இந்திய கிரிக்கெட் அணியில் தற்சமயம் அதிகம் கவனம் பெற்றிருப்பவர் கே.எல்.ராகுல். ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக ஆடியது, இங்கிலாந்துக்கு எதிரான டி20யில் சதம் என கலக்கிக் கொண்டிருக்கிறார். இளம் வீரரான கே.எல்.ராகுல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிக நம்பிக்கையைப் பெற்றிருக்கும் சூழலில், நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்,
ஃபார்ம், ஃபார்ம் அவுட் பற்றி கேட்டதற்கு, அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது. உண்மையைச் சொல்லப் போனால், ஒரு வீரர் வெறும் 20 பந்துகளைச் சந்தித்தாலே நல்ல ஃபார்மிற்கு வந்துவிடுவார். களத்தில் நீடித்து நிற்பதுதான் விஷயம். அது நடக்காமல் போவதுதான் இந்த வார்த்தைகளை உருவாக்க காரணமாகிறது. ஆட்டத்திறனும், அதிர்ஷ்டமுமே இதையெல்லாம் தீர்மானிக்கின்றன என தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பவுன்சர்கள் பந்துகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து 20 நாட்களாக பயிற்சி எடுக்க வேண்டி இருந்தது என தெரிவித்த அவரிடம், கிரிக்கெட் செலவை கணக்கு வைத்திருக்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, தனது தந்தை தனக்கு முதன்முறையாக வாங்கிக் கொடுத்த கிரிக்கெட் கிட்பேக் முதல், பக்கத்து வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்ததபோது அதை கோபமுகத்துடன் மாற்றிக் கொடுத்தது வரை பலவும் கணக்கில் இருக்கின்றன. கிரிக்கெட் விளையாடும்போது பல வீடுகளின் ஜன்னல்களை உடைத்திருக்கிறேன். கடந்த வருடம்கூட நான்கு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்திருக்கிறேன் என பதிலளித்துள்ளார்.