அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று அனைத்தும் முடிவடைந்த பிறகு சூப்பர் 12 சுற்று நடைபெறுகிறது.
அனைத்து அணிகளும் அரையிறுதி வாய்ப்பிற்காக போராடி வருகின்றன. இந்திய அணி தான் எதிர்கொண்ட இரு அணிகளிடமும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் பரபரப்பாக இறுதி ஓவர் வரை சென்று வெற்றி பெற்ற இந்திய அணி நெதர்லாந்து உடனான ஆட்டத்தில் சுலபமாக வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலைத் தவிர இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சிலும் அர்ஷ்தீப் சிங் அசத்துகிறார். புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி தேவையான நேரத்தில் விக்கெட்களை எடுப்பதோடு குறைவான ரன்களையே விட்டுக் கொடுக்கின்றனர். இன்றும் இதே ஆட்டம் தொடர்ந்தால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் டின் காக் மற்றும் ரூசோ நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சிலும் நூர்ட்ஜே மஹாராஜ் மற்றும் ஷாம்ஷி ஆகியோர் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் விக்கெட்களை எடுக்கின்றனர். இரு அணிகளையும் ஒப்பிட்டால் தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சில் ஒரு படி மேல் உள்ளது.
இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை கொடுக்காமல் நிலையாக ஆடினால் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். இன்று மாலை 4.30 மணிக்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.