ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. சூப்பர் 4 சுற்றுக்கு 4 அணிகள் தயாரான நிலையில் இன்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
அடுத்தடுத்து தோல்விகளுக்குப் பிறகு ஆசியக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி இன்றாவது வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வீரர்களைச் சரியாகத் தேர்வு செய்யவில்லை எனப் பல இந்திய முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில் இன்று அணி தேர்வில் மாற்றம் நிலவுமா என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், ஆட்டத்தை முடித்து வைப்பதற்காகவே தேர்வு செய்யப்பட்ட தினேஷ் கார்த்திக் முதல் போட்டிக்குப் பிறகு அணியில் எடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மறுபுறம் நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று இருந்தால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று சொல்லப்பட்டது. ஆனால் நேற்று பாகிஸ்தான் வெற்றி பெற்றதில் அந்த வாய்ப்பும் தடைப்பட்டுள்ளது. எனவே இன்று இந்தியா வெற்றி பெற்றாலும் ஆறுதல் வெற்றியாகவே பார்க்கப்படும்.
ஆப்கானிஸ்தான் நேற்று பாகிஸ்தானுடன் போராடித் தோற்றது. லீக் சுற்றுகளில் பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்காவை வீழ்த்தி கெத்து காட்டிய ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை போலவே தொடர்ச்சியாக இரு போட்டிகளிலும் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அது அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியை மட்டுமே கொடுக்கும். இதனால் இரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய மாற்றங்களை அல்லது சோதனை முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
இரு அணிகளும் சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று முறை மோதியுள்ளது. மூன்று முறையும் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது.