இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் இரண்டு டி20 போட்டிகள்ல் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாம் மற்றும் கடைசி டி20 போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் பவுமா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் டி காக் மற்றும் ரூசோ இணைந்து இந்திய பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரூசோ 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 100 ரன்களை குவித்தார்.
இமாலய இலக்கை எட்டிப் பிடிக்க களமிறங்கிய இந்திய அணியில் துவக்கமே அதிர்ச்சி தந்தது. கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ரபாடா பந்து வீச்சில் போல்ட் ஆனார். ஸ்ரேயாஸ் ஐயரும் வந்த வேகத்தில் நடையை கட்ட ரிஷாப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி சற்றே நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. பின் வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது.
கடைசி போட்டியில் தோல்வி அடைந்தாலும் முதல் இரு போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக சதம் அடித்த ரூசோ தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒரு நாள் தொடர் நாளை முதல் துவங்க உள்ளது.