உங்களுக்கும் அந்த பிரச்சனை வரும். அவர் இந்த போட்டிக்கு நன்றாகத் தயாராகியுள்ளார். நாங்கள் கடந்த வாரம் அடிலெய்ட் வந்ததில் இருந்து, அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே, இந்த முதுகுப் பிடிப்பு பிரச்சனையால் அவருக்குக் கிடைத்துள்ள ஓய்வு ஒரு வகையில் நல்லதுதான்" எனக் கூறியுள்ளார்.