Skip to main content

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டம்; இந்திய அணி த்ரில் வெற்றி

Published on 17/10/2022 | Edited on 18/10/2022

 

First practice match against Australia; Indian team won by three

 

8 ஆவது 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரும் 16ம் தேதி துவங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 23ம் தேதி விளையாடுகிறது.

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய மைதானங்கள் இந்திய வீரர்களில் பலருக்கு புதிது என்பதால் உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பே இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டது. அங்கு மேற்கு ஆஸ்திரேலியாவுடன் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பயிற்சி போட்டியில் அதிர்ச்சி தோல்வி கண்டது.

 

இந்நிலையில் நேற்று பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி ரன்களை வேகமாக சேர்த்தார்.  33 பந்துகளில் 57 ரன்களை எடுத்து ராகுல் வெளியேறிய பின் கைகோர்த்த விராட் மற்றும் ரோஹித் ஜோடி பொறுமையாக ரன்களை சேர்த்தது. ரோஹித் 15 ரன்களில் ஆட்டமிழக்க பின் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி இலக்கை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 186 ரன்களை எடுத்தது.

 

இதன் பின் ஆட வந்த ஆஸ்திரேலிய அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிரடியாக ஆடி 54 பந்துகளில் 76 ரன்களை குவித்தார். இருந்தும் பின் வந்த ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 

 

இறுதி ஓவரை வீசுவதற்காக ஷமி வந்தார். முதல் இரு பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த நான்கு பந்துகளிலும் ஆஸ்திரேலிய அணி விக்கெட்களை பறிகொடுத்தது. முடிவில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 180 ரன்களை மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில்  தோற்றது. 

 

கடைசி ஓவரில் ஷமி எடுத்த 3 விக்கெட்கள், ஒரு ரன் அவுட் மற்றும் 19 ஆவது ஓவரில் ஹர்ஷல் படேல் எடுத்த ஒரு விக்கெட் மற்றும் ஒரு ரன் அவுட் உட்பட கடைசி இரு ஓவர்களில் மட்டும் இந்திய அணி 6 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.