இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. இதில் இளம் வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சத்தீஸ்கர் ராய்ப்பூரில் நடக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலம் பொருந்தியதாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கில் அசத்துகின்றனர். மிடில் ஆர்டரில் விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
பந்துவீச்சிலும் சிராஜ், சமி, குல்தீப் யாதவ் நல்ல நிலையில் உள்ளனர். இரண்டாவது போட்டியில் ஷர்துல் தாக்கூருக்கு பதில் உம்ரான் மாலிக் சேர்க்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்தின் பேட்டிங்கை துவக்கத்தில் தடுமாற வைத்து விரைவாக விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணி பின்னர் தடுமாறியது. இதனால் ஆட்டத்தின் இறுதியில் நியூசிலாந்து வேகமாக ரன்களை சேர்க்க, இந்திய அணி தடுமாறி வென்றது.
நாளைய போட்டியில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசினால் வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகம். நியூசிலாந்து அணியினைப் பொறுத்தவரை ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல் சிறப்பான பார்மில் உள்ளார். கடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சினை நாலாபுறமும் சிதறடித்து 57 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் ஆலென், கான்வே, மிட்செல், பிலிப்ஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சிலும் பெர்குசன், சாண்ட்னர், டிக்னர் ஆகியோர் உள்ளனர். ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்படுவதால் நாளைய போட்டியில் நியூசிலாந்து அணிக்கு பிரேஸ்வெல்லின் பங்களிப்பு மிக முக்கியமாக அமையும்.
தொடரை வெல்ல இந்திய அணியும் தொடரை தக்கவைக்க நியூசிலாந்து அணியும் கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.