இந்திய கிரிக்கெட் அணி, தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா, அதன்பிறகு இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் சேவாக்கிடம், ரோஹித் இங்கிலாந்தில் எப்படி விளையாட வேண்டும் என கேள்வியெழுப்பட்டது. அதற்குப் பதிலளித்த சேவாக், "சூழலை முற்றிலும் மதித்து மோசமான பந்துக்காக காத்திருக்க வேண்டும். அவர் இங்கிலாந்தில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளார். எனவே அவர் அனுபவம் வாய்ந்தவர், என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவார். ஆனால் எனது ஆலோசனை என்னவென்றால், புதிய பந்தை மதிக்க வேண்டும். பின்னர் மோசமான பந்துகள் வரும். அதற்காக அவர் காத்திருக்க வேண்டும். முதல் 5 - 10 ஓவர்களைக் கடந்த பிறகு ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவது எளிதாக இருக்கும்" என கூறியுள்ளார்.
விராட் கோலி, ஸ்விங் ஆகும் சூழலை எப்படி அணுக வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள சேவாக், "கோலி பொறுமை காட்ட வேண்டும். அவர் நிறைய பந்துகளை விட்டு ஆட வேண்டும் என நான் நினைக்கிறேன். பந்துவீச்சாளர்களை அவருக்கேற்ற லைனில் பந்து வீச செய்ய வேண்டும். அதன்பிறகு அவர் ரன் எடுக்கலாம். அவர் பொறுமையைக் காட்ட வேண்டும், அது அவருக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன்" என கூறியுள்ளார்.