Skip to main content

பால் டேம்பரிங் விதிகள் புரியவே இல்லை! - குழப்பத்தில் டூ ப்ளெஸ்ஸி

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் ஐசிசி கடைபிடிக்கும் விதிகளை தெளிவுபடுத்த வேண்டும் என தென் ஆப்பிரிக்க வீரர் டூ ப்ளெஸ்ஸி தெரிவித்துள்ளார். 
 

Duplessis

 

 

 

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு ஐசிசி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தண்டனை விதித்தது. அதேபோல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில், இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு போட்டியில் கலந்துகொள்ள தடைவிதித்தது ஐசிசி. 
 

இந்நிலையில், ஐசிசி சில தினங்களுக்கு முன்னர் பந்தை சேதப்படுத்தும் குற்றத்திற்கான தண்டனையை மாற்றியமைத்தது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆறு டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படும். முன்னதாக, ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாட தடைவிதிக்கப்பட்டு வந்தது.
 

 

 

இதுகுறித்து பேசியுள்ள டூப்ளெஸ்ஸி, ‘இந்த விதிமுறை குறித்து எனக்கு இன்னமும் குழப்பமாகவே உள்ளது. அதற்கான தண்டனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை என்பதில் தெளிவில்லை. சூவிங் கம், மிண்ட் மிட்டாய்களுக்கு அனுமதி உண்டா? களத்தில் நீண்டநேரம் நிற்பதற்காக இனிப்பான பொருளை தான் மெல்லவேண்டும் என்று அம்லா என்னிடம் கோருகிறார். அவர் கேட்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்’ என தெரிவித்தார். 
 

மேலும், நீண்டகால தண்டனை என்பது தவறு செய்வதற்கு முன்னர் ஒருவரை நிறையவே சிந்திக்கவைக்கும். இதனால், தவறுகள் குறையும். இருந்தாலும், இந்த விஷயத்தில் தெளிவடைவது மட்டுமே சரியாக இருக்கும் என நினைப்பதாகவும் கூறியுள்ளார். வரும் ஜூலை 12ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்க அணி தொடரில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.