இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி நியூஸிலாந்து தொடரில் இம்ரான் கானை போல செயல்பட்டதாகவும், இந்த தொடரில் இந்திய அணியின் சிறந்த கண்டுபிடிப்பு ராகுல் எனவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார்.
நேற்று நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று நியூஸிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது. முதல் நான்கு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்ற சூழலில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிக பட்சமாக ரோஹித் சர்மா 60 ரன்கள் குவித்தார். மேலும் கே.எல். ராகுல் 45 ரன்கள் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் 33 ரன்கள் சேர்ந்தனர்.
164 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எனக்கு நினைவுபடுத்தியது. வலுவான தன்னம்பிக்கையுடன் இந்திய அணி உள்ளது. தோற்கும் நிலைமையிலிருந்தபோது வெவ்வேறு வழிகளைக் கண்டுபிடித்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெறும். தன்னம்பிக்கை வலுவாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம்." என தெரிவித்துள்ளார். மேலும், "இந்தத் தொடரின் மூலம் சிறந்த பேட்ஸ்மேன் - கீப்பராக செயல்படக்கூடிய கே.எல். ராகுலை இந்திய அணி கண்டுபிடித்துள்ளது. அவர் அபாரமாக விளையாடினார்" என தெரிவித்துள்ளார்.